பத்தாயிரம் தலைமுறைகளின் ஆசான் (3)

ஒரு மாணவன் ஒருமுறை நெற்பயிரும் முறையைக் குறித்த நுட்பமான கேள்வியொன்றை எழுப்ப கன்ஃப்யூஷியஸ், "வேறு உயர்ந்த திறனில் ஒன்றும் உனக்கு ஆசையில்லையா?", என்பதற்கிணையாக எதையோ கேட்டிருக்கிறார். திறனில் உயர்ந்தது தாழ்ந்தது என்று தனக்குள்ளே சில பாகுபாடுகளை வைத்திருந்தார் கன்ஃப்யூஷியஸ் என்று இவ்விஷயம் ஆய்வாளர்களிடையே சில சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், தன் மாணவனின் குறிக்கோளும் நோக்கமும் மிக உயர்வாக இருக்கவே அவர் விழைந்திருக்கிறார் என்று இதற்கு விளக்கம் கொடுப்போரே அதிகம் உளர்.

வேய் நாட்டுப் பகுதியில் ஒரு முறை கன்ஃப்யூஷியஸ் பயணத்தில் இருந்தார். அப்போது, அவருக்கு சாரதியாக இருந்தது ரன் யூ என்ற ஒரு முக்கிய மாணவன். சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டு வந்த ஆசான் சட்டென்று, "எத்தனை அடர்த்தியான மக்கள் தொகை!", என்று மக்கள் கூட்டத்தைக் கண்டு வியந்தார். மாணவனோ, "குருவே, அடர்த்தியான மக்கள் தொகை இருந்தால் அடுத்து என்ன செய்ய வேண்டும்?", என்று வினவினான். "அவர்களையெல்லாம் பணக்காரர்களாக்கிவிட வேண்டியது தான்", என்ற குருவைப் பார்த்து, "பணக்காரர்களான பின்பு அவர்களை என்ன செய்வது?", என்று இன்னொரு கேள்வி கேட்டான். "எல்லோருக்கும் கல்வியைப் புகட்ட வேண்டியது தான்", என்றார் ஆசான்.

அரசன்-குடிமகன், கணவன்-மனைவி, பெற்றோர்-குழந்தைகள், இளையோர்-மூத்தார், அண்ணன்-தம்பி, நண்பர்கள் ஆகிய முக்கியமான ஐந்து உறவுமுறைகள் குறித்துச் சொல்வார். நட்பு தவிர மீதி உறவுகள் மூத்தவருக்கும் இளையவருக்குமானவை. இளையவர் மூத்தவருக்குக் காட்ட வேண்டிய விசுவாசம் மற்றும் கீழ்ப்படிதல் குறித்தும் மூத்தவர் இளையவருக்குக் காட்ட வேண்டிய பெருந்தன்மை குறித்தும். கன்ஃப்யூஷியஸ் வகுத்தளித்த ஒரு குடும்பத்தில் மூன்று அல்லது நான்கு தலைமுறைகள் ஒரே கூரையின் கீழ் வாழ்ந்தனர். அதுவே சீரும் சிறப்பும் மிக்க ஒரு குலத்துக்கு அடையாளம். ஒவ்வொருவனும் சந்ததியர்களை உருவாக்குவது மிகமுக்கிய கடமை. அதைவிட பெற்றோரை மதித்துப் பேணுதல் தான் மிக முக்கிய அறமாக வலியுறுத்தப்பட்டது.

அன்றைய அதிகார வர்க்கம் மிகுந்த பேராசையும் கொடுமை மனமும் கொண்டு அடக்குமுறைகள் பல செய்து வந்தது. சாதாரண எளியோர் அடுக்குமுறைகளுக்கு உட்பட்டு நியாயங்களற்ற மரபுகளால் பாதிக்கப்பட்டு கண்மூடித்தனமான நம்பிகைகளால் கண்டுண்டு கிடந்தனர். சமூகத்தில் மூடநம்பிக்கைகள் பெருவாறியாக வேரோடிக் கிடந்தன. மனிதகுலத்தை நினைத்து கவலைகொண்ட கன்ஃப்யூஷியஸ் காரண காரியங்களின் மூலம் மனிதனின் நிலையை மாற்ற எண்ணி அதன்படி செயல்படவும் ஆரம்பித்தார். இதற்கு அடித்தளமாக அவர் தனிமனித ஒழுக்கத்தைக் கையிலெடுத்தார். அதுவே சமூகம் முன்னேற்றம் கொண்டு நல்ல மாற்றங்கள் பெற உதவும் என்று திடமாக நம்பிய அவர், ‘மனிதத்துடன் இருப்பவனே மனிதன்’ எனும் தத்துவத்தைத் தொடர்ந்து போதித்தார்.

