ஜாக் என்ற மனித மிருகம் (2)

இரண்டாவது கொலை!

இந்த முறை பக்ஸ்ரோ எனும் இடத்திலிருந்து அரை மைல் தொலைவிலிருந்த 29, ஹன்ஸ்பரி தெருவில் நடந்தது அது.

ஒரு தங்கும் விடுதி. அதன் பின்பக்கத்தில் காலை ஆறு மணி அளவில் ஒரு பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த இடத்திற்கு மிக அருகாமையில்தான் காய்கறி, பழம் விற்கும் மார்க்கெட் இருந்தது. அந்த இடத்தில் எப்போதும், வருவோரும் போவோருமாக ஜனநடமாட்டம் அதிகமாகக் காணப்படும். அந்த விடுதி வழியாக மார்க்கெட் செல்லும் ஒரு பெண், கொல்லப்பட்டவர் யாரோ 40 வயதான ஒரு ஆளுடன் பேரம் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்திருக்கிறார். தலையில் தொப்பி வைத்திருந்த அவன் அவளிடம் “சம்மதமா?” என்று கேட்டதையும், அவள் “சரி” என்று பதில் சொல்வதையும் இவர் கேட்டிருக்கிறார்.

இதைப் பார்த்த அந்தப் பெண் சட்டை செய்யாமல் மார்க்கெட்டிற்குச் சென்று விட்டார். மார்க்கெட்டின் ஜனசந்தடியில், அந்த இருவரும் விடுதியின் பின்பக்கம் கதவை மூடிச் சென்றதை யாரும் கவனிக்கவில்லை. விடுதியில் தங்கியிருந்த 17 பேர்களில் ஒருவர் அரை மணி நேரத்திற்குப் பிறகு பின்பக்கம் சென்றபோது கொல்லப்பட்ட பெண்ணின் உடலைப் பார்த்திருக்கிறார். பிணத்தை மறைத்து வைக்க வேண்டும் என்று கொலைகாரன் எதுவும் முயற்சி எடுத்ததாகத் தெரியவில்லை. வெட்டவெளியில் தோட்டவேலிக்குப் பக்கத்திலிருந்த மாடிப்படிகளின் கீழே அந்தப் பிணம் இருந்தது. அந்தப் பெண்ணின் கைகள், முகம் முழுவதும் ரத்தம்! கைக்குட்டை போன்ற ஒரு துணி கழுத்தைச் சுற்றிக் கட்டப்பட்டிருந்தது. அந்தக் கழுத்து முழுவதும் அரக்கத்தனமாக அறுக்கப்பட்டிருந்தது – அப்போதே அந்தப் பெண் செயலிழந்திருக்க வேண்டும். அவள் கால்கள் விரிக்கப்பட்டிருந்தன. அவளது குடல் முழுதுமாக எடுக்கப்பட்டிருந்தது.

பிணம் கண்டெடுக்கப்பட்ட சில நிமிஷங்களில் போலிஸ்காரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தடைந்தனர். ஒரு சர்ஜன் வந்து உடலைச் சோதனையிட்டார். அதற்குள் நூற்றுக் கணக்கானவர்கள் அந்த இடத்தைச் சுற்றிக் கூடிவிட்டார்கள். இந்தக் கொலை மக்களிடையே மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. கொலை நடந்த இடத்தைப் பார்க்கப் பல நாட்களுக்கு மக்கள் கூட்டம் பெருகிக் கொண்டே இருந்தது. இதையே சாதகமாக வைத்து, கொலை நடந்த இடத்தை வேடிக்கை பார்க்க வசதியாக இருக்கும் அறைகளை வாடகைக்கு விட்டுப் பணம் சம்பாதிப்பதில் விடுதியாளர்கள் குறியானார்கள்.

கொலை நடந்த இடத்தைச் சுற்றிச் சோதனை போட்டதில் எந்தவித உபயோகமான தடயமும் கிடைக்கவில்லை. ஏதோ தானம் செய்வதைப்போலக் கொலைகாரன் சில சில்லரைகளைப் பிணத்தின் கால்களின் அடியில் வீசியிருந்தான். பக்கத்தில் ராணுவ முத்திரை பதித்த ஒரு கவரும், ஒரு காகிதத்தில் சுற்றப்பட்ட இரண்டு மாத்திரைகளும், தோலாலான ஒரு மேல் அங்கியும் இருந்தன. முதலில், அந்த இடத்தில் வசிக்கும் ‘தோல் அங்கிக்காரன்’ (Leather Apron) என்றழைக்கப்படும் ஒருவனின் வேலையாகத்தான் இது இருக்கும் என்று நினைத்தார்கள். அவன் மேல் ஏற்கெனவே நிகோலஸ் கொலையில் போலிசுக்கு சந்தேகம் இருந்தது. அந்த ஆளை உடனடியாகத் தேடிக் கண்டுபிடித்துக் கைது செய்தார்கள். ஆனால், அவனை விசாரித்தபோது அவனுக்கும் நடந்த இரண்டு கொலைகளுக்கும் சம்பந்தமில்லை என்று தெரிய வர, அவன் விடுதலையானான்.

