தோல்வி, தோல்வியல்ல தம்பி! (2)

(நிலாச்சாரலுக்காக விசேஷ அனுமதியுடன் ‘வெற்றிக்கு முதல் படி’ நூலிலிருந்து)

ஆடிப்பட்டம் தேடி விதை

மலை, ஆறு, கடல், வீடு வாசல், மாடு, மனை என்பன நாம் கண்ணால் பார்க்கின்ற உலகம்; மற்றொன்று நாம் புரிந்து கொள்ள முடியாத – புலனுக்கு அப்பாற்பட்ட சக்திகள் இயங்கும் உலகம்.

இந்த புலனுக்கு அப்பாற்பட்ட உலகம், சிலநேரம் நமக்கு சில செய்திகளை சொல்கிறது; சில காலகட்டம் ஏற்றது; சில காலகட்டம் ஏற்றதில்லை என்று. இன்று மனவியல் அறிஞர் யங் அப்படிச் சொல்வதைத்தான் அன்றே வள்ளுவர் "காலமறிதல்" – காலமறிந்து செயல்படுதல் என்று எழுதி வைத்து விட்டுப் போயிருக்கிறார்.

"ஆடிப்பட்டம் தேடி விதை" என்பதுபோல நமது நல்வாழ்வின் காற்று எந்தப் பக்கம் அடிக்கிறது என்பதைப் புரிந்து கொள்வது நல்லது. காற்றுள்ள பொழுதே தூற்றிக்கொள்ள வேண்டும். தவற விட்டு விடக்கூடாது. ஏனென்றால், எப்பொழுதாவது ஒரு முறைதான் அதிர்ஷ்டம் நம் வீட்டுக் கதவைத் தட்டும்!

"தோல்வியின் அடையாளங்கள் தென்படும்போது கொஞ்சம் பின்வாங்கி, நிதானித்து, மறு பரிசீலனை செய்யுங்கள்; அவகாசம் எடுத்துக் கொள்ளுங்கள்; வேறு பாதையில் முயலுங்கள்" என்று சொல்கிறார் யங். தோல்வியின் அடையாளம் ‘காலம் கனிந்து வரவில்லை’ என்பதைக் காட்டுகிறது. காலச் சக்கரம் மறுபடியும் திரும்பும்.

தோல்வி என்பது நாம் செல்லும் பாதை சரியில்லை என்பதை சூசகமாக தெரிவிக்கிறது. அதை நாம் புத்திசாலித்தனமாக புரிந்துகொள்ள வேண்டும். உடனே வேறு பாதையை ஆராய வேண்டும்.

தடைகள் ஏற்படும்; ஏற்பட்டால் நின்று நிதானிக்க வேண்டும். தடைக்கல் மீது ஏற முடியுமா? தடைக் கல்லைத் தாண்ட முடியுமா? அல்லது, கல்லைக் குடைந்து உள்ளே புக முடியுமா? என யோசிக்க வேண்டும்.

வீடு கட்டிய இடத்தில் ஒரு பெரிய பாறை இருந்தது. வீடு கட்டிக் கொண்டிருந்தவன் முதலில் அதை அப்புறப்படுத்த விரும்பினான்; முயன்றான்; முடியவில்லை. அந்த பாறை மீது ஒரு காவல் மாடம் (வாட்ச் டவர்) ஒன்றைக் கட்டினான்! "யார் வருகிறார்கள் இந்தப்பக்கம்?" என்று உயரத்திலிருந்து பார்க்க முடிந்தது இப்போது!

மீந்த இட்லி

எங்கள் கிராமத்தில் கிருஷ்ண அய்யர் காப்பிக் கடை என்றால் பிரசித்தம். ஊரில் மூன்று நாள் திருவிழா. இட்லிக்கு மாவு நிறைய அரைத்து வைத்திருந்தார். மாவை அப்படியே வைத்திருந்தால் புளித்துப் போய்விடும்.

ஆனால், எதிர்பார்த்த கூட்டம் வரவில்லை. சுட்ட இட்லி பாதிக்கு மேல் அப்படியே இருந்தது. நேற்று சுட்ட இட்லியை என்ன செய்ய முடியும் என்று கவலைப்படலாம்; அல்லது குப்பையில் கொட்டலாம். தடைக்கல்தான்! ஆனால், அதைத் தடைக்கல்லாக எடுத்துக் கொண்டாரா அவர்? இல்லை. படிக்கல்லாக மாற்றினார்! அதை இன்னும் சிறப்பான பொருளாக செய்து விற்றார்.

