சூரியனுக்கு சுப்ரபாதம் : 5. டென்னிஸ் விளையாட்டும் அழிவற்ற ஆன்மாவும்

நாளிதழை வாங்கிக்கொண்டு காலைரயிலில் ஏறி அமைதியாகவும் கம்பீரமாகவும் அமர்ந்து வாசிக்க ஆரம்பிக்கிறீர்கள். அவசரப்படாதீர்கள். உங்களின் முன்னால் குறைந்தது அரை மணிநேரம் இருக்கிறது என்று ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். நாளிதழின் முன்பக்கத்தில் இருக்கும் பொதுவிளம்பரங்கள் மற்றும் சேவை நிறுவனங்களின் விளம்பரங்கள் ஆகியவற்றில் உங்கள் பார்வை மேய்கிறது. மிகவும் தளர்ந்த மனிதராய், அமைதியாய் நிறைய நேரத்தைக் கையில் வைத்திருக்கும் ஒரு பணக்காரராய் உட்கார்ந்திருக்கிறீர்கள். அதுவும் எப்படி? ஒருநாளைக்கு இருபத்துநான்கு மணிநேரத்திற்கு பதிலாக ஒருநாளைக்கு நூற்று இருபத்துநான்கு மணிநேரம் இருக்கும் வேற்று கிரகவாசியைப் போல!

நானும் நாளிதழ் வாசிப்புக்கு அடிமையாகியிருக்கும் ஒருவன்தான். தினமும் இரண்டு ஆங்கிலம், இரண்டு பிரெஞ்சு நாளிதழ்களை வாசிக்கிறேன். இதை ஏன் சொல்கிறேன் என்றால், ரயிலில் நாளிதழ் வாசிப்பதையோ வாசிப்பவரையோ நான் வெறுப்பவன் இல்லை.

நாளிதழ்கள் வேகவேகமாகத் தயாராவதே வேகவேகமாகப் படித்து முடித்து தூரவைக்கத்தான். என் தினசரி செயல் அட்டவணையில் நாளிதழுக்கு இடமில்லை. ஆனாலும் நான் அவற்றை வாசிக்கிறேன். நாளிதழ்களை அதற்காகவே உட்கார்ந்து வாசிக்காமல் விநோத நேரங்களில் கிடுகிடுவென்று வாசிக்கிறேன். ரயில் கம்பார்ட்மெண்ட்டில் அவரவர் அவரவர் யோசனைகளிலும் கனவுகளிலும் ஆழ்ந்திருக்கும் அந்தப் பயணநேரம்தான் நாளிதழ் வாசிக்க மிகச் சரியான நேரம் என்று சிலர் நினைக்கலாம். ஆனால், அந்த அற்புதமான அழகிய தனிமையை நாளிதழ் வாசிப்பில் செலவிடுவதை நான் வெறுக்கிறேன். அந்த நேரச்செலவு ஆடம்பரமானது என்பேன்! மதிப்பற்ற காலத்துளிகளை இப்படியா தான்தோன்றித்தனமாக இரைப்பது? அப்படிச் செய்வதை நியாயப்படுத்த நீங்கள் என்ன, நேரஉற்பத்தி செய்யும் ஆளா? என்னிடம் இருப்பதைவிட அதிக நேரம் உங்களிடம் இல்லை என்பதை மீண்டும் ஒருமுறை நான் உங்களுக்குப் பணிவாக நினைவுபடுத்துகிறேன்! ஆகவே, ரயிலில் நாளிதழை வாசிக்காதீர்கள்! இது முதல்விதி! நான் இந்த முதல்விதியின் மூலம் உங்களது முக்கால்வாசி நேரத்தை பயனுள்ள ஓர் இடத்தில் இடுகிறேன்!

இப்போது நீங்கள் உங்கள் ஆபிஸை அடைந்து விட்டீர்கள். சரி, மாலை ஆறுமணி வரைக்கும் அங்கேயே உங்களை விட்டுவிடுகிறேன். இடைவேளை ஒருமணி நேரம் கிடைக்குமில்லையா? அதில் அரைமணிக்கும் குறைவாகவே எடுக்கும் உங்களின் சாப்பிடும் நேரமும் அடங்கும். உங்கள் விருப்பம் போல நீங்கள் அந்த நேரத்தைச் செலவிடலாம். நாளிதழ் கூட வாசிக்கலாம்!

