சில்லுனு ஒரு அரட்டை

போன தடவை அரட்டையின் போது மேட்டர் கொஞ்சம் சீரியசா இருக்குன்னு சொன்னாங்க. நல்லவேளை! ஜோக் ஒன்னும் எழுதலை… எழுதியிருந்தா இன்னும் சீரியசாப் போயிருக்கும்!

கொஞ்ச நாளைக்கு முன்னாலே மெரினா பீச்சை ஏதோ பதினாறு கோடி ரூபாய் செலவழிச்சு அழகு பண்ணியிருக்காங்கன்னு சொல்றாங்களே, சரி.. போய்ப் பாப்போம்னு போனேன். நிஜமாகவே ரொம்ப அழகாத்தான் பண்ணிருக்காங்க. பளபளன்னு நடைபாதை, நடுவிலே பசுமையாய்ப் புல்வெளிகள், வண்ண விளக்குகள், உட்காருவதற்கு வசதியான இடங்கள் என காற்று வாங்கிக் கொண்டு ரொம்பப் பேர் சுகமாத் தூங்கிட்டு இருந்தாங்க. ஆனா இந்த அழகைக் கெடுத்தது என்னன்னா எல்லா இடத்திலேயும் குப்பைகள், ப்ளாஸ்டிக் பேப்பர்கள், டீ குடித்து விட்டு வீசியெறிந்த கப்புகள் எல்லாம்தான். அழகு பண்ணி சரியா ஒரு மாசம் கூட ஆகலை. மக்களுக்கு இன்னும் இடத்தை சுத்தமா வச்சுக்கணும்னு தோணலையேன்னு மனசுக்குள்ள ஒரு ஆதங்கம்.

சிங்கப்பூரைப் பாரு, அமெரிக்காவைப் பாருனு சொல்றோம். சிங்கப்பூர்ல எச்சில் துப்பினா, கழிவுகளைத் தூக்கி எறிஞ்சா ஜெயில்னு பெருமையா சொல்றோம். ஆனா நமக்குள்ள ஒரு சுய கட்டுப்பாடு இல்லையே! இவ்வளவு அழகா இருக்கும் இந்த இடத்தை இப்படி அசிங்கம் செய்யலாமான்னு நினைக்கத் தோணிச்சு.

ஒரு கடலைப் பாக்கெட்டைக் கொறிச்சுட்டு பொறுப்புள்ள குடிமகனா அதைத் தூக்கிப் போட ஒரு குப்பைக் கூடையைத் தேடிப் போனேன். கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஒன்றையும் காணோம்! அத்தனை நீள கடற்கரை சாலையில் எத்தனை குப்பைக் கூடைகள் இருக்கிறதோ தெரியவில்லை. நூறடிக்கு ஒரு கூடையாவது வைத்து, அப்புறம் மக்கள் அதை உபயோகிக்கவில்லை என்றால் அவர்களைச் சொல்லலாம். ஆனால் பதினாறு கோடி ரூபாய் செலவழித்து அழகு படுத்தத் தெரிந்தவர்களுக்கு இந்த அடிப்படை வசதி கூட செய்ய வேண்டும் என்று தோன்றவில்லையே!

ஆனை வாங்கத் தெரிந்தவனுக்கு அங்குசம் வாங்க முடியாதா என்பார்கள். அதே போல்தான் கழிவறைகள். எதற்கும் நாம் மக்களைக் குறை கூறுவது சுலபம். ஆனால் தேவையான அடிப்படை வசதிகள் இருக்கிறதா என்று பார்ப்பது அரசின் கடமைதானே? பதினாறு கோடி செலவழித்தவர்கள் இன்னும் சில லட்சங்கள் செலவழித்திருக்கலாமே!

இப்போது பேப்பர்களில் மிகவும் அடிபடும் விஷயம் பி.டி. கத்தரிக்காய். அந்தக் காலத்தில் எல்லாம் முனிவர்கள் கோபத்தில் "பிடி சாபம்" என்று சொல்வார்கள். இப்போதோ "பிடி கத்தரிக்காய்" என்று சொல்கிறார்கள்!!

பி.டி பாக்டிரியாவின் மரபணுக்களை கத்தரிக்காயின் மரபணுக்களுடன் இணைக்கும்போது பூச்சிக்கொல்லி மருந்துகளின் தேவை பெரிதும் குறையும். அதனால் கத்தரிக்காய் விளைச்சலில் சேதமும் வெகுவாகக் குறைந்து விடும், உற்பத்தியும் அதிகமாகும் என்பது இதை ஆதரிப்போரின் வாதம். மரபணு மாற்றம் செய்த கத்தரிக்காயை உபயோகப்படுத்தலாமா, கூடாதா என்ற கேள்விக்கு அதற்காக அமைக்கப்பட்ட குழுவும் தனது ஆமோதிப்பைக் கூறிவிட்டது. பின்னர் ஏன் விவசாயிகளும் விஷயமறிந்தவர்களும் இதைக் கடுமையாக எதிர்க்கிறார்கள்?

