செட்டியார் முறுக்கு வேண்டும், தம்பி! (2)

(நிலாச்சாரலுக்காக விசேஷ அனுமதியுட‎ன் “வெற்றிக்கு முதல் படி” நூலிலிருந்து)

ஒரு தம்பி வெற்றிப் படிகளைத் தாண்டிய கதை.

ஒரு முறை ஒரு பெரிய துணிக்கடை நிர்வாகியைப் பார்க்கப் போனேன். அவர் தரமான ஆடைகளைத் தயாரித்து விற்றுக் கொண்டிருந்தார்.

"எங்கே இந்த சட்டையையும் சூட்டையும் வாங்கினீர்கள்?" என்றார், ஆச்சரியத்துடன். ஆர்வம் அவர் கண்களில் மின்னியது.

நான் எப்போதுமே நன்றாக, அழகாக உடுத்திச் செல்பவன். உடை சுத்தமாக இருக்கும். கூடியவரை மடிப்புக் கலையாமல் இருக்கும். உயர்தரமான, எடுப்பான ஆடைகளைத்தான் வாங்குவேன்; அணிவேன்.

நான் அவ்வளவு பெரிய பணக்காரன் அல்லதான். ஆனால், என்னை எதை வைத்து மதிக்கிறார்கள்? என் உடையையும் நான் பேசும் முறையையும் வைத்துதான். என் உடை அவரை கவர்ந்திருக்க வேண்டும்.

நாங்கள் இன்சூரன்ஸ் பற்றிப் பேசவில்லை. உடையைப் பற்றி, துணியின் தரத்தைப் பற்றி, புதிய நாகரீகம் பற்றி, மற்ற நிறுவனங்கள் பற்றிப் பேசினோம் நிறைய.

காப்பி வந்தது; குடித்தேன். பத்து நிமிட நேரம்தான் உங்களுக்குத் தரமுடியும் என்றவர் ஒரு மணிக்கும் மேலாக என்னிடம் பேசிக் கொண்டிருந்தார்.

துணி, உடை, அதன் தரம், இன்றைய விற்பனைக்குரிய தன்மைகள் பற்றி எனக்குத் தெரிந்ததை எல்லாம் இனிமையாகப் பேசிக்கெண்டே என் அறிவை வாரி வழங்கினேன்.

வெளியே கிளம்பியபோது "உங்கள் இன்சூரன்சு பாலிசி பற்றி சொல்லவே இல்லையே!" என்றார். விவரம் அதிகம் கேட்காமல் என்னை நம்பி தன் நிறுவனத்தை என்னிடம் ‘இன்சூர்’ செய்தார்.

சிறு உதவி; என் யோசனைகள்.

என் உடை; அது ஏற்படுத்திய கவர்ச்சி.

ஒரு முறை பள்ளிக்கூட ஆண்டு விழாவிற்கு போயிருந்தேன். பாடங்களில் முதல் மதிப்பெண் வாங்கும் மாணவர்களுக்கும், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் பல பரிசுகளைப் பள்ளி நிர்வாகிகள் வழங்கிக் கொண்டிருந்தார்கள்.

நான் யோசித்தேன். நன்றாக, கலகலப்பாக எல்லோருடனும் பழகுகிற மாணவ மாணவிகளுக்கும், நன்றாக அழகாக உடை உடுத்திக் கொண்டு தலைசீவிக் கொண்டு வருகிற மாணவ மாணவிகளுக்கும் பரிசு கொடுத்தால் என்ன என்று யோசித்தேன். நல்ல யோசனை என்றார் தலைமை ஆசிரியர்.

சில நூறு ரூபாய்தான் செலவு! இதன்மூலம் அங்கு வந்திருந்த பெற்றோர்களின் மனதில் நான் இடம்பிடித்துவிட்டேன்!

ஒரு சிறிய பணி; நல்ல செயல். இவ்வளவு பேருடைய நல்ல எண்ணத்தை இதனால் பெற்றுவிட முடியுமென்று நான் நினைக்கவில்லை!

ஒரு நட்சத்திரத்தைத் தற்செயலாக சந்தித்தேன். அவர் நல்ல நடிகை. கண்கள்…. அவர் கண்கள் பேசும் விழிகள். கண்களிலே ஒரு துடிப்பு. ஒரு கவர்ச்சி ஒரு ஈர்க்கும் இன்பம் இருக்கும். நான் சொக்கிப் போயிருக்கேன். பார்த்து ஒரு கணம் சுவைத்தேன், அந்த கண்களை.

"உங்களுக்கு அழகான கண்கள்!" என்றேன். சிரித்துக் கொண்டார்!

"ஏன் உங்கள் கண்களை இன்சூர் செய்யக் கூடாது?" என்றேன்.

அவர் கண்கள் அகல விரிந்தன. "கண்களை இன்சூர் செய்யமுடியுமா?"

"நமது ஊரில் அது இன்னும் பிரபலமாகவில்லை. வெளிநாடுகளில் அழகிய கால்களை, உதடுகளை எல்லாம் இன்சூர் செய்வார்கள். நான் இது முடியுமா என்று பார்க்கிறேன். இதற்காகும் செலவைவிட உங்களுக்கு இதனால் கிடைக்கும் விளம்பரமும் உங்கள் கண்கள் தனி கவர்ச்சி கொண்டிருக்கிறது என்ற விஷயமும் உங்கள் முன்னேற்றத்திற்கு நல்லது" என்றேன். நான் அவர் ரசிகனாய் இருந்ததற்கு மாறாக இப்போது அவர் என் ரசிகையாகிவிட்டார்! வெளிநாட்டு நிறுவனம் ஒன்றில் அவர் கண்களை ‘இன்சூர்’ செய்தேன்!

இஞ்சிக்கும் இடுப்பழகிகளுக்கும் என்ன தொடர்பு உண்டோ, எனக்கு தெரியாது. ஆனால், கண்களுக்கும் கவர்ச்சிக்கும், நாம் செய்கின்ற சிறு உதவிக்கும், அதன் விளைவாக ஏற்படுகின்ற நன்றிக்கும் பலனுக்கும் நிறைய தொடர்பு உண்டு என்பதைத் தெரிந்துகொண்டேன்.

About The Author