ஜாக் எனும் மனித மிருகம் (5)

மில்லர்ஸ் கோர்ட்டிற்கு எதிரே ஹான்பரி தெருவிலிருந்து கால் மைல் தூரத்திற்குள் பொது விடுதி ஒன்று இருந்தது. அந்த விடுதிக்கு மில்லர் கோர்ட்டின் ஒரு குறுகிய வளைவு வாயில் வழியாகச் செல்ல வேண்டும். வளைவைத் தாண்டியதும் தெருவின் இரண்டு பக்கங்களில், ஒவ்வொரு பக்கத்திலும் உள்ள மூன்று வீடுகளில் விலைமாதர்கள் வசித்து வந்தார்கள். 13ஆம் நம்பர் வீட்டில் ஒரு சின்னப் போர்ஷனில் 24 வயதான மேரி ஜேன் கெல்லி வாடகைக்கு இருந்து வந்தாள்.
அவள் 30ஆம் தேதி அக்டோபர் வரை தன் கணவனுடன் அங்கிருந்தாள். அதற்குப் பிறகு கணவன் மனைவிக்கிடையே கடுமையான சண்டை ஏற்பட்டு, வாக்குவாதம் முற்றி மோதலில் முடிந்தது. கதவுக் கண்ணாடிகள் உடையும் அளவுக்குச் சண்டை முற்றிப்போய் இருவரும் பிரிந்தார்கள். கெல்லி ஏற்கெனவே மூன்று மாதங்களாக வாடகை கொடுக்கவில்லை. வெளியில் எக்கச்சக்கக் கடன் வேறு. அவள் உயிர் பிரியப்போகும் அந்தக் கடைசி நாளின் மாலையில் ஏகமாகக் குடித்துவிட்டுத் தொழில் செய்ய வாடிக்கையாளர்கள் யாராவது வருவார்களா என்று தூண்டில் போட்டுக் கொண்டிருந்தாள். நள்ளிரவுக்குச் சற்று முன்னால் இன்னொரு விலைமாது கெல்லியை ஒரு ஆடவனுடன் பார்த்திருக்கிறாள். அவள் தான் பார்த்த ஆளைப் பற்றிப் பிறகு போலிசில் விவரித்தபோது, "அவன் முகத்தில் கொப்புளங்கள் இருந்தன. குட்டையாகவும் தடிமனாகவும் இருந்தான். அடர்த்தியான மீசை இருந்தது. அவன் கையில் ஒரு பீர் பாட்டில் இருந்தது" என்று சொல்லியிருந்தாள்.

அந்த விலைமாது கெல்லியை ஒரு ஆடவனுடன் பார்த்த பிறகு, கெல்லி தன் அறைக்கு அவனுடன் சென்று கதவைத் தாளிட்டிருக்கக்கூடும். அவள் தன் அறையில் பிரபலமான ஒரு பாட்டை முணுமுணுத்துக் கொண்டிருந்தாள். ஒரு மணி நேரத்திற்குப் பிறகும் அவள் பாடும் குரல் கேட்டுக் கொண்டிருந்தது. அப்புறம் சிறிது நேரத்தில் அவள் அறையில் விளக்கு அணைந்தது. பிறகு, அதிகாலை மூன்றரை மணி அளவில் "ஆ! கொ…லை!" என்று ஒரு பெண் அலறும் குரலை அந்த வழியாகச் சென்ற யாரோ ஒருவர் கேட்டிருக்கிறார். ஆனால், இது போன்ற கூச்சல்கள் ஒரு வழக்கமான விஷயமாகிப் போனதால் யாரும் லட்சியம் செய்யவில்லை. பிறகு ஒரு சத்தமும் இல்லை – வெறும் மழை பெய்யும் சத்தம் மட்டும்தான் கேட்டது.

