திருமண வரமருளும் திருவீழிமிழலை மாப்பிள்ளை சுவாமி!

இன்று பலர் வயது முப்பத்தி நான்கு ஆகியும் திருமணம் நடக்கவில்லை என்றும், சரியான வரன் அமையவில்லை என்றும் வருந்துகிறார்கள். இந்தப் பட்டியலில் இப்போதெல்லாம் பெண்களை விட ஆண்கள் அதிகமாக இருப்பதைக் காணமுடிகிறது. ஏகப்பட்ட மேட்ரிமோனியல்கள் வந்து இதில் உதவுவதையும் நாம் பார்க்கிறோம். இப்படித் திருமணத் தடையினால் அமைதி இழந்து தவிக்கும் பலருக்கு ‘மாப்பிள்ளை சுவாமி’ என்கிற ‘ஸ்ரீ கல்யாண சுந்தரமூர்த்தி’ திருமணம் நடக்க அருள் பாலிக்கிறார்.

கும்பகோணத்திலிருந்து சுமார் 25 கி.மீ தூரத்தில் உள்ளது திருவீழிமிழலை. காவிரி நதியின் தென் கரைப் பக்கம் இந்த ஸ்தலம் அமைந்துள்ளது. உற்சவர் ஸ்ரீ கல்யாணமூர்த்தி எனும் திருப்பெயரிலும், மூலவர் ஸ்ரீ வீழிநாதர் என்கிற திருப்பெயரிலும் அருள்பாலிக்கின்றனர். அம்பாள் ஸ்ரீ சுந்தர குசாம்பிகை. அம்பாளின் அழகை வர்ணிக்க வார்த்தையில்லை! அத்தனை அழகு! உற்சவரும் அப்படித்தான். ஸ்ரீ கல்யாண சுந்தரமூர்த்தியின் அழகைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம். திருமணத்தின்போது மாப்பிள்ளையின் அழகு கூடும். அதுபோல் இவரும் மிக அழகாக இருப்பதால்தான் இவருக்கு ‘மாப்பிள்ளை சுவாமி’ என்கிற பெயர் ஏற்பட்டதாகக் கூறுகிறார்கள்.

இது ஒரு பரிகார ஸ்தலம். திருமணம் ஆகாத, அல்லது திருமணத் தடை ஏற்படும் மக்கள் இங்கிருக்கும் மாப்பிள்ளை சுவாமியை தரிசித்து நம்பிக்கையுடன் வேண்டிக்கொண்டால் உடனே திருமணம் கைகூடும்.

உற்சவ மூர்த்தியாக விளங்கும் ஸ்ரீ கல்யாண சுந்தரேஸ்வர மூர்த்திக்கும் அம்பிகைக்கும் மாலை சார்த்தி வேண்டிக் கொண்டு பூஜையை ஆரம்பிக்க வேண்டும். பின், தொடர்ந்து 48 நாட்கள் வழிபட வேண்டும். காலையில் எழுந்து, நீராடி,

தேவந்திராணி நமஸ்துப்யம்
தேவந்திரபிரிய பாமினி
விவாஹ பாக்யமாரோக்கியம்... என்று ஆரம்பிக்கும் ஸ்லோகத்தைக் காலை – மாலை இரு வேளைகளிலும் ஓத வேண்டும். இப்படிச் செய்து வர பீ… பீ… டும்… டும்… என்று நாதஸ்வர – கெட்டி மேளம் கண்டிப்பாக ஒலிக்கும்.

கோயிலின் ஸ்தல புராணத்தைப் படித்துப் பார்த்தால், சுந்தரரும், திருஞான சம்பந்தரும் இங்கு வருகை தந்து பாடியிருப்பது தெரிய வருகிறது. இங்கிருக்கும் சிவனை மஹாவிஷ்ணுவும் பூஜித்தாராம். 1008 முழுத் தாமரை மலர்கள் கொண்டு விஷ்ணு பூஜிக்கும்போது ஒரு பூவை சிவன் வேண்டுமென்று மறைக்கச் செய்தாராம். 1008 மலர்கள் சரியாக முடிக்க வேண்டுமே என்று தன் கண்ணை ஒரு தாமரை மலராக பாவித்து அதையே பிடுங்கி அர்ச்சித்தாராம் திருமால். சிவபெருமான் மனம் குளிர்ந்து அவருக்குக் காட்சி அளித்து, கண்ணையும் வழங்கினாராம். இதனால் இந்தக் கோயிலுக்கு வந்தால் கண்களில் ஏற்படும் பிரச்சினைகள் மறைந்து போய்விடுகின்றன.

கோயிலுக்கு எதிரில் தீர்த்தம் உள்ளது. விஷ்ணு வந்து பூஜித்ததால் இதற்கு ‘விஷ்ணு தீர்த்தம்’ என்று பெயர். கோயிலின் உள்ளே திருக்கல்யாண மண்டபம் 118 தூண்களைக் கொண்டு கம்பீரமாக நிற்கிறது. சித்திரை விழாவில் இறைவனுக்கும் அம்பாளுக்கும் விதவிதமான அலங்காரங்கள் புனையப்பட்டு இந்தத் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளும் காட்சி கண்களை விட்டு அகலுவதே இல்லை.

பிராகாரத்தில் ஸ்ரீ படிக்காசு விநாயகர், முருகன், ஸ்ரீ தட்சிணாமுர்த்தி என்று ஒவ்வொரு கடவுளும் அலங்காரத்துடன் வீற்றிருந்து நம்மைக் காக்கின்றனர்.

நல்ல வரன் அமைய விரும்புபவர்கள் உடனே மாப்பிள்ளை சுவாமியைத் தரிசித்து அருள் பெறுங்கள்!

About The Author