தமிழ் என்னும் விந்தை! (23)

திரிபங்கி – 1

ஒரு பாடலிலேயே மூன்று பாடல்கள் வர முடியுமா? தமிழ் என்னும் விந்தையில் மட்டும் முடியும்!
திரி என்றால் மூன்று என்று பொருள். பங்கம் என்றால் பேதம். ஆக திரிபங்கி என்றால் மூன்று பேதம் அல்லது பங்கம் உடையது என்று பொருளாகிறது.

இதற்கு தண்டியலங்காரம் இரு உதாரணங்களைத் தருகிறது. இந்த உதாரணங்களையே பரிதிமால் கலைஞரும் தன் நூலில் விளக்கியுள்ளார்.

பாடல்களைப் பார்ப்போம்.

"ஆதரந் தீரன்னை போலினி யாய் அம்பி காபதியே!
மாது பங்காவன்னி சேர் சடையாய் வம்பு நீண்முடியாய்!
ஏதமுய்ந் தாரின்னல் சூழ்வினை தீரெம்பி ரானினியார்!
ஓது மொன்றே உன்னு வாரமு தேஉம்பர் நாயகனே!"

இதன் பொருள்:-

அன்னையே போன்று இனிமையாய் விளங்குபவனே! அம்பிகையின் நாயகனே! உமாதேவியை இடப்பாகத்தில் கொண்டு விளங்குபவனே! வன்னிப் பத்திரத்தைச் சடைமுடியில் தரித்தவனே! மகுடம் போன்ற சடை முடியுடையவனே! குற்றம் நீங்கி உய்ந்தவர் பிறவித் துன்பத்தைத் தரும் வினையைத் தீர்ப்பவனே! பேரின்பத்தினை உடைய ஞானிகளால் போற்றப்படும் ஒப்பற்ற பொருளே! நின்னை நினைப்பவர்க்கு அமுதமாக இருப்பவனே! தேவர்களின் நாயகனே! நின்னை ஏத்துதும் (போற்றுவதாக)!

இனி இப்பாடலை மூன்று விதமாகப் பிரிப்பதைப் பார்ப்போம்:

1. "ஆத ரந்தீர்
மாது பங்கா
ஏதம் உய்ந்தார்
ஓதும் ஒன்றே!"

2. "அன்னை போல் இனியாய்
வன்னி சேர் சடையாய்
இன்னல் சூழ் வினைதீர்
உன்னுவார் அமுதே!"

3. "அம்பிகா பதியே
வம்புநீண் முடியாய்
எம்பிரான் இனியார்
உம்பர் நாயகனே!"

எப்படி பொருளுடன் கூடிய அற்புதமான மூன்று பாடல்கள் ஒரே பாடலில் மலர்ந்துள்ளன, பார்த்தீர்களா! கட்டளைக் கலித்துறையில் அமைந்த பாடல் இது.

இப்பொழுது திரிபங்கியைக் கட்டங்களில் அமைத்துப் பார்ப்போம்:-

கிடைமட்டமாகப் படித்தால் நான்கு வரிகளில் உள்ள பாட்டை செங்குத்தாக மூன்று வரிசைகளில் படித்தால் மேலே உள்ள மூன்று பாடல்கள் மலர்வதைக் காணலாம்!

இதே போன்ற இன்னும் ஒரு வகைப் பாடலைக் கீழே காண்போம்:-

"சங்கந்தா பூணாரந் தாமே கலைதாநற்
புங்கவன்மால் காணாப் புலவுடைய – கங்கரா!
கோணா கலாமதி சேர் கோடீர! சங்கரா!
சோணாசலா சலமே தோ!"

இதன் பொருள்:-

நன்மை புங்கவன் மால் காணா புலவுடைய கம் கரா – நன்மை மிக்க பரிசுத்தனாகிய நான்முகனும் திருமாலும் கண்டறியாத புலால் நாற்றம் வீசும் கபாலத்தை ஏந்தும் கையினை உடையாய்!

கோண் ஆ கலா மதி சேர் கோடீர – வளைவு பொருந்திய பிறைச் சந்திரன் பொருந்திய சடை முடியை உடையாய்!

சங்கரா – சுகத்தைச் செய்பவனே!

சோண அசலா – பொன் மயமாகிய மலையை இடமாகக் கொண்டவனே!

சலம் ஏதோ – கோபம் யாதோ?

சங்கம் தா – (யாம் இழந்த) சங்க வளையல்களைத் தா;

பூண் ஆரம் தா – பூண்டிருந்த மாலைகளைத் தா;

மேகலை தா – (நழுவி ஒழிந்த) மேகலாபரணத்தைத் தா!

இந்த வெண்பாவைக் கீழ்க்காணும் இரு வெண்பாக்களாகப் படிக்கலாம். ஆகவே, இது திரிபங்கி ஆகிறது.

நேரிசை வெண்பா

"பூணாரந் தாமே கலைதாநற் புங்கவன்மால்
காணாப் புலவுடைய கங்கரா – கோணா
கலாமதி சேர் கோடீர சங்கரா சோணா
சலாசலமே தோசங்கந் தா!"

நேரிசை வெண்பா

"சலமேதோ சங்கந்தா பூணாரந் தாமே
கலைதா நற் புங்கவன்மால் காணாப் – புலவுடைய
கங்கரா! கோணா கலாமதிசேர் கோடீர!
சங்கரா! சோணா சலா!"

இந்தத் திரிபங்கி பாடலின் சித்திரம் கீழே தரப்பட்டுள்ளது:

இப்படி ஒரு பாடலில் மூன்று பாடல்கள் வரும் விந்தை நல்ல பல தமிழ்ப் புலவர்களால் செய்யப்பட்டுள்ளது.

–விந்தைகள் தொடரும்…

About The Author