சில்லுனு ஒரு அரட்டை

நண்பர்கள் எல்லாருக்கும் வணக்கங்கள்! மறுபடியும் உங்களைச் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி (உங்களுக்கு எப்படியோ எனக்குத் தெரியாது!!)

நவம்பர் 26. சென்ற ஆண்டு தீவிரவாதிகள் சரமாரியாக மும்பைக்குள் புகுந்து அப்பாவி மக்கள் 166 பேர்களைக் கொன்று குவித்த நாள். இந்த நாள் தீவிரவாதிகளுக்கு நினைவிருக்கிறதோ இல்லையோ நாம் அதை நினைவுபடுத்தி விழா எடுக்காத குறையாக விளம்பரம் செய்வோம். அதே நாளில் தீவிரவாதிகள் மறுபடியும் தாக்குவார்கள் என்று பாதுகாப்பை அதிகப்படுத்துவோம். ஏன் அன்றுதான் அவர்கள் தாக்கவேண்டும் என்று சட்டமா? பாபர் மசூதி இடிப்பிற்குப் பிறகும் இன்றுவரை இதேதான் கதை. தாக்க நினைக்கும் தீவிரவாதிகள் நாள் நட்சத்திரம் பார்ப்பதில்லை. நாம்தான் என்றுமே தயார் நிலையில் இருக்க வேண்டும்!

பாபர் மசூதி இடிப்பு பற்றி விசாரிக்க அமைக்கப்பட்ட லிபரான் கமிஷன் ஆடி அசைந்து மெதுவாக 17 ஆண்டுகளுக்குப் பிறகு தனது அறிக்கையை அளித்திருக்கிறது. கல்யாண் சிங், அத்வானி, வாஜ்பாய் என்று யாரையுமே விட்டு வைக்கவில்லை. இந்த அறிக்கை மேல் அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமா? அதற்கு இன்னும் பதினேழு வருஷங்கள் காத்திருக்க வேண்டும். மத நல்லுறவை வளர்க்க வேண்டிய தேசியத் தலைவர்களே அதற்கு எண்ணை ஊற்றி வளர்க்கும் அவல நிலை!

பாதுகாப்பைப் பற்றி பேசும்போது இந்தியா என்றில்லை, வளர்ந்த நாடான அமெரிக்காவிலேயே இப்போது மன்மோகன் சிங் – ஒபாமா சந்திப்பு நடந்த வெள்ளை மாளிகைக்குள் ஒரு தம்பதி டீக்காக உடையணிந்து காவல் காப்பவர்களின் கண்களில் மண்ணைத் தூவி விட்டு, உதவி ஜனாதிபதி மற்றும் செனட் உறுப்பினர்களுடன் போட்டோ எடுத்துக் கொண்டு விருந்திலும் கலந்து கொண்டார்களாம். இந்த விஷயம் இப்போதுதான் வெளிவந்திருக்கிறது. இது எப்படியிருக்கு?!

அதெல்லாம் ஒருபுறமிருக்கட்டும் – கொசுறாக ஒரு செய்தி – மும்பை தாக்குதலின்போது பிடிபட்ட தீவிரவாதி கசாப் விசாரணையில் இருக்கும் இந்த ஒரு ஆண்டில் ஆன பாதுகாப்புச் செலவு 31 கோடியாம்!! இன்னும் விசாரணை முடிந்தபாடில்லை!

2012ல் மாயன் காலண்டர்படி உலகம் அழிந்துவிடுமோ என்ற அச்சத்திலிருந்தால் உங்களுக்கு ஒரு நற்செய்தி. நமது தமிழ் பஞ்சாங்கப்படி 60 வருஷங்களானால் காலம் காட்டி (காலண்டர்) ஒரு சுற்று வந்து மறுபடியும் முதலாண்டிலிருந்து வட்டம் ஆரம்பிப்பதைப் போல 2012 ஆண்டுகள் என்பது ஒரு வட்டமாம். மறுபடியும் ஒன்றிலிருந்து ஆரம்பிக்கும் – அவ்வளவுதானாம்! இப்படிச் சொன்னவர் கார்னெல் பல்கலைக் கழகத்தில் உள்ள ஆன் மார்டின். மாயன் இனத்தவருக்கோ, அல்லது வேறு யாருக்குமோ எப்போது உலகம் அழியும் என்பது சுத்தமாகத் தெரியாது என்பதுதான் உண்மை.

தன் உடம்பிலேயே சிறையிலிருந்தவரை உங்களுக்குத் தெரியுமா? இந்தப் பரிதாப நிலை இப்பொழுது 46 வயதாகும் ராம் ஹூபன் என்பவருக்கு ஏற்பட்டது. 20 வயதில் ஒரு மோசமான விபத்தில் தன் நினைவை இழந்த நிலையில் மருத்துவ நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார். ரத்த ஓட்டம் மட்டும் இயங்கும் ஒரு உணர்வில்லாத ஜடம் போன்றவர் அவர் என்று டாக்டர்களால் முடிவு செய்யப்பட்டது. இப்போது அவரால் கம்ப்யூட்டர் கீபோர்ட் மூலம் மற்றவர்களுடன் தொடர்பு கொள்ள முடியும்.