மனிதநேயத்தை அவர் சக மனிதனின் மீது காட்டும் அன்பு, சகமனிதனுக்கு உதவுவது, சகமனிதனின் நியாயத்துக்குக் குரல் கொடுப்பது, தான் புரிந்து கொள்ள நினைப்பவற்றை சகமனிதன் புரிந்து கொள்ள உதவுவது, தனக்கு விருப்பமில்லாததை சகமனிதன் மீது திணிக்காதிருப்பது என்பவற்றின் கலவையென்று வகுத்தார். அத்துடன், நல்லொழுக்கம், நற்பண்பு, நேர்மை, மூத்தோரை மதித்துப் பேணுதல், நன்றியுணர்வு, விசுவாசம், நம்பிக்கை, ஞானம் போன்றவற்றையும் மறந்து விடுதல் கூடாதென்பார். அந்தஸ்து, சொத்து, உயிர் போன்ற எல்லாவற்றையும் விட நெறிகள் ஒருவனுக்கு மிக முக்கியமாகின்றன என்று வலியுறுத்திய அவர் அடிக்கடி, ‘அந்தஸ்தும் செல்வமும் சொத்தும் எல்லோராலும் விரும்பப்படுபவை. ஆனால், அறவழியில் வராதிருப்பின் அவை எனக்கு வேண்டவே வேண்டாம். வறுமையும், அது போன்ற கீழ்மையும் எல்லோராலும் வெறுக்கப் படுபவை. மறவழியில் தான் அவற்றைத் துறக்க முடியுமானால், அவை என்னுடனேயே இருந்துவிட்டுப் போகட்டும்’, என்று சொல்லி வந்தார். மனிதத்தைக் காப்பாற்ற ஒருவன் எதையும், அது உயிராக இருந்தாலுமே கூட இழக்கத் தயாராக இருக்க வேண்டும் என்பார் கன்ஃப்யூஷியஸ்.

அறநெறி வழுவாததும் மனிதநேயம் மிகுந்ததுமான ஓர் அரசாங்கமே ஒரு நாட்டிற்கு உகந்தது என்றார். மிகக் கடுமையான சட்டங்கள் மற்றும் கொடூரமான தண்டனைகளுக்கு எதிராகப் பேசினார். அவை தண்டனையிலிருந்து தப்ப நினைக்கும் எளிய மனம் கொண்ட குற்றவாளியை மீண்டும் தவறுகள் செய்யவே தூண்டும் என்றும் சரி எது தவறெது என்பதை யோசிக்கும் திறனையே அவனிடமிருந்து களைந்தெடுத்து விடுமென்றும் நாளடைவில் மானஅவமான உணர்ச்சிகளற்ற மனிதர்கள் உருவாகி விடுவார்களென்று கூறி வந்த கன்ஃப்யூஷியஸ் நாட்டின் தலைவனுக்கும் பல்வேறு முக்கிய குணங்களை வலியுறுத்துவார். தலைவன் நீதி வழுவாது உறுதியுடன் இருந்து குடிமக்களை நெறிப்படுத்துதல் மட்டுமே சமூக மறுமலர்ச்சிக்கு உதவும். அரசாங்கப் பதவிகளில் இருப்போர் அனைவரும் பண்பாளர்களாக இருப்பது இன்றியமையாதது.

கன்ஃப்யூஷியஸ் பெண்களைப் பற்றி எழுதியதே மிகக் குறைவு. பெண் குறித்த அவரது கருத்து உயர்வானதாக இருந்ததேயில்லை. சொல்லப் போனால், ‘பெண்களை விழுங்கியவர்’ என்றே வரலாற்று வல்லுனர்கள் அவரைக் குறிப்பிடுகின்றனர். சகமனிதனிடம் அன்பு பாராட்டச் சொன்ன அவரே பெண்களை அடிமைகள் மற்றும் சின்ன மனிதர்கள் (ஹ்சியாவ் ரன்) என்றே குறிப்பிடுகிறார். இவரைப் பொருத்தவரை ஆணும் பெண்ணும் சமமில்லை, ஆகவே, அவரது சமத்துவங்கள் எல்லாமே ஆண்களுக்கானவை என்றெண்ணத் தோன்றும். பெண்ணுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதேயில்லை என்று கருதிய அவர் மூன்று கீழ்ப்படிதல்களையும் நான்கு குணங்களையும் பெண்களுக்கான பாடங்கள் என்று தொகுத்தளித்தார். திருமணத்திற்கு முன்பு தந்தைக்கும், திருமணத்திற்குப் பிறகு கணவனுக்கும், கணவன் இறந்த பிறகு மகனுக்கும் பெண்ணானவள் கீழ்ப்படிதல் வேண்டும். கற்பு, வம்பளக்காத இதமான பேச்சு, தாந்தோன்றியாக இல்லாமல் நளின குணம், ஓய்வு நேரங்களில் கைவினைகளிலும் வீட்டை அழகு படுத்துவதில் செலவிடுதல் ஆகிய குணங்களுடன் பெண் இருக்க வேண்டும்.