பீஸைவிட்டு வெளியேறும்போது நான் உங்களை மீண்டும் சந்திக்கிறேன். துவண்டுபோய் களைப்பாக இருக்கிறீர்கள். எப்படியும் உங்களின் மனைவி அப்படித்தான் சொல்லப்போகிறார். ஆகவே, நீங்களும் மிகவும் சோர்ந்து போய்விட்டதாக மிகத் திடமாகவே நம்புகிறீர்கள். வீட்டுக்குத் திரும்பும்போதான பயணநேரத்தை, நீங்கள் இந்த நம்பிக்கையை வளர்க்கவே பயன்படுத்தி வந்தீர்கள். சரியா?

ஒவ்வொரு மாலையிலும் பெருநகரின் காற்றில் சோர்வு எனும் இந்த சோக உணர்வு கனத்துப் போகிறது. குறிப்பாக குளிர்காலங்களில். வீட்டிற்கு வந்ததும், உடனே நீங்கள் உண்பதில்லை. அரை மணிநேரமானதும் தான் கொஞ்சம் சக்தி தேவை என்று உணர்கிறீர்கள். ஆகவே, சாப்பிட ஆரம்பிக்கிறீர்கள். பிறகு புகைக்கிறீர்கள். பிறகோ நண்பர்களைச் சந்தித்து, சீட்டு விளையாடி, கொஞ்சநேரம் வாசிப்பதாக பாவ்லா கட்டி, நேரத்தை ஓட்டும்போது, உங்களுக்கு வயதாவதை திடீரென்று உணர்வீர்கள்!

பிறகு, கொஞ்சதூரம் உலாவப் போவீர்கள். கீபோர்டை எடுத்து வைத்துக்கொண்டு, மறக்காமல் இருக்கிறதா என்று சோதிக்க எதாவது வாசிக்க முயற்சிப்பீர்கள். இப்படியே இரவு பதினொன்றேகால் ஆகிவிடும். அப்புறம் ஒரு நாற்பது நிமிடங்களை தூங்கப்போகலாமா என்பது குறித்து யோசித்தே கழிப்பீர்கள். படுக்கும் முன்னர் விஸ்கி போன்றவற்றை அருந்தும் பழக்கம் இருந்தால், குடித்துவிட்டு படுக்கப் போவீர்கள். இப்படியே, அலுவலகத்தைவிட்டு வெளியேறியதிலிருந்து கிட்டத்தட்ட ஆறு மணிநேரம் கனவைப் போல, ஒரு மாயமாக, கணக்கில் வராமலேயே மறைந்து போயிருக்கும்!

இது ஒரு சாதாரண உதாரணம்தான். "உனக்கென்ன, உட்கார்ந்து கொண்டு பேசுவாய். நண்பர்களைச் சந்திப்பதென்ன தவறா? அதெல்லாம் சமூகத்தில் தேவையற்றதா?" என்று நீங்கள் என்னைச் சாடிச் சண்டைக்கு வரலாம். இதில் உண்மையும் இருக்கலாம். திரைப்படத்திற்குப் போக நினைத்துக் கிளம்பினீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அதுவும் ஒரு அழகான பெண்ணுடன். என்னவாகும்? நகர மையத்திற்கு விரைவீர்கள். இதற்கே சில மணிநேரங்களாகும். வீடு திரும்பிட மேலும் சில மணிநேரங்கள். உடன் தோழி இருந்தால், அவளைக் கொண்டுவிடவும் உங்களின் நேரத்தில் சில மணிநேரங்களைச் செலவிடுவீர்கள்.

இம்மாதிரியான நேரங்களில் நாற்பது நிமிடங்கள் யோசித்துவிட்டு பிறகு படுக்கப்போக வேண்டியதில்லை. சோர்வு அழுத்துவதால் உடனே படுத்து உடனே தூங்குவீர்கள். நண்பர்களோ களைப்போ கூட மறந்து போகும். அழகான மாலைநேரம் சீக்கிரமே முடிந்துபோனதாகக் கூட நீங்கள் உணரலாம். போன வருடம் உங்கள் காலனியில் நடந்த பெரிய ஒரு கலைவிழாவிற்கென்று மூன்று மாதங்களுக்கு தினமும் இரவில் இரண்டு மணிநேரம் கிதார் பயிற்சி செய்தீர்களே, நினைவிருக்கிறதா? உங்களுக்கு உங்களின் சக்தியெல்லாம் செலவாகும் குறிப்பிட்ட ஓர் இலக்கு இருக்கும் போது, ஒருவித பிரகாசமும் துடிப்பும் நாளெல்லாம் படர்வதை உணர்கிறீர்கள், சரிதானே? அதை மறுக்க முடியுமா?