இந்த மரபணு பாக்டிரியா விதைகளைத் தயாரிப்பது மேகோ என்ற நிறுவனம். பெயருக்குத்தான் இது இந்திய நிறுவனமே தவிர, இதன் பின்னால் இருப்பது அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனம். ஏற்கெனவே பி.டி பருத்தியைப் பயன்படுத்தி ஆந்திராவில் பலர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஏதோ 20 பேர் கொண்ட மரபணு மாற்றம் பற்றிய ஆராய்ச்சிக் குழு ‘சரி’ என்று சொல்வதனால், உடனே அதனை ஏற்றுக் கொள்ள முடியுமா? பெரிய அளவில் பரிசோதிக்கப் படவில்லை. மேலும் இப்போது மாற்ற வேண்டிய அவசியம் என்ன என்று பல கேள்விகள். அதோடு இப்போது 70 வித கத்தரிக்காய்கள் இருக்கின்றன. மரபணு மாற்றம் செய்யப்பட்ட பிறகு ஒரே விதக் கத்தரிக்காய்தான் இருக்கும். இன்னும் ஒவ்வொரு முறை விதைக்கும்போதும் விதைகளுக்கு பன்னாட்டு நிறுவனங்களிடம்தான் செல்ல வேண்டும். இதன் பின்னணியில் பன்னாட்டு நிறுவனங்களின் நெருக்கடியும், பணமும் விளையாடுவதாக பேசிக் கொள்கிறார்கள். அதைப் பற்றி நாம் பேசுவானேன்? அனாவசியமாய் வம்பை விலைக்கு வாங்வானேன்?

ஜனவரி 30ம் தேதி காந்தியடிகள் நினைவு தினம். எந்த ஊடகத்திலும் காந்தியைப் பற்றி ஒரு வரியாவது சொல்லுவார்கள் என்று எதிர்பார்த்ததுதான் மிச்சம். காந்தி என்ன நயன்தாரா அல்லது ஸ்ரேயா மாதிரி அவ்வளவு முக்கியமானவரா? தங்கள் வியாபாரத்திற்கு காந்தி ஒத்து வர மாட்டார் என்று விட்டுவிட்டார்கள் போலிருக்கிறது. காந்திக்குக் கூட ஸ்பான்சர் தேவையோ!!

இப்போதெல்லாம் மாதத்திற்கு மூணு தடவை ஏதாவது விசேஷம் என்று டி.விக்களில் சிறப்பு ஒளிபரப்பு. அதற்கு சில நாட்களுக்கு முன்பே ஒவ்வொரு நிகழ்ச்சியின் இடைவேளையிலும், பத்து நிமிஷத்திற்கு அது பற்றிய விளம்பரம். காரண்டியாக மூன்று அதிரடிப் படங்கள். அது குடியரசு தினமாலும் சரி (குடியரசு தின நிகழ்ச்சியைக் காணுங்கள் – குடியரசைப் போற்றுங்கள்!) பொங்கல், மாட்டுப் பொங்கலானாலும் சரி, எல்லாமே சினிமாதான். இப்போதெல்லாம் சில மாதங்களுக்குப் பதிலாக சில வாரங்களே ஆன படங்கள் தொலைக்காட்சிக்கு நம்மை இம்சிக்க வந்து விடுகின்றன.

சந்தோஷப்பட வேண்டிய விஷயம், மகளிருக்கான நிகழ்ச்சிகள் அதிகமாக வருவதுதான். பல பெண்கள் அந்தக் காலத்திலேயே இருந்திருக்கிறார்கள். நாக்கமுக்க பாட்டைப் பாடியது யாரென்றால் எஸ்.ஜி.கிட்டப்பாவும் கே.பி.சுந்தராம்பாளும் என்று சொல்லுமளவுக்கு ஞானம். கலைஞர் டிவியில் மூன்று புதிய தொடர்கள். ஒன்று லட்சுமி நடிப்பது, இன்னொன்று கவுதமி, மற்றது பாக்யராஜுடையது. பில்லி சூனியம் ஏவல் என்று வருவது மகாலட்சுமி தொடரென்றால், ஜோசியத்தைப் பற்றி வருவது பாக்கியராஜுடையது. கவுதமி நடிப்பது கோவிலைச் சுற்றி வரும் அபிராமி நெடுந்தொடரில். பகுத்தறிவுப் பாசறையிலிருந்து இப்படித் தொடர்களா என்று ஆச்சரியமாய் இருக்கிறதா? என்ன செய்வது?! கொள்கை வேறு – வியாபாரம் வேறு அல்லவா?

காந்தி நினைவு நாளை மறந்தாலும் மறக்கலாம்.. காதலர் தினத்தை மறக்கக் கூடாது! காதலர் தினம் ஏன் வந்தது எப்படி வந்தது என்பதை விட இந்த தினத்தில் சில ஜோக்ஸ்களை பகிர்ந்து கொள்ளலாமே!

