துருவன் (1)

உத்தானபாதன்:

முன்னொரு காலத்தில் சூரிய வம்சத்தில் உத்தானபாதன் என்னும் ஒரு அரசன் இருந்தான். அவனுக்கு சுநீதி, சுருசி என்று இரண்டு அரசிகள் இருந்தார்கள்.

உத்தானபாதன் மூத்தவளான சுநீதியிடம் பிரியமில்லாதவனாகவும், இளையவளான சுருசியிடம் அளவில்லாத அன்பு கொண்டவனாகவும் இருந்தான்.

மூத்தவளான சுநீதிக்குப் பிறந்த பிள்ளைக்கு துருவன் என்றும், இளையவளான சுருசிக்குப் பிறந்த பிள்ளைக்கு உத்தமன் என்றும் பெயர் சூட்டப்பட்டது.

ஒருசமயம் அரசன் சுருசியின் புதல்வனான உத்தமனை மடியில் வைத்துச் சீராட்டிக் கொஞ்சிக் கொண்டிருந்தான். சுநீதியின் பிள்ளையான துருவன் அங்கே வந்து தானும் தன் தந்தையின் மடியில் ஏறி அமர வேண்டும் என்று விரும்பினான்.

ஆனால் அரசனோ துருவனை மடியில் ஏற்றிக் கொள்ளவில்லை. சுருசி துருவனை அழைத்து, " எனக்குப் பிறக்கவில்லை. சுநீதிக்கு பிறந்தவன் நீ. ராஜா ஸ்தானத்திற்கு நீ உரியவன் இல்லை. என் மகனுக்கே அரசுப்பட்டம் உரித்தாகும். உனக்குக் கிடைக்க முடியாத விஷயத்திற்கு நீ ஆசைப்படாதே. நீ தவத்தினால் இறைவனை ஆராதித்து அவன் அருளைப் பெற முயற்சி செய்" என்று கடுஞ்சொற்களைக் கூறி துருவனைத் துரத்திவிட்டான்.

துருவனின் வருத்தம்:

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அரசனும் ஒன்றும் சொல்லவில்லை. இதனால் மனவருத்தம் அடைந்த துருவன் கண்ணீர் வழியத் தன் தாயான சுநீதியிடம் வந்தான். நடந்தவற்றைச் சொல்லி அழுதான்.

சுநீதி அவனை மடி மீது இருத்திக் கொண்டாள். சுருசியின் கொடிய வார்த்தைகளால் அவள் மனம் துடித்தது. துருவனிடம், "மகனே! மற்றவர்களைக் குறை சொல்லிப் பயன் இல்லை. எவன் மற்றவருக்குத் துன்பம் விளைவிக்கிறானோனே, அவன் துன்பத்தையே அனுபவிக்க நேரிடும். என்னை அரசர் மனைவி என்று சொல்வதற்குக் கூட வெட்கப்படுகிறார் போலும்! ஆகையால், பொறாமைப்படாமல் உன் மாற்றாந் தாயான சுருசி சொல்வது போல தவத்தினால் இறைவனை ஆராதிப்பாயாக! உத்தமன் அரச ஸ்தானத்தில் ஏறி உட்காருவது போல நீயும் அந்த இடத்தில் உட்கார விரும்புவாயாகில் பகவானுடைய பாதாரவிந்தங்களை ஆராதிப்பாயாக!" என்றாள்.

தன் தாயான சுநீதி வருத்திப் புலம்புவதையும் தன் மனவிருப்பத்தை நிறைவேற்றுவதற்காக அவன் கூறிய வழியையும் துருவன் சிந்தித்துப் பார்த்தான்.

துருவனின் தவம்:

துருவன் அரச பட்டணத்திலிருந்து கிளம்பினான். அப்போது அவன் எதிரே தேவரிஷி நாரதர் தோன்றினார். சென்ற காலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய மூன்று காலங்களையும் தன் தவ வலிமையால் அறியும் திறன் படைத்திருந்த அவர் துருவனின் மனதில் உள்ளதை அறிந்தார்.

"குழந்தாய்! துருவா! உன் வீட்டைத் துறந்து தனியாக எங்கே போகிறாய்? உனது சுற்றத்தினரால் அவமானப்பட்டவன் போலக் காணப்படுகிறாயே" என்று கேட்டார்.

துருவன் நாரதரை வணங்கிக் கூறினான்:

"நாரதரே! இதென்ன ஆச்சரியம். நடந்ததை அப்படியே கூறிவிட்டீர்களே! நான் என் மாற்றாந்தாய் சுருசி கூறிய வார்த்தை அம்புகள் ஏற்படுத்திய வலியால் துன்பப்படுகிறேன். இறைவனை நோக்கித் தவம் புரியப் போகிறேன்" என்றான்.

நாரதரோ, "அப்பா, துருவா! பல ஜென்மங்கள் முயன்றும் முனிவர்களும் யோகிகளும் அவனை அறிய முடியாதவர்களாக இருக்கிறார்கள். அப்படிப்பட்ட உயரிய தெய்வத்தை நீ அறிய முயல்வது வீண். பிடிவாதம் செய்யாமல் நீ வீட்டிற்கே திரும்பிப் போ" என்றார்.

"தேவ ரிஷியே! என் மனதில் இருப்பதை அறிந்தந்து நீங்கள் அதை நிறைவேறும் வழியைக் காட்டி அருளுங்கள். நான் என் தந்தை, தாத்தா முதலியோர் அடைய முடியாததும், ஏனையோர்க்கும் பெறுதற்கு அரிதானதும் ஆன ஒரு உயரிய இடத்தைப் பெற விரும்புகிறேன். அதை எப்படிப் பெறுவது என்ற வழியை எனக்கு உபதேசித்து அருளுங்கள்" என்று பணிவாகக் கேட்டான்.

துருவனுடைய உறுதியான வார்த்தைகளைக் கேட்ட நாரதர் மகிழ்ந்தார்.

"பாலனே! உன் தாய் சுநீதி உன்னை வாசுதேவனை நோக்கித் தவம் இயற்றச் சொன்னாள் அல்லவா! அவனையே மன ஊக்கத்துடன் வழிபடுவாயாக! யமுனை ஆற்றங்கரையில் புண்ணியத்தை விளைவிக்கவல்ல மதுவனம் என்னும் வனம் ஒன்று உள்ளது. அங்கே பகவானின் ஸந்நிதிதானம் என்றும் மாறாதிருக்கும். நீ அங்கே செல்! பரிசுத்தமான யமுனையின் ஜலத்தால் காலை, மதியம், மாலை ஆகிய மூன்று நேரங்களிலும் குளித்து பரிசுத்தமான மனதுடன் இறைவனை மனதில் இருத்தி தியானம் செய்!" என்று கூறி துருவனுக்கு வாசுதேவ மந்திரத்தை உபதேசம் செய்தார்.

நாரத முனிவரை வலம் வந்து அவரை வணங்கிய துருவன் மதுவனத்திற்குப் போனான்.

(சிறுவர் புராணக் கதைகள் – மின்னூலில் இருந்து)

To buy the EBook, Please click here

About The Author