நாய்கள் நுழையும் கோயில்

சாதாரணமாக எந்தக் கோயிலிலும் நாய்களை உள்ளே வர விடுவதில்லை. கோயில் வாசல்வரைதான் அதற்கு அனுமதி. ஆனால் கேரளாவில் மடப்புறா எனும் கோயிலில் நாய்களை உள்ளே அனுமதிக்கின்றனர்.

அனுமதிப்பது மட்டுமல்லாமல் அவைகளை மரியாதையுடன் கௌரவிக்கின்றனர். அங்கு செல்லும் பக்தர்கள். நாய்களும் இதுவரை யாரையும் கடிப்பதோ, தொந்தரவு செய்வதோ இல்லை. பூஜை நடக்கும் போது கோயிலின் முக்கிய நாய்வாலை ஆட்டியபடி சன்னதி முன்பு போகிறது. பின் அமைதியாக உடலைச் சுருட்டியபடி அமர்கிறது. கர்ப்பகிரஹத்தினுள் இருக்கும் இறைவனையே உற்று நோக்குகிறது. பூஜை முடிந்து பெரிய கண்டாமணி ஒலி எழும்ப, நாயும் எழுந்து நின்று பின் பிரசாதம் தரும் வரை பொறுமையுடன் நின்று பிரசாதத்தையும் சாப்பிட்டுச் செல்கிறது. இதைக் காணவே பலரும் மாலை விசேஷ பூஜையில் பங்கு பெறுகின்றனர்.

இந்த நாய் வரக் காரணம் என்ன எனத் தெரிந்துகொள்ள அதன் புராணக்கதையை நாம் பார்க்க வேண்டும்.

பல வருடங்களாக குழந்தை பாக்கியம் இல்லையே என ஏங்கிய நம்பூதிரி தம்பதிகள் எப்பொழுதும் இறை சிந்தனையுடன் பிரார்த்தித்த வண்ணம் இருந்தனர். ஒருநாள் அவர்கள் வல்லப்பட்டணம் என்ற நதியோரம் நடந்துவர திருநெட்டிக்காலு என்னும் இடம் வந்ததும் பச்சிளங்குழந்தையின் அழுகுரல் கேட்டு அந்தத் திசையில் சென்றனர். அங்குஒரு ஆண் குழந்தை கேட்பாரற்றுக் கிடந்ததைக் கண்டனர். முத்துப்போல் ஒரு குழந்தை கிடைத்ததால் ‘முத்தப்பன்’ எனப் பெயரிட்டு வளர்த்தனர். பிராமணக் கலாசாரத்தில் வளர்ந்தாலும் சற்றுவயது வந்தவுடன் முத்தப்பன் பலவிதமான நண்பர்களுடன் சிநேகம் கொண்டான். அதில் திருவப்பன் என்ற பையன் சேரியைச் சேர்ந்தவன். அவனுடன் எப்போதும் ஒரு நாயும் இருக்கும். அவன் எங்கு போனாலும் நாயும் கூடவே போகும். முத்தப்பன், திருவப்பன் எங்கு சென்றாலும் சேர்ந்தே போவார்கள்.. கூடவே நாயும்தான்! திருவப்பனுக்கு வேட்டை என்றால் மிகவும் பிடிக்கும். அவனுடனே சேர்ந்து இருக்கும் முத்தப்பனும் வேட்டைக்கு அவனுடன் போக ஆரம்பித்தான். பறவைகளை வேட்டையாடிய பின் அதை நெருப்பில் சுட்டு ஆசையாக தன் நண்பனுக்குக் கொடுத்தான் திருவப்பன்.முத்தப்பனும் கொஞ்சம் கொஞ்சமாக மாமிசம் சுவைக்க ஆரம்பித்தான். அத்துடன் சாராயமும் சாப்பிட ஆரம்பித்தான்.

அவன் வீட்டுக்கு வரும்போது அவன் வாயில் துர்நாற்றம் வீசவே, முத்தப்பனின் தாயார் மிகவும் வருத்தமுற்றாள். வைதீக மந்திரங்களைக் கரைத்துக் குடித்த இந்த முத்தப்பன் இப்படித் திசை மாறிப் போகிறானே என அவனது தந்தையும் வருந்தி அவனை அழைத்தார்.

"என்ன முத்து.. ஏன் இப்படிச் செய்கிறாய்? உன் தாயை அழவிடலாமா? இது நியாயமா?"

முத்தப்பன் பதிலளிக்கவில்லை. கைகளைக் கூப்பியபடியே அங்கிருந்து நகர்ந்தான்.

அன்று இரவு.

முத்தப்பனின் அன்னைஉறங்கிக் கொண்டிருக்க, ஒரு வேடன் கனவில் வந்தான். "அம்மா நான்தான் சிவன். முத்தப்பனாக உன்னிடம் வந்தேன். நான் இனி இங்கிருக்கும் மக்களைக் காக்க அக்கரைக்குப்போகிறேன். என்னைப் பார்க்க விரும்பினால் நீ இந்த நதியைக் கடந்து வரவேண்டும்"

தன் கண்களைக் கசக்கியபடியே அன்னை எழுந்தாள். தன் மகன் சிவபெருமான் என்ற உண்மை அவளுக்குப் புரிந்ததும், தன் கணவரிடமும் இந்தக் கனவைப் பற்றிச் சொல்ல அவரும்திகைத்துப்போய் நின்றார்.

முத்தப்பன் நதியின் மறுபக்கம் போகும்போது தன் நண்பன் திருவப்பனையும் அவன் வளர்த்த நாயையும் தன்னுடனே கூட்டிச் சென்றான். இதுவே வல்லப்பட்டணம் நதிக்கரையில் மடப்புறா என்ற கோயில். இதில் இறைவனாக முத்தப்பன் இருக்க, கூடவே திருவப்பனுக்கும்பூஜை நடக்கிறதுகூடவே நாய்க்கும்தான்.

பிரசாதம் என்று எடுத்துக் கொண்டால் எல்லாமே அசைவம்தான். மீன் சாதம், வாழைப்பழம், கள், சாராயம், மாமிசம் போன்றவை பிரசாதமாக சமர்ப்பிக்கப்படுகின்றன.

மலையாள பஞ்சாங்கத்தின்படி மாதத்தின் கடைசி நாள் வைதீக முறைப்படிபூஜையும் அதற்கேற்ற பிரசாதமும் இறைவனுக்குப் படைக்கிறார்கள்.

சிவபெருமானிடம் பக்தர்கள் வந்து தங்கள் கஷ்டங்களையும் பிரச்சனைகளையும் சொல்லிப் பிரார்த்திக்க, அவர்களது குறைகள் சரியாகின்றன. நாய் பைரவராக இருப்பார் என நினைக்கத் தோன்றுகிறது.

வட இந்தியாவில் இன்றும் பல பைரவக் கோயில்களில் விஸ்கி பிராந்தி பிரசாதமாகப் படைக்கப்படுகின்றது.

முத்தப்பனை சிவனாகவும், திருவப்பனை விஷ்ணுவாகவும் மக்கள் எண்ணி வணங்குகின்றனர். இந்தக் கோயிலில் எப்போதும் அன்னதானம் நடந்தபடியே இருக்கிறது.

இந்தக் கோயிலுக்குச் செல்ல வேண்டுமானால் கண்ணூருக்குச் சென்று அங்கிருந்து சுமார் இருபது கி.மீ. மேலே செல்ல வேண்டும்.

About The Author