நர்த்தகி நடராஜ்

Narthagiநடராஜ் பெற்றோர் இட்ட பெயர். நர்த்தகி அவள் குருநாதர் சூட்டிய பெயர். நாட்டிய மணிகளை உருவாக்கிய கிட்டப்பா. அவர்களின் வீட்டு வாயிலில் நின்று தன் கோரிக்கையைத் தெரிவித்த பொழுது அவர் சொன்னது, "நீ ஆணுமல்ல, பெண்ணுமல்ல, உனக்கு நாட்டியம் கற்றுக்கொடுக்க விருப்பமில்லை"

லட்சியத்துடன் வந்து நிற்பவளுக்கு நம்பிக்கையும் போர்க்குணமும் இருப்பது இயல்பு. "நாட்டியத்தை உருவாக்கிய நடராஜரே ஓர் அர்த்தநாரிதானே" அவள் கேட்டதும் கிட்டப்பா மலைத்து விட்டார். ஆனாலும் உடனே ஏற்றுக் கொள்ளவில்லை. ஓராண்டு காலம் தொடர்ந்து அவரிடம் சென்றாள். அவள் முயற்சி வென்றது. அவளை ஏற்றுக் கொண்டார். நர்த்தகி என்ற நாமம் சூட்டினார். தன் வீட்டிலேயே அடைக்கலம் தந்தார். தனக்குத் தெரிந்த அனைத்தும் கற்றுத்தந்தார். இன்று அவள் ஒரு நாட்டியத்தாரகை. உலகமெல்லாம் சுற்றி வருகின்றாள். அவள் நடந்து வந்த பாதை கரடு முரடானது. எனவே அவள் சாதனை இமயத்திலும் உயர்ந்தது.

நர்த்தகியைக் காணும் ஆவலில் அவள் இல்லம் சென்றேன். அன்புடன் வரவேற்றாள். அவள் ஒரு திருநங்கை. அப்படித்தான் அழைக்கப்பட வேண்டும் என்பது அவள் விருப்பம். அவள் தன் வாழ்க்கைச் சரிதையை விரிவாகக் கூற ஆரம்பித்தாள். ஆண் குழந்தையாய்ப் பிறந்தவன்தான் நடராஜ். ஆனால் குழந்தைப் பருவத்திலேயே உணர்வுகளின் மாற்றத்தைப் புரிந்து கொண்டான். பெண் குழந்தையைப் போல் உடை உடுக்க, சிங்காரிக்க விரும்பினான். பெரியவர்கள் திட்டினார்கள். ஆணாக நடந்து கொள்ள முடியவில்லை. உடலிலும் மாற்றங்கள், பெற்றவர்களுக்கு அதிர்ச்சி. சில ஆண்கள் குழந்தைப் பருவத்திலேயே பாலியல் உறவுக்குக் கட்டாயப் படுத்தினார்கள்.

பெற்றவளிடம் சொன்னபொழுது அடிதான் கிடைத்தது. அண்டை, அயலார் கேலி பேச ஆரம்பித்து விட்டார்கள். பெற்றவளும் "எங்காவது போய்த் தொலை" என்று கூற ஆரம்பித்து விட்டாள். நடராஜுக்கு சக்தி என்று ஒரு தோழி. சக்திக்கும் இதே நிலை. இருவரும் வீட்டை விட்டுப் புறப்பட்டு விட்டார்கள்.

அவளைப் பெற்றவள் மீது எனக்குக் கோபம் ஏற்பட்டது. "பெற்றவளே உங்களை எப்படி விரட்டலாம்? தாய்ப் பாசம் செத்துவிட்டதா?" என்றேன். நர்த்தகி சொன்ன பதில் என்னைச் சிலையாக்கிவிட்டது. "அம்மா, என்னைப் பெற்றவளுக்கு நான் மட்டும் குழந்தையில்லை. இன்னும் சில உடன் பிறந்தவர்கள் இருக்கின்றார்கள். அவர்களை நல்லபடியாக வளர்த்து ஆளாக்க வேண்டிய கடமை அவளுக்கு. நான் உடன் இருந்தால் அவர்கள் எதிர்காலம் கேள்விக்குரியதாகிவிடும். அப்பா, நிம்மதியாக வேலை பார்த்துக் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும். இந்தச் சூழலில் அவர் மனம் கெடக்கூடாது. குடும்ப நன்மைக்கு ஒரு பிள்ளையை ஒதுக்குவது சரிதான்". இதைச் சொல்லும் பொழுது நர்த்தகி முகத்தில் சிரிப்பு மாறவில்லை. கர்மயோகிபோல் பேசினாள். பெற்றவர்கள் தங்கள் தேவைகளைக் குறைத்துக் கொண்டு என்ன பாடு பட்டாலும், சில பிள்ளைகள் பெற்றோரைக் குறை கூறுவது நினைவிற்கு வரும்பொழுது நர்த்தகி ஒரு மாணிக்கமாகத் தெரிந்தாள். தொடர்ந்து பேசினாள்.

இத்தகையோருக்கென்று சில அமைப்புகள் இருக்கின்றன. அரசு இவர்களுக்கு ஒதுக்கியுள்ள தொழில், பிச்சை எடுப்பதும், விபச்சசாரமும். ஒரு பெண் விபசாரம் செய்தால் அவளுக்கு மட்டும் தண்டனை. இவர்களுக்கு அதே தொழிலைச் செய்ய, சட்டபூர்வ அனுமதி. வினோதமான சட்டங்கள். நர்த்தகிக்கு இந்த வாழ்க்கை பிடிக்கவில்லை. சின்னஞ்சிறு வயது முதல் நாட்டியம் கற்க ஆசை. சக்தி உடன் இருந்து சக்தி தந்தாள். பேராசை என்று மற்றவர்கள் கூறலாம். அவளுக்கு அதுதான் இலக்கு. புறப்பட்டுவிட்டாள்.

