ஜாக் எனும் மனித மிருகம் (6)

1888இல், இந்தக் கொலைகள் நடந்த காலக்கட்டத்தில் போலிஸ் தீவிரமாகத் துப்புத் துலக்கியது. ஒவ்வொருவர் வீட்டுக்கும் சென்று சோதனை நடத்தப்பட்டது. 97 பேர்களுக்கு மேல் சந்தேகத்தின் காரணமாகக் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார்கள். ஆனால், இன்னும் கொலையாளி இவர்தான் என உறுதியாகச் சொல்ல முடியவில்லை!

ஆனால், ஜாக் என்று சொல்லப்படும் மனித மிருகத்தால் செய்யப்பட்ட இந்தத் தொடர் கொலைகள் பற்றி 126 ஆண்டுகள் கடந்து இன்னமும் பரபரப்புக் குறையாமல், யார் அந்தக் குற்றவாளி என யூகங்களும் துப்புத் துலக்கும் முயற்சிகளும் தொடர்கின்றன. மக்களது ஆர்வத்தை ஊதிப் பெரிதாக்க, இதற்கென்றே பல வலைத்தளங்கள்! ஜாக் தி ரிப்பர் உலா, மியூசியம் என்று இது ஒரு வணிகத் தந்திரமாக இணையத்தில் பயன்பட்டு வருகிறது. பல துப்பறியும் நிறுவனங்கள் ‘இவர்தான் கொலை செய்திருக்கிறார்’ என்றும் செய்திகளை வெளியிட்டு ஆர்வத்தைத் தூண்டி வருகின்றன.

இதைவிடப் பல தொடர் கொலைகளைச் செய்தவர்கள் பற்றி மறந்து விட்ட நிலையில் ஜாக்கிற்கு மட்டும் இத்தனை பரபரப்பு ஏன்? அவன் செய்த கொலைகளின் கொடூரம்! குறிப்பிட்ட சில தினங்களில் செய்த விதம்! அவன் எழுதப்பட்டதாகக் கருதப்படும் கடிதங்கள்! இவைதான் இந்த அணையாத ஆர்வத்திற்குக் காரணமாக இருக்க வேண்டும்.

முக்கிய கொலையாளிகளாகக் கருதப்பட்ட எம்.ஜே.ட்ருயிட், கோஸ்மின்ஸ்கி, மைக்கேல் ஆஸ்ட்ரோ, கடைசியாக ராணி விக்டோரியாவின் பேரனான கிளாரன்ஸ் ட்யூக் என்பவர்களைப் பற்றிப் பார்த்தோம்.

கொலை நடந்து 126 ஆண்டுகள் கடந்த பிறகு, 2014 செப்டம்பரில் எட்வேர்ட்ஸ் எனும் அமெச்சூர் துப்பறிவாளர், கொலைகளைச் செய்தது யார் என்பதைத் தான் சந்தேகத்திற்கிடமின்றிக் கண்டுபிடித்து விட்டதாகக் கூறுகிறார். இது பற்றிய ஒரு புத்தகத்தையும் வெளியிட்டிருக்கிறார்.

ரஸ்ஸல் எட்வேர்ட்ஸ், ரஷ்யர்களின் கொடுமையால் போலந்து நாட்டைவிட்டு வெளியேறி லண்டனில் குடியேறிய கோஸ்மின்ஸ்கிதான் குற்றவாளி என்று திட்டவட்டமாகக் கூறுகிறார். லண்டனின் வடக்குப் பகுதியில் வசிக்கும் எட்வேர்ட்ஸ் துப்பறிவதைத் தொழிலாகக் கொண்டவர் அல்ல. அவர், ஜாக்கின் பயங்கரத் தொடர்கொலைகள் தன் ஆர்வத்தை மிகவும் ஈர்த்ததாகவும், அதனால் தன்னுடைய ஓய்வு நேரங்களில் இது பற்றித் துப்பறிந்து வந்ததாகவும் கூறுகிறார்.

