திரு.வி.க.நகர் கோமதியம்மன்

கோமதியம்மன் என்றாலோ அல்லது சங்கரநாராயணர் என்றாலோ நம் நினைவுக்கு வருவது சங்கரன்கோயில். ஆனால், அதேபோல் சென்னை பெரம்பூர் அருகில் இருக்கும் திரு.வி.க நகரிலும் மிக அழகான கோயிலில் கோமதியம்மன் இருந்து அருள்பாலிக்கிறார். திரு.வி.க பேருந்துநிலையம் பின்புறத்தில் காய்கறிச் சந்தை இருக்கிறது. இதனருகிலேயே இந்தக் கோமதியம்மன் கோயில் அமைந்திருக்கிறது.

கோயிலுக்குள் நுழைந்தவுடன் பல சித்திரங்கள் நம்மை வரவேற்கின்றன. மூலவர் விமானத்தின் மீது தலபுராணங்களைச் சித்தரிக்கும் பல சித்திரங்கள் இடம் பெற்றுள்ளன. அதிலும் கோமதியம்மனின் "ஆடித்தபசு" சித்திரம் பார்க்கும் பக்தர்களைப் பரவசப்படுத்துகிறது. பின், நாம் காண்பது பலிபீடம். அதையும் அங்கிருக்கும் நந்தி தேவரையும் கடந்தால் மூலவர் சன்னதி உள்ளது. சன்னதியின் இருபுறங்களிலும் துவாரபாலகர்கள் காட்சியளிக்கின்றனர். வலதுபுறம் சங்கரலிங்க ஸ்வாமி மிக அழகாகக் காட்சி தருகிறார். இடதுபுறம் சங்கர நாராயணர் சர்வ அலங்காரங்களுடன் அருள்புரிகிறார் . வைணமும் சைவமும் ஒன்று சேர்ந்து இங்கு இருப்பது மிக சிறப்பு.

இனி கோமதியம்மனைப் பார்க்கலாம். அம்மனின் உயரம் சுமார் ஐந்தடிக்கும் மேல்! கண்கள் நம்மையே பார்த்து ஏதோ பேசுவதைப் போன்றதொருபிரமையை ஏற்படுத்துகிறது. கேட்ட வரங்களை வாரி வழங்கும் இந்த அன்னைக்கு நைவேத்தியமாக நிலக்கடலை படைக்கிறார்கள்.

இங்கு இருக்கும் வினாயகர் மிகவும் ஆனந்தமாக நடனம் புரிகிறார். இவரை நர்த்தன வினாயகர் என்று அழைக்கிறார்கள். மேலும், யோக ஆஞ்சனேயர், யோகநரசிம்மர், காலபைரவர், மகாலட்சுமி, ஏகவல்லியம்மன் முதலியவர்கள் தனித்தனி சன்னதியில் அமர்ந்து அருளாசி வழங்குகிறார்கள்.

தல புராணம்:

பல்லாண்டுகளுக்கு முன் சங்கரன்கோயிலில் வசித்து வந்த ஒரு தம்பதிக்குக் குழந்தை பாக்கியம் கிட்டாமல் மனமொடிந்து போயிருந்தனர். அந்தப் பெண்ணின் மாமியார் தன் மகனுக்கு வேறு திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்து வந்தார். மருமகளோ ஒன்றும் செய்ய முடியாமல் மனதுக்குள்ளே அழுதாள். தன் சகோதரரிடம் தன் துக்கத்தைப் பகிர்ந்துகொண்டாள். அவரும் "கோமதியம்மனை வேண்டிக்கொண்டு விரதம் இருந்தால் அம்மன் கண்டிப்பாக நம்மைக் காப்பாற்றுவார்” என்று கூறினார். அவளும் கடுமையான விரதம் இருந்து கோயிலுக்குச் சென்று மாவிளக்கும் ஏற்றி வேண்டிக்கொண்டாள். அவளுடன் அவளது கணவரும் வேண்டிக்கொண்டார். அவள் மாவிளக்குப் போடும்போது அந்த மாவு உருண்டைக்குள் மூன்று மஞ்சள் கிழங்குகள் தென்பட்டன. அடுத்த மாதமே அவள் தாய்மையடைந்தாள். ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அடுத்தடுத்த ஆண்டுகளில் மேலும் ஒரு ஆண் குழந்தையும், பெண் குழந்தையும் பிறந்தன.

காலச்சக்கரம் உருண்டோடியது. முதல் பையனின் வம்சத்தினர் சென்னையில் குடிபுகுந்தனர். அந்த வம்சத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள். கனவில் கோமதியம்மன் வருகை தந்தாள்.

"மகளே எனக்குச் சென்னையிலும் ஒரு கோயிலை நீங்கள் எழுப்ப வேண்டும் "

"யார் நீங்கள் ? எந்த தேவி நீங்கள்?"

"என்னைத் தெரியவில்லையா..! நான்தான் உங்கள் குலத்தைக் கொடுத்த கோமதியம்மன் "

இதைச் சொல்லியபடியே மறைந்தும் போனாள். மறுநாள் தன் கணவரிடம் இந்தச் சம்பவத்தைத் தெரிவித்தாள் அவள் . எல்லோரும் மகிழ்ச்சியுடன் சரியான இடத்தைத் தேடத்தொடங்கினர். கோமதியம்மன் இருக்கும் இடத்தில் புற்று இருக்கவேண்டுமே என்று அனைவரும் யோசனையில் ஆழ்ந்தனர். அந்த நேரம் ஒரு அதிசயம் நிகழ்ந்தது. அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே, அந்த இடத்தில் ஒரு நாகப்பாம்பு வந்து படம் எடுத்து ஆடியது.

அந்த இடத்தைப்பற்றிக் பலரிடமும் விசாரித்தனர். அந்த இடத்தில் முன்னொருகாலத்தில் வேர்க்கடலை சித்தர் என்றொரு சித்தபுருஷர் இருந்தாராம். அதனால் அந்த இடத்திலேயே கோமதியம்மன் கோயிலை உருவாக்கினர்.

அன்றுமுதல் சிறந்த முறையில் பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இங்கு "ஆடித்தபசு" விழா சங்கரன்கோயிலில் நடப்பதுபோலவே நடத்தப்படுகிறது. சிலர் காவடியும் எடுக்கின்றனர். நவராத்திரியில் மிகப்பிரமாதமாக சண்டி ஹோமம் நடைபெறுகிறது. ஐப்பசியில் அம்மனின் கல்யாண உற்சவமும் நடக்கிறது. வினாயக சதுர்த்தியன்றும், வருட முதல் தேதியன்றும் இங்கு லட்ச கணபதி ஹோமம் நடக்கிறது.

About The Author