நகைச்சுவை அன்றும் இன்றும் என்றும்

‘சிரிக்கத் தெரிந்த ஒரே மிருகம் மனிதன்தான்’ என்று சொல்வார்கள். நகைச்சுவை உணர்வு இன்று நேற்றல்ல, காலம் காலமாக, மனிதர்கள் குகையில் வாழத் துவங்கிய காலத்திலிருந்தே இருந்து வருகிறது. காலத்தினால் வேறுபாடுகள் இருக்கலாம். ஆனாலும் உணர்வு அன்றும் இன்றும் என்றும் ஒன்றே! அந்தக் கால நகைச்சுவைத் துணுக்குகள் பல, பழசானாலும் புதுப் போர்வையுடன் மெருகோடு நம்மிடையே உலவிக் கொண்டுதான் இருக்கின்றன. பெரும்பாலும் அவை மற்றவரது ஆடைகளையோ, பழக்க வழக்கங்களையோ கிண்டலடிப்பதாகவே அமைந்திருக்கின்றன.

பண்டைய கிரேக்க, ரோமானிய எழுத்தாளர்களின் படைப்புகளில் நகைச்சுவை பரவியிருப்பதைப் பார்க்க முடிகிறது. இவையும் பெரும்பாலும் பிறரைப் பற்றிக் கிண்டல் அடிப்பவைதான் என்றாலும் வார்த்தைகளை வைத்து விளையாடும் ஜோக்குகளும் உண்டு. அவற்றைப் படிக்கும்போது ‘அந்த அரதப் பழசான ஜோக்குகளைத்தான் இன்றும் சொல்லி வருகிறோம்‘ என்பது புரியும். பழைய ஜோக்குகள் ஆனாலும் அவை இன்றும் புதுப் பொலிவுடனேயே காலத்தால் அழியாமல் இருக்கின்றன.
சிலவற்றைப் பாருங்கள்!

தொணதொணவென்று பேசிக்கொண்டே சிகை அலங்காரம் செய்து கொண்டிருந்த ஒரு பார்பர், ஆர்ச்சிலாஸ் என்ற கிரேக்க ஆசாமியிடம், "உங்களுக்கு எப்படி முடி வெட்டவேண்டும்?" என்று கேட்டான்.

அதற்கு அவர் சொல்கிறார், "உன் வாயை மூடிக்கொண்டு" என்று.

கிரேக்க ஆசாமி ஒருவருக்கு மிகவும் மோசமான மதுவைக் (Wine) கொடுத்தார்கள். அவரிடம் பெருமையாக, "இந்த மது 15 வருஷப் பழசு" என்றபோது அவர் சொன்னாராம்,"இந்த வயசுக்கு இது இன்னும் கொஞ்சம் பலமாக இருந்திருக்கலாம்" என்று.

இதே போல் ஒருவரிடம் 40 வருஷப் பழசான மதுவைக் கொடுத்தபோது அவர் சொல்கிறார்: "இந்த மதுவும் அதன் வயசைப் போலவேதான் இருக்கிறது."

இந்த ஜோக்குகள் 2200 வருஷங்களுக்கு முன்னால் சொல்லப்பட்டவை எனும்போது ‘இன்னும் புதுமை மாறாமல் இருக்கின்றனவே’ எனத் தோன்றும்.

‘புதுச் செருப்புக் கடிக்கும்’ என்பது தெரியும். இதை ஆரம்பித்து வைத்தவர் அந்தக் கால ரோமானியர். அந்தச் சமயத்தில் விவாகரத்து என்பது சமுதாயத்தால் ஏற்றுக் கொள்ளப்படாத ஒரு விஷயம். இந்த ரோமானியர் கருத்து வேறுபாட்டால் தனது பணக்கார, அழகான மனைவியை விவாகரத்துச் செய்தார். அவரிடம் கேட்டபோது, தன் காலிலுள்ள செருப்பைக் காட்டி அவர் சொன்னது: "இதோ இந்த செருப்பு புதிதுதான்; பார்வைக்கு அழகாகத்தான் இருக்கிறது. ஆனால் எனக்குத்தானே தெரியும் இது எங்கே கடிக்கிறது என்று."

அந்தக் காலத்திலும் மருத்துவர்களைப் பற்றிய ஜோக்குகள் இருந்திருக்கின்றன. ஒரு ஸ்பார்டன் ஜெனரலை மருத்துவ நண்பர் ஒருவர், "எப்படி நீங்கள் இத்தனை வருஷங்கள் வியாதி இல்லாமலே இருக்கிறீர்கள்?" என்று கேட்க, அந்த ஜெனரல் சொன்ன பதில்: "நான் இதுவரை உங்களிடம் மருத்துவம் செய்து கொள்ள வரவில்லை – அதனால்தான்."

இன்னொரு சமயம் இதே ஜெனரல் சொன்னார், "ஒரு சிறந்த மருத்துவர் என்பவர் தன் நோயாளியை கஷ்டப்பட வைக்காமல் மேலுலகத்திற்கு அனுப்பி வைப்பவர்தான்" என்று.