ஜாக்கினால் கொலை செய்யப்பட்ட கேதரின் எட்டோசின் உடலுக்கு அருகிலிருந்த ஒரு சால்வை 2007ஆம் ஆண்டு ஏலத்திற்கு வந்தது என்றும், அதை வாங்கி மரபணுச் சோதனை செய்ததில் கொலையாளி கோஸ்மின்ஸ்கிதான் என்று உறுதியாக அறிய முடிந்ததாகவும் கூறுகிறார். மூலக்கூறு உயிரியல் பற்றி ஆராய்ச்சி செய்வதில் வல்லுநரான டாக்டர் ஜாரி லூஹிலெய்னன் மரபணுச் சோதனை செய்து கொலையாளியை அடையாளம் காண உறுதுணையாக இருந்தார் என்று சொல்கிறார்.

14 ஆண்டுகள் தீவிரமாக இதில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததாகச் சொல்லும் எட்வேர்ட்ஸ், "என் கையிலிருக்கும் இந்தச் சால்வையின் மூலம் இங்கிலாந்தின் குற்ற சரித்திரத்திலேயே கண்டுபிடிக்க இயலாத ஒரு குற்றவாளியை நான் கண்டுபிடித்துவிட்டேன். இது ஒரு பொய்; சரியான ஆதாரமில்லை என்று சொல்பவர்களைப் பற்றிக் கவலையில்லை" என்கிறார்.

ஆரோன் கோஸ்மின்ஸ்கி போலந்து நாட்டிலிருந்து, அங்கு ரஷ்ய ஆட்சியின் கொடுமை தாங்காமல் இங்கிலாந்தில் வந்து தஞ்சம் அடைந்தவன். இந்தக் கொலைகள் நடந்தபோது அவனுக்கு 23 வயதிருக்கும். அவன் 53 வயதாக இருக்கும்போது மனநல மருத்துவமனை ஒன்றில் இறந்துபோனான். கோஸ்மின்ஸ்கி தன் இளம்பருவத்தில் ரஷ்யர்களால் நடத்தப்பட்ட கொடுமைகளினால் பாதிக்கப்பட்டவன். பாலியல் வன்முறைகள், இரக்கமற்ற கொலைகள் ஆகியவற்றால் அவன் மனதில் தீராத வெறுப்பு ஏற்பட்டிருக்கலாம். அவன் 46 வயதான தாய்க்கு வேண்டாத மகனாகப் பிறந்தவன். வளர்ப்புத் தந்தையால் பாலியல்ரீதியாகக் கொடுமைப்படுத்தப்பட்டவன். அந்த வெறி அடங்காததுதான் அவனது தொடர் கொலைகளுக்கு மனரீதியான காரணம். இந்தக் காரணங்களினால் அவன்தான் குற்றவாளியாக இருக்கவேண்டும் என்று கொலை செய்தவர்களின் சந்தேகப் பட்டியலில் அவன் பெயர் ஏற்கெனவே முன்னிலையில் இருந்தது. முதலில் அவன் சந்தேகம் காரணமாகக் கைது செய்யப்பட்டுப் பின்னர் விடுவிக்கப்பட்டிருக்கிறான். இப்போது அவன்தான் கொலை செய்தான் என்று தீர்க்கமாகச் சொல்லும்படியான அந்தத் தடயம்தான் என்ன?