இறந்தவள் பெயர் ஆனி சாப்மன் என்று விசாரணையில் அடையாளம் காணப்பட்டது. வின்ட்சர் எனும் இடத்திலுள்ள ஒரு குதிரை வண்டிக்காரனைத் திருமணம் செய்திருந்த அவள் நாலு வருஷங்களுக்கு முன்னால் கணவனை விட்டுப் பிரிந்து இங்கு குடியேறியிருக்கிறாள். சமீப காலமாக இரும்புச் சல்லடை செய்து வியாபாரம் செய்யும் ஒருவனுடன் வாழ்ந்து வந்தாள். அதனால் அவளைச் ‘சல்லடைக்காரி’ என்று சொல்வார்கள். அவளது ஒரு குழந்தை மாற்றுத் திறனாளிகளுக்கான ஒரு விடுதியில் இருந்தது. இன்னொரு குழந்தை ஃபிரான்சில் ஏதோ ஒரு விடுதியில் இருந்தது. நீண்ட தடித்த உதடுகளோடு, இரண்டு முன்பற்களும் விழுந்திருந்த நிலையில் இருந்த 45 வயதான ஆனி, பொருட்களையும் உடம்பையும் விற்றுப் பிழைப்பை ஓட்டிக் கொண்டிருந்தாள். இறந்த அந்த வாரம்தான் யாரிடமோ ஒரு சோப்புக்கட்டிக்காக, குடித்துவிட்டுச் சண்டை போட்டு உதை வாங்கி, கண்களிலும் மார்பிலும் அடிபட்டிருந்தாள். கொஞ்ச நாள் வாங்கிய அடியால் சுருண்டிருந்த அவள், ஒரு நாள் பேசும்போது, இப்படியே சோர்ந்து இருப்பதில் பிரயோசனமில்லை. பிழைப்பை நடத்த வழி செய்ய வேண்டும்" என்று சொன்னாளாம்.

அவள் கொலை செய்யப்படுவதற்குச் சில மணி நேரம் முன்பாக, பணம் தராத காரணத்தால் விடுதியிலிருந்து துரத்தி அடிக்கப்பட்டிருந்தாள். அவள் கடைசியாக விடுதியிலிருந்து செல்லும்போது சொன்னது, "என் அறையை வாடகைக்கு விட்டு விடாதே! நான் திரும்பி வருவேன்" என்பதுதான். ஆனால், விடுதியை விட்டுச் சென்ற நான்கு மணி நேரங்களில் அவள் இந்த உலகத்தைவிட்டே சென்றுவிட்டாள்.

போலிசுக்கு மக்களிடமிருந்து நெருக்கடி அதிகமாகியது. கொலையாளியைக் கண்டுபிடிக்காததால் அவர்கள் போலிசைக் கடுமையாக விமரிசிக்கத் தொடங்கினார்கள். ஊடகங்களும் தங்கள் பங்கிற்குக் கொலையைப் பற்றிப் பல சந்தேகங்களைக் கிளப்பின. மார்க்கெட்டில் உள்ள வியாபாரிகளுக்குப் போலிசிடம் நம்பிக்கையே இல்லாமல் போனதால், அவர்களே தங்களுக்குள் காவலுக்கு ஏற்பாடு செய்து கொள்ள ஆரம்பித்தார்கள். கொலையாளியைக் கண்டுபிடிப்பவர்களுக்குத் தக்க சன்மானம் அளிக்கப்படும் என்று போலிஸ் அறிவித்தது. ஸ்காட்லன்ட் யார்ட் கொலைகள் சம்பந்தமாக விசாரணையைத் தொடர்ந்தபோது நூற்றுக்கணக்கான கடிதங்கள் அவர்களுக்கு வந்து குவிந்தன.

பிண ஆய்வாளருக்கு வந்த ஒரு கடிதத்தில் அமெரிக்கர் ஒருவர் உடல் ஆராய்ச்சிக்காகக் கருப்பையை மாதிரியாகக் கொண்டு வந்து கொடுப்பவர்களுக்கு ஒரு கருப்பைக்கு இத்தனை பணம் என்று கொடுப்பதாகவும், அந்த அமெரிக்கர் தான் பிரசுரிக்கும் உடலியல் புத்தகத்தோடு இலவச இணைப்பாக ஒரு கருப்பை உறுப்பையும் கொடுக்க விரும்பினார் என்றும் சொல்லப்பட்டிருந்தது! பிண ஆய்வாளர் இறந்த உடலிலிருந்து கருப்பை உறுப்பு எடுக்கப்பட்டிருப்பதால் ‘பணம் கிடைக்குமே’ என்ற ஆசை காரணமாகவும் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தன் கருத்தைக் கூறினார். இதுதான், கொலையாளி மருத்துவம் படித்தவனாகவோ அல்லது மருத்துவம் பற்றி நன்கு அறிந்தவனாகவோ இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தை முதலில் ஏற்படுத்தியது.

காவல்துறையில் பலர், இந்த யூகம் சரியாக இருக்கக்கூடும் என்று கருதினார்கள். அடுத்த கொலை எப்போது நடக்கப் போகிறதோ என்ற திகிலும் அச்சமும் அனைவரையும் தொற்றிக் கொண்டு காற்று வேகத்தில் பரவியது. போலீசார் பாதுகாப்பை அதிகப்படுத்தினார்கள். பயந்தபடியே அடுத்த கொலை நிகழ்ந்தது – ஒரு கொலையல்ல – இரட்டைக் கொலைகள்!…

–தொடர்வான்…

About The Author