நன்றி – ஒரு மந்திரச் சொல்!

‘சூரரைப் போற்று’ என்பது முண்டாசுக் கவியின் வாக்கு. நம்மில் எத்தனை பேர் ஒரு நல்ல கதையையோ நல்ல கவிதையையோ படித்தால், எழுதியவரைத் தேடிச் சென்று பாராட்டுகிறோம்?

வணிகவியலில் "பகர்ச்சேற்றம்" என்றொரு சொல் உண்டு. ஒரு பொருளால் நாம் அடையும் நற்பயன்களை அது குறிக்கிறது. இந்தச் சொல் நம் வாழ்க்கையிலும் ஒரு முக்கியப் பங்கை வகிக்கிறது.

மேற்கத்திய நாடுகளில் "தேங்ஸ் கிவிங்" என்றொரு பண்டிகை உண்டு. தமிழில் மொழிபெயர்த்தால், "நன்றி சொல்லுதல்". ஒரு பாராட்டுதலின் முக்கியத்துவத்தையோ, ஒரு நன்றியின் மதிப்பையோ உணர்ந்தவர் சிலரே! அந்த உணர்வைப் பகிர்ந்து கொண்டால், வெற்றி பெறுவது அந்தக் கலைஞன் மட்டுமல்ல, நாமும் தான்.

கலைகள் மட்டுமல்ல, நம் அன்றாட நடவடிக்கைகளிலும் இது முக்கியம் ஆகின்றது. உதாரணத்திற்கு, என்னுடைய செய்கைகள் மற்றவருக்குப் பயன் தருகின்றன என்று உணர்ந்தால்தான், நான் அவைகளைத் தொடர்வதில் அர்த்தம் இருக்கிறது. "பயன் தருகின்றன" என்பதை நான் எப்படிப் புரிந்துகொள்ள முடியும், எவரேனும் என்னிடம் வந்து சொல்லவில்லை என்றால்!

எத்தனையோ விவாகரத்துகளில், கணவன் மனைவியர் சொல்வது, "என் மதிப்பை அவர் உணர்ந்தாற்போல எனக்குத் தெரியவில்லை! இதை ஏன் இன்னமும் தொடர வேண்டும்?"

"நன்றி" சொல்வதற்கோ, தன் பாராட்டுகளைத் தெரிவிப்பதற்கோ அதிக நேரம் தேவையேயில்லை. நம் வாழ்வில் இது கலந்திருக்க வேண்டுமேயன்று, தேவைப்படும்பொழுது உபயோகப்படுத்தும் கருவியாக இருத்தல் கூடாது என்று அன் கோல்டன் எக்கல் என்பவர் சொல்கிறார்.

அது மட்டும் அல்லாது, மற்றவரின் செவிக்கெட்டும்படி சொல்லுதலும் முக்கியமாகும். நன்றிக்குரியவர் அதைப் புரிந்துகொள்ளவில்லை என்றால் நன்றி தெரிவித்துப் பிரயோஜனம் கிடையாது.

தகுதியுடைவரை மனதாரப் பாராட்டுதல் கூட ஒரு வகைக் கலை ஆகும். இதில் உள்ள நான்கு முக்கிய அம்சங்களைப் பற்றி அன் கோல்டன் எக்கல் சொல்கிறார்.

உண்மையான உணர்வுகளைத்தெரிவித்தல்

நன்றியைப் பாசாங்கு செய்ய முடியாது. ஆழ்மனதிலிருந்து வந்தால்தான் அதற்கு மதிப்பு உண்டு. பாசாங்கு செய்வோரை எளிதில் கண்டுபிடித்துவிட முடியும். உறவை மேம்படுத்துவதற்கு பதில், இது இழிவுபடுத்தக் கூடும்.

பரப் பார்வை

ஒருவரின் மதிப்பைப் புரிந்து கொள்வதற்கு சில சமயங்களில் சற்றே பகுப்பாய்வு தேவைப்படுகின்றது. அவரால் நமக்கு என்ன நன்மை ஏற்பட்டு இருக்கின்றது என்பதை யோசித்து ஆராய்தல் முக்கியம். இதனால், பாசாங்கு செய்வதைக் கூட நாமே தவிர்த்து விட முடியும். இந்த உலகில், யாராலும் தனியாகச் செயல்பட இயலாது. நாம் ஒவ்வொருவரும் எத்தனையோ பேருக்குக் கடன்பட்டிருக்கிறோம் என்பதுதான் உண்மை. பரப் பார்வை கொண்டு அதை உணர்ந்து கொள்ளுதல் தெரிவிக்க வேண்டிய நன்றியைப் புகட்டும்.

புரிய வைத்தல்

தினமும் எத்தனையோ வீடுகளில் இன்னும் பெண்டிர் தம் கணவர்மாருக்கு சமைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். சாப்பிட்டவுடன் எத்தனை பேர் அவர்களைப் பாராட்டுவதுண்டு!? நம் பாராட்டுகளையும் நன்றிகளையும் மற்றவருக்குப் புரிய வைப்பது மிகவும் முக்கியம். சில சமயங்களில் கடினமும் கூட! சற்றே சிரத்தை எடுத்துத்தான் இதைச் செய்தாக வேண்டும்.

நன்றி செலுத்துதல்

நன்றி செலுத்த எத்தனையோ வழிகள் உண்டு. நாவால் சொல்லலாம்; எழுத்தில் சொல்லலாம்; அன்பளிப்புகள் தரலாம்; பொதுமக்கள் முன்னிலையில் தன் நன்றியைச் சொல்லலாம். ஏன், அவருக்குப் பிடித்த விஷயங்கள் ஏதேனும் செய்து அவரையே ஆச்சரியப்பட வைக்கலாம். எதைச் செய்வதாக இருந்தாலும், முக்கிய விஷயம் என்னவென்றால் நீங்கள்தான் செய்ய வேண்டும். நீங்கள்தான் செய்கிறீர்கள் என்பதை அவர்கள் உணர வேண்டும்.

அன்னை தெரெஸா சொல்கிறார், "அன்பு, ஆதரவு, நன்றி – இவைகளுக்கு ஏங்குவோரின் எண்ணிக்கை பஞ்சத்தால் தவிப்போரை விட அதிகம்!"

க்ளேடிஸ் ப்ரௌண் ஸ்டேர்ன் சொல்கிறார், "மனதினுள் ஒருவரைப் பாராட்டுவதோ, ஒருவருக்கு நன்றி தெரிவிப்பதோ யாருக்கும் உதவாது!"

மனித உறவுகளை மேன்படுத்துவதற்கு இந்த மனப்பான்மை மிகவும் உதவுகின்றது. வாருங்கள், இந்த வாரம் நமக்குப் பிடித்த ஒருவரைப் பற்றி எழுதுவோம். அவரை ஏன் நமக்குப் பிடிக்கும், அவரிடம் உள்ள நல்ல குணங்கள் என்னென்ன என்பதைப் பட்டியலிடுவோம். அடுத்த முறை அவரைச் சந்திக்கும் பொழுது, அவரைப் பற்றிய நம் எண்ணங்களை அவரிடம் பகிர்ந்து கொள்வோம்!

வாழ்வின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் இதையே பின்பற்றுவோம். மனித உறவுகளை வளர்ப்போம்.

"தேங்ஸ் கிவிங்" பண்டிகையைஒரு நாள் மட்டுமன்றி, வாழ்நாள் முழுவதும்
கொண்டாடுவோம்
முழுவதும் படித்ததற்கு நன்றி!!

வாழ்க மானுடம்! வளர்க மனித நேயம்!

About The Author

3 Comments

Comments are closed.