இதற்கான எல்லா ஆதாரமும் அந்த ஒரு சால்வையில்தான் அடங்கியிருக்கிறது. அதைத் தான் ஏலத்தில் எடுத்ததாகச் சொல்லும் எட்வேர்ட்ஸ், அந்தச் சால்வை கேதரின் எட்டோஸ் கொலை செய்யப்பட்ட இடத்திலிருந்து எடுக்கப்பட்டதுதான் என்பதை நிரூபிக்க ஒரு கடிதத்தையும் ஆதாரமாகக் காட்டுகிறார். கொலை நடந்த நேரத்தில் அந்த இடத்தில் போலிஸ் சார்ஜென்ட்டாக இருந்த அமோஸ் சிம்சன் என்பவர் அந்தச் சால்வையைத் தன் மனைவியிடம் கொடுத்ததாகச் சொல்கிறார். அவரது மனைவி, ரத்தம் தோய்ந்த சால்வையைப் பார்த்து பயந்து அதைத் தொடக்கூட இல்லையாம். அது சந்ததிகள் வழியாகத் தொடர்ந்து, பின்னர் ஏலத்திற்கு வந்து, எட்வேர்ட்ஸ் அதை 2007ஆம் ஆண்டு ஏலத்தில் எடுத்தாராம்.

இந்த விலையுயர்ந்த சால்வையில் எட்டோசின் ரத்தக் கறையுடன் ஜாக் எனச் சொல்லப்பட்ட கொலையாளியின் விந்தணுக்களும் இருந்தன. சாதாரண மரபணுச் சோதனை மூலம் இதைச் சோதிக்க முடியாது. மூலக்கூறு மருத்துவர் ஜாரி லூஹிலெய்னன் நுண்ணிய மரபணுச் சோதனை செய்ததாகச் சொல்கிறார். சால்வையின் ஒவ்வோர் இழையும் சோதிக்கப்பட்டதாகச் சொல்லும் இவர், இதற்காக அவர் எட்டோசின் சந்ததியில் வந்த ஒருவரின் மரபணுவையும், கோஸ்மின்ஸ்கியின் வழிவந்த சந்ததியைச் சேர்ந்தவரின் மரபணுவையும் தனது நுண்ணிய மரபணுச் சோதனை மூலம் பரிசோதித்ததில் இரண்டுமே ஒத்துப்போனது என்றும், எனவே கொலை செய்தது நிச்சயமாக கோஸ்மின்ஸ்கிதான் என்றும் கூறுகிறார். எட்வேர்ட்ஸ், கொலையாளியின் அடையாளத்தைக் கண்டுபிடிப்பதற்காக 14 ஆண்டுகள் செலவழித்ததாகவும், மரபணுச் சோதனை மூன்றரை ஆண்டுகள் நடந்ததாகவும் சொல்கிறார்.

ஆனால், இது பற்றிப் பல சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன. சால்வை 126 ஆண்டுகளில் யார் கையும் படாமல் இருந்தது; அது ஒருபோதும் சுத்தம் செய்யப்படவில்லை என்று வைத்துக் கொண்டாலும் கூட, சந்ததிகளிடமிருந்து எடுத்த மரபணுக்களையும் சால்வையிலிருந்து எடுத்தவற்றையும் பரிசோதனை செய்யும்போது அது கெட்டிருக்க முடியாது என்பதற்கு ஆதாரம் என்ன இருக்கிறது? தொன்மையான பழங்குடி மக்களின் காலத்தை அறிவதற்காக மரபணு ஆராய்ச்சி செய்பவர்கள் தாங்கள் பரிசோதனை செய்யும் மாதிரிகள் கெட்டுவிடக்கூடாது என்பதற்காகப் பல முறை சோதித்துப் பார்ப்பார்கள். பின்னர்தான் முடிவுக்கு வருவார்கள். ஆனால், மூலக்கூறு ஆராய்ச்சியாளர் ஜாரி இதற்கான முன்னெச்சரிக்கைகளை எடுத்ததாகத் தெரியவில்லை. மேலும், நுண்ணிய மரபணு என்பது சந்தேகத்திற்குரிய ஒன்று. ரத்த மாதிரிகளைப் போலவே இந்த மரபணுக்கூறுகள் ‘இவருடையதுதான்’ என்று அறுதியிட்டுச் சொல்ல முடியாது. இதே போல மரபணுக்கள் இன்னும் பல்லாயிரக்கணக்கானவர்களிடம் இருக்கலாம். அத்துடன், ஜாரி தன்னுடைய கண்டுபிடிப்பு முறைகளைப் பற்றி சக அறிவியலாளர்களுக்கான ஆராய்ச்சிப் பத்திரிகைகளில் கூட வெளியிடவில்லை. அதனால் எட்வேர்ட்சின் முடிவு சந்தேகத்திற்குரியது என்று பலராலும் கருதப்படுகிறது.

