டயாபடீஸைத் தெரிந்து கொள்வோமே!

டயாபடீஸ் என்றால் என்ன?

டயாபடீஸ் என்றால் உங்கள் ரத்த குளூகோஸ் அல்லது ப்ளட் சுகர் அளவு மிக அதிகமாக இருக்கிறது என்று அர்த்தம்.உங்கள் உடலுக்கு க்ளூகோஸ் எனர்ஜி மிகவும் தேவை. ஆகவே, உங்கள் ரத்தத்தில் க்ளூகோஸ் கொஞ்சம் இருக்கிறது. ஆனால் அதிக அளவிலான க்ளூகோஸ் உங்களுக்கு ஆபத்தை விளைவிக்கும்.

இந்த க்ளூகோஸ் உங்கள் உணவிலிருந்தே உடலுக்கு வருகிறது. உங்கள் கல்லீரலிருந்தும் தசைகளிலிருந்தும் கூட க்ளூகோஸ் உருவாகிறது. உங்கள் ரத்தம் க்ளூகோஸை உடலில் உள்ள அனைத்து செல்களுக்கும் எடுத்துச் செல்கிறது. இன்சுலின் என்பது ஒரு கெமிக்கல். இது ஒரு ஹார்மோன் என்றும் சொல்லப்படும். இது பாங்கிரியாஸில் (கணையத்தில்) உருவாகிறது. இது இன்சுலினை ரத்தத்தில் வெளிப்படுத்துகிறது.

இன்சுலின் உணவிலிருந்து க்ளுகோஸை செல்களில் அடைய உதவி செய்கிறது. உடலுக்கு தேவையான இன்சுலின் இல்லையென்றால் அல்லது இன்சுலின் அதற்குரிய விதத்தில் வேலை செய்யவில்லை என்றால் க்ளூகோஸ் உங்களின் செல்களைச் சென்று அடையாது. அது ரத்தத்தில் அப்படியே இருக்கும். அதனால் உங்கள் ரத்த க்ளூகோஸ் அளவு மிக அதிகமாகி டயாபடிஸூக்கு முன் உள்ள நிலை (ப்ரீ – டயாபடீஸ்) அல்லது டயாபடீஸை ஏற்படுத்தும்.

ப்ரீ – டயாபடீஸ் என்றால் என்ன?

இதில் ப்ளட் சுகர் அளவு சாதாரணத்திற்கும் அதிகமான அளவு இருக்கும். ஆனால் டயாபடீஸ் என்ற நோயை அறிவதற்குத் தேவையான அளவில் இருக்காது. இப்படி இருப்பவர்களுக்கு டைப் 2 எனப்படும் டயாபடீஸ் வருவதற்கான அதிக அபாயம் உண்டு. ஆனால் இந்த நிலை கண்டறியப்பட்டால் உடனடியாக டயாபடீஸ் ஏற்படாமல் தடுக்க நிறைய வாய்ப்புண்டு. எடையைக் குறைத்தல், மிதமான உடல் இயக்கம் இவற்றின் மூலம் டைப் 2 வராமல் தடுத்து விடலாம். சாதாரண இயல்பான நிலையைக் கூட எய்தி விடலாம்.

டயாபடீஸ் வியாதிக்கான அறிகுறிகள் யாவை?

•  அதிக தாகத்துடன் இருத்தல்
•  அடிக்கடி சிறுநீர் கழித்தல்
•  சோர்வாக உணர்தல் அல்லது பசி இருப்பதாக உணர்தல்
•  முயற்சி இன்றியே எடை குறைதல்
•  புண்கள் வருவதும் அவை மெதுவாக ஆறுவதும்
•  உலர்ந்த தோல் மற்றும் தோல் அரிப்பு
•  பாதங்கள் மரத்துப் போதல்
•  கண் பார்வை மங்கல்
•  இவற்றில் ஏதேனும் ஒன்றோ, பலவோ இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும்.

டயாபடீஸில் எத்தனை வகை உண்டு?

டைப் 1, டைப் 2, கெஸ்சேஷனல் டயாபடிஸ் என்று மூன்று வகை உண்டு.

டைப் 1 டயாபடீஸ் இன்சுலின் சார்ந்த ஒன்று. சிறுவர்கள், இளைஞர்களுக்கு வருவது. இது உள்ளவர்களுக்கு கணையத்தில் உள்ள பீடா செல்கள் இன்சுலினை சுரப்பதில்லை. ஏனெனில் உடலின் நோய்த் தடுப்பு ஆற்றல் அமைப்பு அவற்றைத் தாக்கி அழித்து விடுகிறது. இதைப் போக்க இன்சுலின் எடுத்துக் கொள்ளல், வேறு சில மருந்துகளை எடுத்தல், உணவு வகைகளை முறைப்படுத்தல், உடல் ரீதியாக நன்கு இயங்குதல், ஆஸ்பிரின் சாப்பிடுதல், கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தல் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும்.

டைப் 2 டயாபடீஸ் இன்சுலினைச் சாராத ஒன்று. சாதாரணமாக பரவலாகக் காணப்படுவது. எந்த வயதிலும் வருவது. இன்சுலின் எதிர்ப்பில் ஆரம்பித்து கொழுப்பு, தசை, கல்லீரல் செல்கள் ஆகியவை இன்சுலினை சரியாகப் பயன்படுத்தாத நிலை ஏற்படும். கணையம் அதிகமதிகம் இன்சுலினைச் சுரக்க வேண்டிய நிலை ஆரம்பத்தில் ஏற்படும். ஆனால், நாள் ஆக ஆக அப்படிச் செய்ய முடியாத நிலை வரும். அதிக எடை, நல்ல இயக்கமின்மை ஆகியவை டைப் 2 டயாபடீஸை ஏற்படுத்தும். டயாபடீஸுக்கான மருந்துகளை உட்கொள்ளல், உணவு வகைகளை முறைப்படுத்தல் ஆஸ்பிரினை தினமும் எடுத்தல், நல்ல உடல் இயக்கம், ப்ளட் ப்ரஷரை கட்டுப்படுத்தல், கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தல் ஆகியவை மூலம் இதைக் குணப்படுத்தலாம்.

கெஸ்சேஷனல் டயாபடிஸ் பெண்களின் கர்ப்பகாலத்தில் வருவது. குழந்தை பிறந்த பின்னர் பெரும்பாலும் இது போய் விடும். ஆனால் பின்னால் டைப் 2 டயாபடீஸை அந்தப் பெண்மணிகளுக்கு ஏற்படுத்த வாய்ப்புகள் உண்டு.

About The Author

1 Comment

Comments are closed.