என்ன செய்தார் கிருஷ்ணய்யர்? இட்லியை எல்லாம் உதிர்த்தார். வெங்காயம், பச்சை மிளகாய் நறுக்கிப்போட்டு வதக்கினார். கடுகு தாளித்து, இட்லியை உதிர்த்துப்போட்டுப் புரட்டினார். சாப்பிட்டால் தேவாமிருதமாய் இருந்தது. ‘இட்லி உசிலி’ பறந்து போய்விட்டது. அதிக விலையில்!

சில ஓட்டல்காரர்கள் என்ன செய்வார்கள் தெரியுமா? ‘இட்லி உசிலி’ மிஞ்சினால், மாலையில் அத்துடன் மாவு சேர்த்துப் பிசைந்து பகோடா ஆக்கிவிடுவார்கள்! பகோடா மிஞ்சினால் இரவு பகோடா குழம்பு வைத்துவிடுகிறார்கள்.

வெற்றிக்கும் இப்படி எத்தனையோ வழிகள் இருக்கின்றன!. ‘தோல்வி ஏற்பட்டுவிட்டதே’ என்று துவண்டு போய் கன்னத்தில் கை வைத்துவிட்டால், ஒரு வழியும் தோன்றாது. அதனால்தான் நம் ஊரில் "கப்பல் கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்காதே" என்பார்கள்.

புல் வெட்டும் எந்திரம்

அமெரிக்க நாட்டில் ஒரு கம்பெனி புல் வெட்டும் எந்திரம் செய்து விற்றது. அங்கே எல்லார் வீட்டிலும், வீட்டிற்கு முன் புல் வளர்த்திருப்பார்கள். கோடையில் மூன்று மாதம் வாரா வாரம் புல் வெட்ட வேண்டும். கோடைகாலம் முடிந்ததென்றால் பனிக்காலம் தொடங்கிடும்; புல் வளராது. புல் வெட்டத் தேவை இல்லை. எனவே வியாபாரம் பனிக் காலத்தில் படுத்துவிடும்.

இந்த நேரத்தில் ஒரு மனிதர் வந்தார். இந்த புல் வெட்டுகிற எந்திரத்தின் அடியில் பனியில் சறுக்க, சறுக்குப் பலகைகளை வைத்துத் தரமுடியுமா? என்று கேட்டார். புதிய முயற்சி. அதிக வேலை. எனினும் அவர்கள் சளைக்கவில்லை. செய்து கொடுத்தார்கள்.

எந்திரத்தின் மீது சவாரி செய்துகொண்டு புல் வெட்டுவது போல, இப்போது பனியின் மீது சறுக்கிக் கொண்டு வேகமாக செல்ல முடிந்தது! புதிய பனி வண்டி ("ஸ்நோ மொபைல்") பிறந்தது! விற்பனை இலட்சக்கணக்கில் போயிற்று.

பனிக்காலம் என்று கம்பிளியைப் போர்த்திக் கொண்டு உட்கார்ந்திருக்கவில்லை அவர்கள்! பனிக் காலத்திலும் வியாபாரம் நடக்கும் ஒரு புதிய கருவியைத் தயாரித்தார்கள்.

மனம் இருக்கிறதே, அது ஒரு அபார சாதனம். அதைத் தட்டிக் கொடுத்து, உற்சாகமாக பேசினோமானால் தோல்வியைக் கூட வெற்றியாக அது மாற்றிவிடும்.

தோல்வி என்பது தோல்வியல்ல! நாமே மேலே ஏறும் வெற்றிப் படி.”

About The Author

3 Comments

  1. ezhil

    எனக்கு ரொம்ப பிடித ஒரு விசயம்.தன்னம்பிக்கை.அதை எடுதுகாட்டுடன் சொன்னது அருமை.

  2. meenatchi

    தன்னம்பிக்கைக்கு உதயமூர்த்தி தரும் சிந்த்னைகள் பாட்டிற்குரியவை. உலகில் முயன்றால் எப்படியும் வாழலாம் என்பதை இவர் எழுத்துகள் மூலம் அறிந்து வாழுகிறேன் பலரும் படித்து பயனடையுங்கள்.

  3. nimmy

    முயன்றால் முடியாதது எதுவும் இல்லை என்பதை விலக்குகிறது உங்கள் கருத்து. அருமை அருமை.

Comments are closed.