பெரியவர் கிட்டப்பா அவர்கள் வைஜயந்திமாலா போன்றவர்களுக்குக் குரு. அவரிடம் போய் நின்றாள். அவள் ஆசையும் பெரிது. அவள் அணுகியவர் நிலையும் பெரிது. அவள் வென்றுவிட்டாள். இன்று உலகம் சுற்றி வருகின்றாள். இதற்கும் அவள் பட்டபாடு கொஞ்சமல்ல. சென்னைக்கு வந்தவுடன் தங்குவதற்குச் சரியான வீடு கிடைக்கவில்லை. அரசு அவர்களுக்கு அனுமதித்த தொழில் அவர்களைக் கேவலமாக எண்ண வைத்து, குடும்பங்களுக்கு மத்தியில் அவர்களை குடி வைக்க மறுத்தது. அதிகாரத்தில் இருந்தவர்களில் பலர் அவர்களைக் கசக்க நினைத்தனர். உயர்குடி மக்களின் சபாக்கள் அவளுக்கு மேடைதர மறுத்தனர்.

போராட்டத்திற்குப் பின் தங்க இடம் கிடைத்தது. அவள் குருநாதரின் புகழால், அவர் மாணவிக்கு ஒரு மேடை கிடைத்தது. வேடிக்கை பார்க்க வந்தவர் பலர். அவள் குருநாதரின்மேல் உள்ள பெருமதிப்பால் அவருடைய மாணவியின் நடனம் பார்க்கச் சிலர். ருசிகரமான செய்திகளுக்காக வந்த சில பத்திரிகைக்காரர்கள். நர்த்தகி எல்லோரையும் கவர்ந்துவிட்டாள். முகத்தில் நவரசங்கள், கரங்களின் நளினம், கால்களின் துள்ளல். அப்பப்பா, நர்த்தகி என்ற பெயருக்குப் பொருத்தமானவளாக உருவாக்கிய பெருமை அவள் குருநாதருக்குச் சேரும். எல்லா சபாக்களும் அழைக்க ஆரம்பித்தன. பத்திரிகைகள் அவளைப் புகழ்ந்தன. அவளுக்கு வெளி நாடுகளிலிருந்து அழைப்புகள் வர ஆரம்பித்தன. சோதனையும் வேதனையும் துரத்தியது. இவர்களுக்கு ரேஷன் கார்டு கிடைக்காது. வங்கிகளில் கணக்கு வைத்துக் கொள்ள முடியாது. காரணம், இவர்கள் ஆணுமல்ல, பெண்ணுமல்ல. எப்படி குறிப்பது? சட்டத்தில் இடமில்லை. இப்படி இருக்க பாஸ்போர்ட் எப்படி கிடைக்கும்? மீண்டும் போரட்டம். நர்த்தகி சோர்ந்து போகவில்லை. இதிலும் வெற்றி பெற்றாள். அமெரிக்கா உட்பட பல நாடுகளுக்குச் சென்று வந்தாள்.

அரசு இப்பொழுது கலைமாமணி பட்டமும் கொடுத்து கவுரவப்படுத்திவிட்டது. நர்த்தகியின் நடனம் பார்க்க விரும்பினேன். அவள் ஆடிய காட்சியைப் பதிவு செய்து வைத்திருந்தாள். எனக்காகப் போட்டுக் காண்பித்தாள். சின்னஞ்சிறு கிளியே பாட்டுக்கு நடனம். பாட்டு முடிந்தாலும் குழந்தையை உறங்க வைப்பது போன்ற பகுதியைச் சேர்த்திருந்தாள். அம்மம்மா, முகத்தில்தான் எவ்வளவு பாவம். அபிநய சரஸ்வதி பாலசரஸ்வதியை நினைவிற்குக் கொண்டு வந்தது. புறப்படும்பொழுது ஸ்வாமி படங்களுக்கு முன் அழைத்துச் சென்று ரவிக்கை, மஞ்சள் கொடுத்த பாங்கு மறக்க முடியாதது. நர்த்தகியும் எனக்கு ஒரு மகளானாள்.

About The Author

8 Comments

 1. Venkatesh

  நான் 1985 ல் அண்ணாமலை பல்கலைலழகத்தில் பயிலும் பொழுதிலிருந்து நர்த்தகி நடரஜை தெரியும். அற்புதமான கலை வித்தகர், நண்பர்… வாழ்க அவர் நாட்டிய தொண்டு…

 2. vijayan

  என் பெயர்.ப.விஜயன்,தர்பொலுது நான் மலய்சிஅவில் வெலை சைஉகெரன் உஙல் நர்த்தகி நடராஜ் – எட்டையபுரம் சீதாலட்சுமி கதை ரெம்ப அருமை,

 3. P.Balakrishnan

  சென்னையில் பொற்றாமரை கலை இலக்கிய ஆய்வரங்கத்தில் நர்த்தகியை வரவழைத்துப் பாராட்டினோம். அருமையான நடனசிகாமணி – அரிமா இளங்கண்ணன், செயலாளர்,

 4. devi

  i want to meet narthagei nataraj ,to greet both narthagi and sakthi
  need the address

 5. Rev.Charles Edwin G

  As the First Christian Pastor in chennai,I extended my emphathetical hands to this community in 1999,and within few years I heared about Narthagi and sakthi.By being a student to Gurunathar Kittappa,itself gave me a high respect for her.She once came and performed in the council of our church at chennai.
  I am searching her contact.I will be glad to meet her,as she is my own daughter.I have restarted my mission for this community from July 2010 after 4 years of break.
  Rev.Charles Edwin G(flute charles) 09841372384

Comments are closed.