இவர் ஒருமுறை ஒரு மருத்துவரைப் பற்றிக் கடுமையாக விமரிசித்தபோது, அவர் நண்பர் அவரிடம், "எப்படி நீங்கள் அந்த மருத்துவரிடம் செல்லாமலேயே அவரைப் பற்றித் தெரிந்தவரைப் போல விமர்சிக்கலாம்?" என்று கேட்டார். அதற்கு ஜெனரல், "அப்படி அவரிடம் போயிருந்தால் இதைச் சொல்வதற்கு நான் இன்று உயிருடன் இருப்பேனா?" என்றாராம்.

அனகார்சிஸ் என்ற தத்துவவாதி தங்கள் நாட்டுச் சட்டத்தைப் பற்றிச் சொல்லும்போது, "அவை சிலந்தி வலை போன்றவை; எளியவர்களைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளும்; ஆனால் வசதி வாய்ந்தவர்களை வெளியே தப்பிக்க விட்டுவிடும்" என்றார் நையாண்டியாக.

ஒரு பிக் பாக்கெட் திருடனைக் காவலர்கள் விலங்கிட்டு அழைத்துச் சென்றபோது டயொஜினஸ் என்பவர் சொல்கிறார், "நீ ஒரு முட்டாள் என்பதனால்தான் சின்ன திருட்டைச் செய்துவிட்டு மாட்டிக் கொண்டாய். இதுவே பெரிய அளவில் செய்திருந்தால் மற்றவர்களை நீ சிறைக்கு அனுப்பியிருக்கலாமே" என்று.

பெரிய அளவில் தொளதொளவென்று ஆடை அணிபவர்கள் நகைப்புக்குள்ளாவது இயல்பே. ஒரு சின்ன பையன் மிகப் பெரிய தொப்பியை அணிந்து கொண்டு சென்றபோது ஒருவர் கேட்டாராம், "ஹாய் தொப்பியே, இந்தச் சின்ன பையனை எங்கே அழைத்துப் போகிறாய்" என்று.

சிசிரோ என்ற பெரிய பேச்சாளர், குள்ளமாக இருந்த தன் மாப்பிள்ளை மிகவும் பெரிதான வாளை இடுப்பில் செருகியிருப்பதைப் பார்த்து, "யாரது, என் மாப்பிள்ளையை அந்த வாளோடு ஒட்டி வைத்திருப்பது?" என்று நக்கலடித்தாராம்.

பிளேட்டோ ஒருமுறை தனது அடிமை சரியாக வேலை செய்யாமல், சொன்னபடி கேட்காமல் இருந்தபோது, "இந்த அடிமையை நீங்களே நன்றாக அடியுங்கள்! எனக்கு இவனை அடிப்பதற்குக் கூட முடியாமல் களைப்பாக இருக்கிறது" என்று கூறியிருக்கிறார்.

சைராகியூஸ் நாட்டின் சர்வாதிகாரியான டயொனிசியஸ் பற்றிப் பல கதைகள் உண்டு. அவன் தன் கவிதைகளையும்
கதைகளையும் மற்றவர்கள் பாராட்ட வேண்டுமென்று விரும்புவானாம். ஒருமுறை பிலாக்சின் என்பவன் தன் கவிதையை முழுதும் கேட்காமல் போனதற்காகக் கல்லுடைக்கும் வேலைக்கு அனுப்பினான். பிறகு, மறுபடியும் அவனிடம் இரண்டாம் முறை தன் கவிதையைப் படித்துக் காண்பித்தான், இந்த முறையாவது அவன் ரசிப்பான் என்று. ஆனால், பிலாக்சின் பாதியிலேயே எழுந்து போக ஆரம்பித்தான். "எங்கே போகிறாய் என்று சர்வாதிகாரி கேட்க, "மறுபடியும் கல்லுடைக்கவே போகிறேன். உன் கவிதையைக் கேட்பதை விட அது மேல்" என்றானாம் பிலாக்சின்.

இன்னொரு முறை, இதே அரசன் பிளேட்டோவை அவமானப்படுத்த வேண்டுமென்பதற்காக ஒரு விருந்தின்போது அவரைக் கடைசி வரிசையில் உட்கார வைத்தான். பிறகு பிளேட்டோவிடம், "நீ ஏதேன்ஸ் சென்ற பிறகு என்னைப் பற்றிப் பேச நிறைய விஷயம் இருக்கும்" என்று கிண்டலாகச் சொன்னான். அதற்குப் பிளேட்டோ "உன்னைப் பற்றிப் பேசுவதை விட உலகத்தில் பேசுவதற்கு நிறைய நல்ல விஷயங்கள் இருக்கின்றன" என்று பதிலடி கொடுத்தாராம்.