மாலை ஆறுமணிக்கு எதார்த்தத்தை உணருங்கள். முதலில் நீங்கள் களைப்படையவில்லை என்று நினைக்க ஆரம்பியுங்கள்! ஏனெனில், நீங்கள் களைப்பாக இல்லை என்பதுதான் உண்மை. சாப்பிடும் நேரத்தில் குறுக்கீடுகள் ஏதும் வராதமாதிரி உங்களின் செயல்திட்டத்தை வகுத்துக் கொள்ளுங்கள். இப்படிச் செய்வதால் உங்களின் மூன்று மணிநேரமாவது உங்களுக்கு, உங்களுக்கே உங்களுக்கு, துல்லியமாகவும் தெளிவாகவும் இருக்கும். இரவுதோறும் மூன்று மணிநேர மனோபலத்தை நீங்கள் பயன்படுத்த வேண்டும் என்றெல்லாம் நான் உங்களுக்குச் சொல்லவில்லை. ஆனால், ஒரு நல்ல துவக்கமாக, வாரத்தில் மூன்று நாட்களில் ஒன்றரை மணிநேரத்தை, மாலையில் மனதைச் சீராக்கவும் வளர்த்தெடுக்கவும் பயன்படுத்த வேண்டும். மீதி மூன்று மாலைகளை நண்பர்களுக்கு, சீட்டாட்டத்துக்கு, வீட்டுக்கு, இலக்கற்ற வாசிப்புக்கு, தோட்ட வேலைக்கு, மட்பாண்டம் வனைவதற்கு மற்றும் போட்டிகளுக்குப் பயிற்சி செய்வதற்கு என்று ஒதுக்கிக் கொள்ளலாம்.

அதற்குப் பிறகும் ஞாயிறு மதியம் இரண்டு முதல் திங்கள் காலை பத்துமணி வரைக்குமான காலச்செல்வம் உங்கள் கையில் இருக்கும்! விடாமுயற்சியுடன் இருந்தால், நான்கோ ஐந்தோ மாலைகள் இப்படி முழுமையாகக் கழியும். இரவு பதினொன்றேகாலுக்கு, "தூங்கலாமா", என்று யோசித்துக் கொண்டிருக்க மாட்டீர்கள். இப்படி யோசிக்கும் ஒருவரோ, படுக்கையறையைத் திறக்கும் முன்னரே தூங்கி வழியும் ஒருவரோ நிச்சயம் முழுமையாக வாழ்வதில்லை!

னால், நினைவில் கொள்ளுங்கள். துவக்கத்தில், வாரத்தில் மூன்று முறை இரவில் கிடைக்கும் தொண்ணூறு நிமிடங்கள் தான் பத்தாயிரத்து எண்பது நிமிடங்களிலேயே மிக முக்கியமானது. அவை ஒருவகையில் புனிதமானதும் கூட. ஒரு டென்னிஸ் ஆட்டத்திற்குப் பயிற்சி மேற்கொள்வதைப் போல முக்கிய நிமிடங்கள். இந்த டென்னிஸ் ஆட்டப் பயிற்சியின் போது, "அட போங்கப்பா, தினமும் நண்பனைக் கூடப் பார்க்காமல் டென்னிஸ் கோர்ட்டுக்கு ஓடணும்னா", என்ற சலிப்பு ஏற்படும் அறிகுறி தெரிந்தால், உடனே, "இல்லல்ல, நான் பயிற்சி செய்யணும். விடாமுயற்சி வேணும். அப்ப தான் இருபத்துநான்கு மணி நேரத்தையும் முழுமையாக வாழ நான் பழக முடியும்", என்று சொல்லிக்கொள்ள வேண்டும். உறுதியாக இப்படிச் சொல்லிக் கொள்வது ஒன்றும் எளிதல்ல. இறப்பேயற்ற ஆன்மாவை விட டென்னிஸ் பயிற்சி மிக முக்கியம்.

(தொடரும்)

About The Author

1 Comment

  1. VELMURUGAN

    தாஙள் சொல்வது புரிவதர்கு 30 நிமிடம் ஆகுது.

Comments are closed.