மறுநாள் காலை பத்தே முக்கால் மணி அளவில் அந்த விடுதியின் சொந்தக்காரர், தன்னிடம் வேலை பார்ப்பவரை, கெல்லியிடம் வாடகைப் பணப் பாக்கியைக் கேட்கச் சொல்லி அனுப்பினார். அந்தப் பணியாளர் கெல்லியின் கதவைப் பல முறை தட்டியும் யாரும் திறக்கவில்லை. சந்தேகத்துடன், உடைந்திருந்த கண்ணாடி ஜன்னலுக்கு முன்னால் இருந்த திரையை விலக்கி விட்டு உள்ளே பார்த்த அவர் அதிர்ந்தார். உள்ளே படுக்கைக்கு அருகிலிருந்த மெஜையில் கெல்லியின் உடலின் சில பகுதிகள் இருந்தன. படுக்கையில், முழுதுமாகச் சிதைக்கப்பட்ட உடலின் மற்ற பகுதிகள் இருந்தன. அவள் கழுத்து முழுவதுமாக முதுகெலும்பு வரை கத்தியால் அறுக்கப்பட்டிருந்தது. உடல் கன்னாபின்னாவென்று கிழித்துக் குதறப்பட்டிருந்தது. கொலையாளிக்கு கெல்லியின் உடலைக் கூறுபோட இரவு முழுவதும் போதுமான அவகாசம் இருந்திருக்கிறது.

குளிர்காய நெருப்பூட்டும் இடம் முழுவதும் சாம்பல். அதில் ஒரு பெண்ணுடைய ஸ்கர்ட், தொப்பி ஆகியவற்றின் பகுதிகள் எரிந்து மிச்சம் இருந்தன. அந்த உஷ்ணத்தில் அருகிலிருந்த கெட்டிலின் ஒரு பகுதி கூட உருகியிருந்தது!

பின்னர் செய்த பிணப் பரிசோதனையில் அவளது உடலின் கீழ்ப்பகுதி முழுவதும் எடுக்கப்பட்டிருந்ததும், மார்பகங்கள் வெட்டப்பட்டதும் அந்தக் கொலையின் கொடூரத்தை விவரித்தன. உள்ளுறுப்புக்கள் அனைத்தும் நீக்கப்பட்டிருந்தன – இருதயப் பகுதியை மட்டும் காணவில்லை!

அந்த மனித மிருகம் வைத்த குறி தப்பவில்லை. அவன் தான் கொலை செய்யவேண்டும் என்று விரும்பிய நேரத்தில், விரும்பியபடி கச்சிதமாகத் தன் வேலையைச் செய்து முடித்திருந்தான். அன்று தேதி நவம்பர் 9 என்பது மட்டுமல்லாமல் அந்த நாள் லார்ட் மேயர் லண்டன் வீதிகளில் மக்களின் ஆரவாரத்துக்கிடையே தங்கப்பூச்சிட்ட சாரட்டில் பவனி வரும் நாள். ‘ரிப்பர்’ அந்த நாளின் மகிழ்ச்சியை முழுவதுமாகக் கெடுத்ததோடு நகரத்தையே பெரும் அச்சத்திற்குத் தள்ளிவிட்டான். இந்த நேரத்தில், கொலை நடப்பதற்குச் சில மணி நேரத்திற்கு முன்னால்தான் போலிஸ் கமிஷனர் வாரன் தன் பதவியை ராஜினாமா செய்திருந்தார் என்பது ஒரு சின்ன சலசலப்பை ஏற்படுத்தியது.
அதற்குப் பல காரணங்கள் இருந்தன. தன் கீழே வேலை பார்ப்பவர்களுடன் அவருக்கு ஒத்துப் போகவில்லை; உயர் அதிகாரிகளுடன் மோதல்; அவரைப் பலமாகக் கண்டனம் செய்து விமர்சித்த பத்திரிகைகள் என்று பல நெருக்கடிகள் அவருக்கு இருந்தன. அதனால் பதவி விலகியேயாக வேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அவர் தான் முன்பு வேலை பார்த்து வந்த ராணுவப் பணிக்கே மீண்டும் சென்றுவிட்டார். தன் பதவியை விட்டு விலகுவதற்கு முன்னால் அவர் மன்னிப்பும் கேட்டிருந்தார். அந்த மன்னிப்பு, அவர் தன் கடமையைச் செய்வதில் தவறிவிட்டார் என்பதையே தெளிவுபடுத்தியது.