‘ரிப்பர் உலா’ என ஒன்றை நடத்தும் ரிச்சர்ட் காப் என்பவர் ஒரு பேட்டியில், "எட்வேர்ட்ஸ் குறிப்பிடும் அந்தச் சால்வை 126 வருஷங்களில் பலரது கைக்கு மாறியிருக்கும். பலர் அதைத் தொட்டிருப்பார்கள், மூச்சு விட்டிருப்பார்கள், எச்சில் உமிழ்ந்திருக்கலாம், என்னுடைய மரபணு கூட அதில் இருக்கலாம். கோஸ்மின்ஸ்கி பல விலைமாதர்கள் வீட்டிற்குத் தன் வாழ்நாளில் சென்றிருக்கக்கூடும். நான் அதைப் பரிசோதித்துப் பார்த்தால் கிழக்கு லண்டனில் வசித்த இன்னும் 150 பேருடைய மரபணுக்களுடன் ஒத்துப் போகலாம். அதனால் பழைய சால்வையை வைத்துக் கொண்டு ஒரு தீர்மானத்திற்கு வர முடியாது" எனக் கூறுகிறார்.

எட்டோசின் கொலை நடந்த நகரத்தில் அமோஸ் சிம்ப்சன் என்ற அதிகாரி யாருமே இல்லை. அவர் 25 மைல்கள் தொலைவிலிருந்த நகரக் காவல் பிரிவில் இருந்தார். அதனால் அவர் சால்வையை வைத்திருந்தார் என்பது நம்ப முடியாதது. எட்டோசிடமும் அன்றைய செலவுக்கே பணம் கிடையாது; கோஸ்மின்ஸ்கியும் பணக்காரனல்ல; அப்புறம் எப்படி மிக விலையுயர்ந்த சால்வை அந்த இடத்தில் இருந்திருக்க முடியும்? பொலிஸ் குறிப்புக்களில் சால்வையைப் பற்றி ஒன்றுமே சொல்லப்படவில்லை என்று கேள்வி எழுப்புபவர்களும் உண்டு.

மரபணுச் சோதனைகள் பல குற்றங்களைக் கண்டுபிடிக்கவும், நிரபராதிகள் தண்டிக்கப்படாமல் இருக்கவும் உதவியாக இருந்திருக்கின்றன. இந்தச் சோதனைகள் தூக்குத் தண்டனை பற்றிய பல விவாதங்களை ஏற்படுத்தியிருக்கின்றன. ஆனாலும், இது குறையே இல்லாத சோதனை என்று சொல்ல முடியாது என்கிறார் தடயவியல் வல்லுநர் டாக்டர் கரோல் மெய்ன். DNA என்பதை Do Not Assume என்றுதான் கொள்ள வேண்டும். அது எல்லாரும் நினைப்பதுபோலத் தவறே ஏற்பட வழியில்லாத பரிபூரணச் சோதனை அல்ல. அண்மைக் காலத்தில் எடுக்கப்பட்ட மரபணு மாதிரிகளுக்கே இந்த நிலை என்றால் நூறு ஆண்டுகள் பழையது என்றால், இந்தச் சோதனை சரியாக இருக்கும் என்பதற்கு வாய்ப்புக்கள் இல்லை என்றே சொல்ல வேண்டும் என அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.

ஆக, இன்னும் அந்த மனித மிருகம் அடையாளம் காணப்படவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்! இன்றும் ஜாக்கின் மர்மம் நீடிக்கிறது.

(முற்றும்)

About The Author