பையன் அப்பாவிடம் கேட்டான். "அப்பா! கல்யாணம் செய்து கொள்வதற்கு எவ்வளவு செலவு ஆகும்?"

அப்பா சொன்னார், " தெரியவில்லை மகனே! நான் இன்னும் செலவழித்துக் கொண்டுதான் இருக்கிறேன்"

அவள் சொன்னாள், "நீங்கள் எனக்கு காதலர் தினத்திற்காக ஒரு வைர நெக்லஸ் வாங்கித் தருவதாகக் கனவு கண்டேன்"

அவன், "கொஞ்சம் பொறு.. இன்று இரவு சொல்கிறேன்" என்றான்.

மாலையில் அவன் ஒரு பார்சலோடு வீட்டுக்கு வந்ததும் அவள் மிகவும் சந்தோஷத்துடன் பிரித்தாள். உள்ளே இருந்தது’கனவுகளின் பொருள்’ என்ற புத்தகம். "உன்னைக் கல்யாணம் செய்து கொண்ட பிறகுதான் நான் எவ்வளவு முட்டாள் என்று தெரிகிறது" என்று மனைவி சொன்னாள். "ஆமாம், நானும் அப்போது கவனிக்கவில்லை இப்போதுதான் எனக்கும் தெரிகிறது" என்று சொன்னான் அவன்.

பால் தாக்கரேயும் ராஜ் தாக்கரேயும் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டு தாம்தான் மஹாராஷ்டிராவின் பாதுகாவலர் என்று மார்தட்டுகிறார்கள். தேசிய பாதுகாப்புப் படைதானே மும்பைத் தீவிரவாதத் தாக்குதலை முறியடித்தது என்று ராகுல் காந்தி சொல்ல, சிவசேனாத் தலைவரோ, ‘மஹாராஷ்டிர போலீஸை ராகுல் அவமதித்து விட்டார். தீவிரவாதிகள் தாக்குதலின் போது ராகுல் காந்தி எங்கிருந்தார்?’ என்று கேட்கிறார். அது சரி, அப்போது ராஜ் தாக்கரேயும். பால் தாக்கரேயும் எங்கே இருந்தார்களாம்?

2009ம் வருஷம் ஏ.ஆர் ரஹ்மானுக்கு அதிர்ஷ்டமான வருஷம் என்றால் 2010 துவக்கமே அவரைப் புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றிருக்கிறது. இரண்டு கிராமி விருதுகளாம்! பத்மபூஷன் விருது வேறு! புகழ் எத்தனை தன்னைத் தேடி வந்தாலும் அவர் காட்டும் பணிவு அதிசயிக்க வைக்கிறது.

சச்சின் டெண்டுல்கர் தனக்கு ஆதர்சமாகக் கருதுவது மூன்று பேர்களை. அமிதாப் பச்சன், ஆஷா போன்ஸ்லே மற்றும் லதா மங்கேஷ்கர். எத்தனை வயதானாலும் அவர்கள் தங்கள் தொழிலில் காட்டும் ஆர்வமும் பக்தியும்தான் அதற்குக் காரணம் என்று சொல்கிறார்.

குற்றப் பின்னணி உள்ளவர்களை அரசியலில் நுழையவிடக் கூடாது என்று சமீபத்தில் பிரதமர் மன்மோகன்சிங் சொல்லியிருக்கிறார். அப்போ அரசியலில் யாருமே இருக்க மாட்டார்களா?

ஒரு வால் செய்தி: நாய் வாலாட்டுவது அதன் பிறவிக் குணம். ஆனால் அது வாலாட்டும்போது எந்தப் பக்கம் வாலை ஆட்டுகிறது என்று பார்த்திருக்கிறீர்களா? இடது பக்கம் வாலாட்டினால் அது சந்தோஷமாக இருக்கிறது என்று அர்த்தமாம்! இதற்கென்று மெனக்கெட்டு ஒரு ஆராய்ச்சி! ‘அது எந்தப் பக்கம் ஆட்டினால் என்ன, மேலே விழுந்து கடிக்காமல் போனால் சரிதான்’ என்கிறார் ஒரு யதார்த்தவாதி.

முடிவுலே ஒரு மொக்கை (சொந்தமில்லை-சுருட்டினதுதான்- முன்பே படிச்ச்சிருந்தால் மறந்துடுங்கோ):

சாப்ட்வேர் இன்ஜினியர் படம் எடுத்தால் என்ன பேர் வைப்பார்?
ஜி மெயில் சன்ஆப் இமெயில்
ரேம் தேடிய மதர்போர்டு
7GB
எனக்கு 20 MB உனக்கு 18 MB
சொல்ல மறந்த பாஸ்வேர்டு
எங்கோ ஒரு புரோகிராமர்
ஒரு மவுஸ்-ன் கதை
மானிட்டருக்குள் மழை
புதுக்கோட்டையிலிருந்து ஒரு பென்டியம் 4
காலமெல்லாம் ஆன்டி வைரஸ் வாழ்க!
Hard disk-க்கு மரியாதை
எல்லாம் processor செயல்

About The Author