பனீர் மசாலா

தேவையானவை:

பனீர் – 250 கிராம்,
தக்காளி – 5,
பெரிய வெங்காயம் – 3,
பூண்டு – 7 பற்கள்,
மிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டி,
கரம் மசாலா – அரை தேக்கரண்டி,
சீரகத்தூள் – அரை தேக்கரண்டி,
உப்பு – தேவைக்கு,
வெண்ணெய் – 3 மேஜைக்கரண்டி,
சோள மாவு – 3 மேஜைக்கரண்டி,
எண்ணெய் – தேவையான அளவு.

சட்னிக்கு:

புதினா – ஒரு கட்டு,
கொத்துமல்லி – அரை கட்டு,
கறிவேப்பிலை – கால் கட்டு,
பச்சை மிளகாய் – நான்கு,
இஞ்சி – ஒரு எலுமிச்சை அளவு,
பூண்டு – 5 பற்கள்,
வெங்காயம் – மூன்று.
தக்காளி – நான்கு,
எண்ணெய் – ஒரு மேசைக்கரண்டி
.
செய்முறை:

முதலில் சட்னி செய்யத் தேவையான பொருட்களை எண்ணெயில் நன்றாக வதக்கிச் சட்னி பதத்தில் அரைத்துக் கொள்ளவும்.

பனீரை அரை இன்ச் கனத்திற்கு அகலமாகவும், நீளமாகவும் அரிந்து கொள்ளவும்.பனீர் ஒரு துண்டு எடுத்துக் கொண்டு, அதன் மேல் சட்னியை நன்கு தடவி மற்றொரு துண்டால் மூட வேண்டும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காயவைத்துக் கொள்ளுங்கள். சோளமாவைப் பஜ்ஜி மாவு பதத்திற்குக் கரைத்துக் கொள்ளுங்கள். பிறகு, பனீர் துண்டுகளை (சட்னியுடன்) அந்தக் கரைசலில் நனைத்து எடுத்துப் பொரிக்கவும்.

பின்னர், வெங்காயம், பூண்டு ஆகியவற்றைப் பொடியாக நறுக்கவும். தக்காளியை மிகவும் பொடியாக நறுக்கவும்.

வெண்ணெயைக் காய வைத்து, நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். வதங்கியதும் தக்காளி சேர்க்கவும். நன்கு வதங்கியதும், அத்துடன் மிளகாய்த்தூள், உப்பு சேர்த்துச் சிறு தீயில் பச்சை வாசனை போகக் கொதிக்கவிடவும். பிறகு சீரகத்தூள், கரம் மசாலா சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.

ஒரு தட்டில் பொரித்த பனீரை வைத்து, அதன்மேல் இந்தக் குழம்பை ஊற்றிப் பரிமாறுங்கள். சப்பாத்தி, நான், பிரைடு ரைஸுக்கு ஏற்ற சைட் டிஷ்! சுவைத்துப் பார்த்து உங்கள் அனுபவத்தை எங்களுக்கு எழுதுங்கள்!

About The Author