அவர் தான் கோமாவில் இருந்ததாகக் கருதப்பட்ட நேரங்களில் அவரைப் பார்க்க வரும் டாக்டர்களையும் நர்ஸ்களையும் அவரால் பார்க்க முடிந்தது. அவரது உறவினர்கள் பேசுவதைக் கேட்க முடிந்தது. அவரது அம்மா, ‘அப்பா இறந்துவிட்டார்’ என்று சொன்ன செய்தி காதில் விழுந்தது. ஆனாலும் தன்னால் எழுந்திருக்கவோ, பேசவோ இயலவில்லை – அழக்கூட முடியவில்லை என்று சொல்கிறார். டாக்டர்கள் மூளை பாதிக்கப்பட்ட நிலையில் அவரால் எதையும் கேட்க முடியாது, எதையும் உணர முடியாது என்றே கருதி வந்தார்கள். ஆனால் இந்த சோகம் ஒரு நாள் முடிவிற்கு வந்தது. லாரிச் என்ற நரம்பியல் நிபுணர் அவரது மூளையை ஸ்கேன் செய்து மூளை நன்றாகவே செயல்படுகிறது என்று கண்டறிந்தாராம். ஹூபனின் வேதனைக்கும் ஒரு முற்றுப்புள்ளி வந்தது. இதேமாதிரி பாதிக்கப்பட்ட இன்னொரு நோயாளி "அந்த நேரங்களில் நான் தியான நிலையில் இருந்தேன். என்னுடைய கடந்தகால நினைவுகளில் பிரயாணம் செய்தேன்" என்று கூறுகிறாராம். ஹூபன் தன் வேதனைகளைப் பற்றியும் மறு பிறவி பற்றியும் புத்தகம் எழுதப் போகிறாராம்.

உஸ்பெகிஸ்தானிலுள் தர்வாஸ் என்ற சிறு கிராமத்தில் எண்ணைக்காக கிணறு தோண்டிக் கொண்டிருந்தபோது பூமிக்கடியில் மிக ஆழமாகச் செல்லும் ஒரு குகையைக் கண்டார்கள். அது அவ்வளவு ஆழமாக எரிவாயு நிறைந்ததாக இருந்ததால் யாரும் அதன் அருகில் போகத் துணியவில்லை . அதிலிருந்து எதுவும் விஷவாயு பரவி விடக்கூடாது என்பதால் அதனை எரிய விட்டார்கள். இன்னும் 35 வருஷங்களாக இடைவிடாமல் அது எரிந்து கொண்டேயிருக்கிறதாம். எத்தனை லட்சக்கணக்கான டன் எரிவாயு இதுவரை எரிந்திருக்கிறது என்று தெரியாது. ஆனால் இன்னும் எண்ணற்ற ஆண்டுகளுக்கு அது எரிந்து கொண்டே இருக்கும் எனக் கருதப்படுகிறது.

Uspekisthan

நாம் நம்ம ஊர் டிவி சீரியலுக்கு வருவோம். எங்கே தினத்தந்தியும் சிந்துபாதும் போல சன் டி.வியையும் கோலங்களையும் பிரிக்க முடியாதோ என்று எண்ணுகிற வேளையில் ஒரு வழியாக முடிவிற்கு வந்துவிட்டது. கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளைத் தாண்டி ஓடிய சீரியல் இது! (கின்னஸ் சாதனை?) இந்த நேரத்திற்க்குள் தேவயானிக்கு இரண்டு குழந்தைகளே பிறந்து விட்டன. அவர்களுக்குக் கல்யாணம் ஆகும் வரை சீரியலை நீட்டாமல் இந்த மட்டிலும் முடித்தார்களே, அவர்களுக்கு நன்றி!!

‘ என் தந்தை’ என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் படித்து ரசித்த ஒரு கவிதையிலிருந்து சில வரிகள் இதோ…

என்அப்பாவிற்கு எல்லாம் தெரியும்
எப்படி ஆட்சி நடக்கவேண்டுமென்று
நேரான ஆட்சி ஜோராக நடக்க
வழிகள் எல்லாம் வகையாய்ச் சொல்வார்

உலகப்போரினை
உடனே நிறுத்தும் வித்தை தெரியும்
ஆனால்
அடுத்த வீட்டார் சண்டைக்கு வந்தால்
அம்மா பின்னால்
அவசரமாய்ப் பதுங்குவார்

நிதி நிர்வாகம் நேராக நடக்க
திட்டம் ஒன்று கைவசம் உண்டு
ஆனாலும் எங்கள் வீட்டின் நிர்வாகம் மட்டும்
ஏனோ அம்மாவின் கையில்தான்!

எல்லாக் கேள்விகளுக்கும்
பதிலுண்டு அவரிடம்
எல்லாப் பிரச்சினைகளுக்கும்
தீர்வளிக்கும் அறிவாளி

வாய்ச் சொல்லில் வீரர்
எங்கள் அப்பா
செயலென்றால் என்றும் அம்மாதான்

முடிவாக தத்து பித்துதென்று சிலவற்றை உளருகிறேன். பொறுத்தருள்வீராக!

ஆன்மீகம் என்ன சொல்கிறதென்றால்… (ரொம்பத் தேவையா?)

இந்த உலகத்தில் இரண்டு மகத்தான சோகங்கள் உண்டு
ஒன்று ஆசைப்பட்டது கிடைக்காமல் போவது
இன்னொன்று ஆசைப்பட்டது கிடைத்துவிடுவது…

(மூன்றாவது சோகம், ஜன்பத்தின் சில்லுனு ஒரு அரட்டையைப் படிக்கும்போது என்று நீங்கள் சொல்வது எனக்குத் தெரியாதா என்ன!!)

அப்போ நாளை சந்திப்போமா? (சாலமன் பாப்பையா மன்னிக்க)

About The Author

1 Comment

  1. meenal devaraajan

    குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகும் போது பிரச்சனைகளெழுவதில்லை என்பதை உம் கவிதை சுட்டிக் காட்டுகிறது என்று நான் எடுத்துக் கொள்கிறேன். பல விஷயங்கள் தெரிந்த அப்பா அம்மாவுக்கு விட்டுக் கொடுத்துப் போகாவிட்டால் உம்மைப் போன்ற குழந்தைகளின் கதி அதோகதிதான்!

Comments are closed.