அரிஸ்டிபஸ் என்ற தத்துவவாதி இந்த சர்வாதிகாரியிடம் ஒரு வேண்டுகோள் வைத்தார். ஆனால் அவனோ, அவர் சொன்னதைக் காது கொடுத்தும் கேட்கவில்லை. அதனால் அந்தத் தத்துவவாதி அரசனின் காலில் விழுந்து கேட்டாராம். அப்போது உடனிருந்தவர்கள், "ஏன் தன்மானத்தை விட்டு அந்த இரக்கமில்லாதவனின் காலில் விழுகிறீர்கள்?" என்று கேட்டதற்கு, "என்ன செய்வது, இந்த மன்னனுக்குக் காது காலிலல்லவா இருக்கிறது?" என்றார் அரிஸ்டிபஸ்.

இன்னொரு முறை அரிஸ்டிபஸ் இதே மன்னனிடம் "கொஞ்சம் பணம் வேண்டும்" என்று கேட்டபோது மன்னன், "தத்துவாதிகளுக்கு தேவை என எதுவுமே இல்லை என்பார்களே!" என்று கிண்டலாகச் சொன்னான். அரிஸ்டிபசும், "அந்தக் காரணத்தைப் பிறகு சொல்கிறேன்; இப்போது பணம் கொடுங்கள்" என்று கேட்டு, பணம் பெற்ற பிறகு சொன்னார்,
"இப்போது பாருங்கள் – எனக்கு எதுவுமே தேவையில்லை" என்று.

ஸ்பார்டனில் ஒரு போரின்போது ராணுவத்திற்கு ஆட்களைச் சேர்த்தனர். அப்போது மாற்றுத்திறனாளி ஒருவனும் தான் சேருவதாகச் சொன்னான். ஆனால், அவன் உடல்நிலையைக் காரணம் காட்டி, சேர்த்துக் கொள்ள மறுத்துவிட்டனர். அதற்கு அவன், "நான் சண்டைக்குத்தான் ஆள் எடுக்கிறார்கள் என்று நினைத்தேன். சண்டையிலிருந்து ஓடி வருவதற்கா ஆள் எடுக்கிறார்கள்?" என்று கேட்டான் கேலியாக.

டயொஜினசிடம் ஒருமுறை "சாப்பிடுவதற்கு எது சரியான நேரம்?" என்று கேட்டபோது அவர் சொன்ன பதில்: "நீ பணக்காரனாக இருந்தால் நீ விரும்பும் வேளையில்; இல்லாதவனாக இருந்தால் எப்போது கிடைக்கிறதோ அப்போது."

கிளியோமனஸ் என்ற ஸ்பார்டன் மன்னரிடம் ஒரு தூதர் வந்து மிக நீண்ட கடிதத்தைப் படித்தார். கொட்டாவி விட்டவாறே கேட்ட அந்த அரசன், "நீ முதலாவதாகச் சொன்னது எனக்கு நினைவில்லை. அதனால் இரண்டாவது பகுதியை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. மொத்தத்தில் நீ படித்தது முழுவதுமே வீண்தான்" என்று சொன்னாராம்.

மேசிடோனியா அரசன் ஒருமுறை கிரேக்க மன்னனைப் போரில் வென்ற பிறகு தனது புகழையும் தான் எவ்வளவு பெரிய வீரன் என்பதையும் தற்புகழ்ச்சியாக எழுதி கிரேக்க மன்னனுக்கு அனுப்பினான். அதற்கு கிரேக்க மன்னனிடமிருந்து பதில் வந்தது இப்படி: "நீ உன்னுடைய நிழலை அளந்து பார்த்தால் நீ பெற்ற வெற்றிக்குப் பிறகு அது ஒரு அங்குலம் கூட உயரவில்லை என்பது தெரியும்."

அர்த்தமில்லாத கேள்விகளுக்குக் கிண்டலான பதிலளிப்பது இன்றைக்கல்ல, அந்தக் காலத்திலிருந்தே இருந்து வருகிறது.
கார்பதியஸ் என்ற தத்துவாதி தியேட்டரிலிருந்து வரும்போது, "தியேட்டரில் நாடகம் பார்த்துவிட்டு வருகிறீர்களா?" என்று ஒருவன் அசட்டுத்தனமாகக் கேட்க, அவர், "இல்லை, நான் அங்கே போய் டென்னிஸ் விளையாடிவிட்டு வருகிறேன்" என்றார்.

நகைச்சுவை உணர்வு என்பது எல்லாக் காலத்திலும் தொடர்ந்து வருகிறது. அதன் உருவங்கள்தான் மாறிக் கொண்டிருக்கின்றன. அடிப்படையில் பார்த்தால் நாம் இன்று சொல்லும் பல ஜோக்குகள் கிரேக்க, ரோமானிய காலத்து நகைச்சுவையின் பிரதிகள்தான் என்று சொல்லலாம்.

(ஆதாரம்: செப்டம்பர் 3, 1911இல் வெளியான நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளிவந்த கட்டுரை).

About The Author