73 வது வயதில் அவர் இறந்து போன போது அவரது மாணவர்கள் மூன்றாண்டுகளுக்கு துக்கம் அனுஷ்டித்தனர். கன்ஃப்யூஷியஸின் முக்கிய சீடரான ஜீகோங், அக்கால வழக்கப்படி ஆசிரியரது கல்லறைக்கு அருகில் அமைக்கப் பெற்ற குடிலில் ஆறாண்டுகள் வசித்து அன்பிற்குரிய ஆசானுக்கான தன் துக்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். தனது கோட்பாடுகள் சீனச் சமூகத்தின் அடித்தளமாகும் என்றும் அவர் எதிர்பார்த்திருக்கவே வழியில்லை. அத்துடன், தன் கல்லறை மிகப் பெரியதொரு அருங்காட்சியகமாக எதிர்காலத்தில் உருவெடுக்கும் என்று கன்ஃப்யூஷியஸ் துளியும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். அங்கிருக்கும் ஆலயத்துக்குச் சென்று காணும்/வழிபடும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு வெளிநாட்டு மக்களை நாம் அன்றாடம் பார்க்க முடியும். அவரது அரசியல் வாழ்வை ஒப்பிடும் போது, சாதனைகள் பல கொண்ட அவரது கல்வித்துறை வாழ்க்கை சீரும் சிறப்புமாக இருந்திருக்கிறது.

புனிதராகப் போற்றப்படும் கன்ஃப்யூஷியஸின் சீடர்கள் மற்றும் ஒரே பேரன் என்றறியப்படும் ஜீஸி என்பவர்கள் தான் ஆசானின் மரணத்துக்குப் பிறகு அவரது பள்ளியை எடுத்து நடத்தினர். அவரது கோட்பாடுகளைப் பரப்ப அவர்கள் ஏராளமான முயற்சிகள் எடுத்தனர். அவர்களில் பெரும்பாலோர் நாட்டின் அரசவைகளிலும் நீதிமன்றங்களிலும் உயர்பதவிகளில் அமர்த்தப்பட்டனர். அவரது கோட்பாடுகள் 200 ஆண்டுகளுக்கு பிறகு தான் அதிக கவனம் பெற்று வளர ஆரம்பித்தது. கி.மு 372-289 ஆண்டுகளில் வாழ்ந்த மென்ஸியஸ் மற்றும் ஸுன் ஜீ ஆகியோரால் கன்ஃப்யூஷியனிஸம் எனும் மாபெரும் தத்துவம் சிற்சில மாற்றங்கள் செய்யப்பட்டு மேலும் வளர்த்தெடுக்கப் பட்டது.
பின்னால் ஸோங் முடியாட்சியின் ஜூ ஸி (கி.பி 1130-1200) தாவோ மற்றும் பௌத்த கோட்பாட்டுக் கூறுகளை கன்ஃப்யூஷியஸின் போதனைகளில் சேர்த்ததாகச் சொல்வார்கள். இதுவே நியோ-கன்ஃப்யூஷியனிஸம் என்றறியப்படுகிறது. கலாசாரப் புரட்சியில் மற்ற சடங்கு சம்பிரதாயங்களும் தடைசெய்யப்பட்ட போது கன்ஃப்யூஷியஸின் கோட்பாடுகளும் கூட தடைசெய்யப் பட்டன. அவரது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்கும் அனுமதி மறுக்கப் பட்டது. உலகெங்கிலும் கன்ஃப்யூஷியஸின் கோட்பாடுகள் ஆய்வுகளுக்கும் மறுவாசிப்புக்கும் தொடர்ந்து உட்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, தாய்வானில் இவரது தத்துவங்கள் இன்னும் அதிகமான வரவேற்பைப் பெறுகின்றன.

முடியாட்சிகளின் போது கன்ஃப்யூஷியஸின் வழித்தோன்றல்கள் அவ்வப்போது தொடர்ந்து கண்டறியப்பட்டனர். அவர்களுக்கு உயர்பதவிகளும் கொடுக்கப்பட்டன. இது வரை கன்ஃப்யூஷியஸின் பின்னோர்களாக 77 தலைமுறைகள் கடந்துள்ளன. ஆயிரக்கணக்கான சந்ததியினர் இருக்கிறார்கள் என்கிறார்கள். 72வது தலைமுறையில் கோங் ஸியன்பேய் என்ற பெண்மணியை ச்சியன்லோங் மாமன்னர் மணந்ததற்கான வரலாற்றுப் பதிவுகளுண்டு. கன்ஃப்யூஷியஸின் பாரம்பரிய வீட்டின் தலைவரின் குலப்பெயர் கொங் தேசெங். சந்ததியின் முக்கிய இழையில் வந்தவர் சீனாவின் உள்நாட்டுப் போரின் போது ச்சூஃபூவிலிருந்து உயிருக்குத் தப்பி தாய்வானுக்குப் போய்விட்டார். அவர் தாய்வான் தேசிய பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கிறார். அதற்கு முன்பு சீனாவின் அரசுத் தேர்வாணையத்தின் உயரதிகாரியாக இருந்திருக்கிறார். இவர் ச்சிங் முடியாட்சியின் உயர் அதிகாரி ஒருவரின் கொள்ளுப் பேத்தியை மணம் செய்தவர்.

(‘கனவிலே ஒரு சிங்கம்’)-மின்னூலில் இருந்து)

To buy the EBook, Please click here

About The Author