சில மாதங்களிலேயே கொடூரக் கொலைகள் நல்லவேளையாக நின்றுபோயின. ‘ஜாக் என்ற மனித மிருகம்’ இறந்திருக்கலாம் அல்லது நாட்டைவிட்டுச் சென்றிருக்கலாம்; மனநோய் மருத்துவமனையிலோ சிறையிலோ அடைக்கப்பட்டிருக்கலாம் என்று பல யூகங்கள். ஜாக் செய்த ஐந்தாவதும் கடைசியுமான கொலை கெல்லிதான். அவன் செய்ததாகக் கருதப்படும் ஐந்து கொலைகளும் தனக்குள் ஒரு விதிமுறை ஏற்படுத்திக் கொண்டு, மாதத்தின் கடைசியில் அல்லது முதல் வாரத்தில் நடத்தப்பட்டதால் அவை ‘விதிமுறைக்குட்பட்ட ஐந்து’ (canonical five) என்றே பத்திரிகைகளாலும் மக்களாலும் பேசப்பட்டன. அந்தக் காலக்கட்டத்தில் செய்யப்பட்ட பல கொலைகளுக்கும் ஜாக்தான் காரணம் என்பவர்களும், ஜாக் மூன்று பேர்களை மட்டும்தான் (நிகோலஸ், சாப்மன், எட்டோஸ்) கொலை செய்தான், மற்ற கொலைகளைச் செய்தது ஜாக் அல்ல எனவும் கருத்துக் கூறுபவர்கள் உண்டு. கடைசி வரை அந்த மனித மிருகம் யார் என்ற அடையாளம் காணப்படாமலே இருந்தது.

மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திய இந்தக் கொலைகளின் பின்னணியில் இருந்தது யார் என்று பலவிதமாக அலசப்பட்டது. தொடர் கொலைகளும் நீடித்த மர்மமும் வெறும் வாயை மெல்லும் பத்திரிகைகளுக்கு அவலாயின. கொலையாளி சிமரான் என்ற நகரத்திலிருந்து வந்த இந்தியக் கொலைகாரன் என்பதிலிருந்து, அவன் ஒரு கெட்ட ஆவி என்பது வரை பலவாறு வதந்திகள் பரவின. பிரிட்டிஷ் அரசு 1959 வரை கடவுள், சாத்தான், ஜாக் தி ரிப்பர் என்ற பெயர்களைப் படங்களுக்கு வைக்கக்கூடாது என்று தடை விதித்திருந்தபோதிலும் எப்படியோ சாமர்த்தியமாக, நம்ப முடியாத யூகங்களைத் தங்கள் படங்களில் தயாரிப்பாளர்கள் வெளிப்படுத்தினர்.

இவ்வாறு ஒவ்வொருவரும் தங்கள் கற்பனைக்கேற்பக் கொலைகாரனைப் பற்றிச் செய்திகளைப் பரப்ப முக்கிய காரணம் ஜாக்கைப் பற்றிய முக்கியமான தடயங்கள் எதுவும் கிடைக்காததுதான்.
ஜாக் சம்பந்தப்பட்ட மூன்று முக்கியமான ஆவணங்கள் அடங்கிய நகரக் காவல்துறையின் கோப்புகள், லண்டனில் உள்ள பொது ஆவணக் காரியாலயத்தில் பாதுகாக்கப்பட்டிருக்கின்றன. இவற்றில் தெளிவான விவரங்கள் இல்லாததால் இதில் சம்பந்தப்பட்ட நபர் மிகவும் முக்கியமானவர் என்றும், ஸ்காட்லாண்ட் யார்ட் பல செய்திகளை மறைத்துவிட்டது என்றும் சொல்பவர் பலர். ஆனால், இந்தக் கொலைகளைச் செய்தவன் மேரி கெல்லியின் கொலைக்குப் பிறகு தற்கொலை செய்துகொண்ட ஒரு வழக்குரைஞன் என்றும், அவன்தான் ‘ஜாக் எனும் மனித மிருகம்’ என்றும் இதே ஆவணங்களைச் சுட்டிக்காட்டிச் சொல்லப்படுகிறது.

கொலைகள் சம்பந்தப்பட்ட முக்கியமான ஆவணம் மெல்வில் மக்னாட்டன் என்ற துப்பறியும் போலிஸ் அதிகாரியால் சேகரிக்கப்பட்ட விவரம்தான். மக்னாட்டன் தனது அறிக்கையை இந்தக் கொலையைத் துப்பு விசாரித்து வந்த அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து, பின்னர் அதன் அடிப்படையில் சமர்ப்பித்திருக்கலாம் என்று தோன்றுகிறது. அவர் தனது அறிக்கையில் அழுத்தம் திருத்தமாக, "இந்தக் காலக்கட்டத்தில் பல கொலைகள் நடந்திருந்தாலும் குறிப்பிட்ட ஐந்து கொலைகளை மட்டுமே ஒரே நபர் செய்திருக்கிறார் என்று தீர்மானிக்க முடிகிறது" என்கிறார்.
கொலையாளியாக இருந்திருக்கக்கூடும் என்று மூன்று பேர்களை மக்னாட்டன் தன் அறிக்கையில் கூறியிருக்கிறார்.

முதலாவதாக, எம்.ஜே.ட்ரூயிட் என்பவர் -நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவர்- இவர் ஒரு மருத்துவர். இவர் மில்லர் கோர்ட் கொலைக்குப் பிறகு மாயமானவர். இவரது உடல் தேம்ஸ் நதியில் 31ஆம் தேதி டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்டது. கண்டுபிடித்தபோது இவர் தண்ணீரில் மூழ்கி இறந்து ஒரு மாதம் ஆகியிருக்கலாம் என்று சொல்லப்பட்டது. மில்லர் கோர்ட் கொலைக்கு ஏழு வாரங்களுக்குப் பிறகு இவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் பாலியல் மன வியாதி உடையவர் என்று அறிய முடிகிறது. "எனக்கு சிறிது சந்தேகம் இருக்கிறது. ஆனால், அவரது குடும்பத்தவர்கள் அவர்தான் கொலையாளியாக இருக்க வேண்டும் என்று கருதுகிறார்கள்" என்று மக்னாட்டன் சொல்கிறார்.
சந்தேகத்துக்குரிய இரண்டாவது நபர், கோஸ்மின்ஸ்கி என்ற போலந்தைச் சேர்ந்த யூத இனத்தவர். ஒயிட் சாப்பலில் வசித்தவர். இவர் பல தவறான செயல்களில் ஈடுபட்டுப் பைத்தியம் பிடித்தவர். பெண்களென்றாலே -குறிப்பாக, விலைமாதர்கள் என்றாலே- கடுமையாக வெறுப்பவர். கொலை செய்யும் மனப்போக்குடையவர். அவர் 1889 மார்ச் மாதம் மனநோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவர் கொலைகளைச் செய்திருக்கக்கூடும் என்பதற்கு பலமான சந்தர்ப்ப சாட்சியங்கள் இருக்கின்றன.

மூன்றாவதாக சந்தேகத்திற்குரியவர், மைக்கேல் ஆஸ்ட்ரோ என்ற ரஷ்ய டாக்டர். இவர் ஏற்கெனவே தண்டனைக் கைதியாக இருந்தவர். கைதியாக இருந்தபோது இவருக்கு இருந்த கொலைவெறியால் மனநல மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டவர். இவருடைய பின்னணி மிகவும் மோசமானது. இவர் கொலைகள் நடந்தபோது எங்கிருந்தார் என்று அறிய முடியவில்லை.

ஸ்காட்லாண்ட் யார்டினால் சந்தேகிக்கப்பட்டவர்கள் இவர்கள்தான்.

ஆனால், 1970இல் இன்னொரு முக்கியமான நபரின் பெயர் சேர்க்கப்பட்டது. டாக்டர் தாமஸ் ஸ்டோவெல் என்பவர், தான் உண்மையான குற்றவாளியைக் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறினார். அவர் ராணி விக்டோரியாவின் தனி மருத்துவரான சர் வில்லியம் கல் ராணி விக்டோரியாவிற்கு எழுதிய கடிதங்களிலிருந்து உண்மையான குற்றவாளியைக் கண்டுபிடிக்க முடிந்தது என்று சொல்கிறார். அவர் தனது கட்டுரை முழுவதிலும் குற்றவாளி என சந்தேகிக்கப்படுபவரை ‘S.’ என்றே குறிப்பிடுகிறார். அந்தக் கட்டுரையிலிருந்து, அவர் குறிப்பிடுவது ராணி விக்டோரியாவின் பேரனான கிளாரன்ஸ் டியூக்கைத்தான் என்று தெளிவாகத் தெரியும். ஆனால், ராணியின் குடும்பத்தை சங்கடத்திற்கு உள்ளாக்க விரும்பவில்லை என்பதால் இதை ஒப்புக் கொள்ள மறுத்தார். இந்தக் கட்டுரையை வெளியிட்ட சில நாட்களில் அவர் இறந்துபோனார். அவர் எழுதிய விவரங்கள் அவரது குடும்பத்தாரால் எரிக்கப்பட்டன.

உண்மையான குற்றவாளி யார்?

About The Author