பயனுள்ள வீட்டுக்குறிப்புகள் (2)

1. குப்பைமேனிக் கீரையைக் கொத்து கொத்தாகப் பறித்து, நன்றாகக் கழுவி ஒரு தரம் உதறிவிட்டு, அம்மியிலோ மிக்சியிலோ போட்டுத் தண்ணீர் விடாமல் அரைத்துச் சாறு எடுங்கள். சாறு எவ்வளவு இருக்கிறதோ, அதே அளவிற்குச் சுத்தமான தேங்காய் எண்ணெய் கலந்து, இந்தக் கலவையை வாணலியில் ஊற்றி மிதமான தீயில் காய்ச்சுங்கள். ஈரப்பதம் போய், அடியில் லேசாக வண்டலாகப் படியும் வரை காய்ச்ச வேண்டும். பிறகு, படிந்துள்ள வண்டலை, ஆறிய பிறகு நன்றாக உலர்ந்த கண்ணாடி பாட்டில்களில் ஊற்றிக் காற்று புகாதவாறு இறுக்கமாக மூடி வையுங்கள். இதுதான் குப்பைமேனித் தைலம்! இதை ஒன்றரைத் தேக்கரண்டியளவு எடுத்து முகத்திலும், முழங்கைகளிலும் மேல் நோக்கித் தேய்த்துக் கொண்டு, பதினைந்து நிமிடங்கள் கழித்துக் கடலை மாவோ பயற்றம் மாவோ தேய்த்துக் குளித்தால் மேனி மென்மையாகும், மினுமினுப்பு கூடும், எல்லாவிதமான தோல் நோய்களும் நீங்கும்.

2. வற்றல் குழம்பு, வெந்தயக்குழம்பு போன்றவற்றைக் கொதிக்க வைத்து இறக்கும்பொழுது சிறிது பருப்புப்பொடி சேர்த்தால் சுவையாகவும் இருக்கும்; குழம்பு கெட்டியாகவும் இருக்கும்.

3. வாழைப்பூவை நறுக்கும்பொழுது விரல்களில் சிறிது உப்பைத் தடவிக் கொண்டால் விரல்களில் கறை படியாது.

4. பொரியலுக்கு, தேங்காய்த்துருவலுக்குப் பதிலாகப் பச்சைச் சீரகத்தைப் பொடித்துப் போட்டால் சுவை கூடும்.

5. வெங்காயத்தை நன்றாக அரைத்துத் தலையில் பூசிச் சற்று ஊற வைத்துக் குளிக்க, பொடுகு போய்விடும்.

6. இஞ்சி, காய்ந்த மிளகாய், கிஸ்மிஸ், ஓமம் ஆகியவற்றை அரைத்துத் தயிரில் கலந்து, இரண்டு மேசைக்கரண்டி மாதுளம்பழ விதைகளும், சிறிது உப்பும் சேர்த்துக் கலந்தால் சுவையான மாதுளைப் பச்சடி தயார்! சப்பாத்தி, தோசை போன்றவற்றுக்குத் தொட்டுக் கொள்ள மிகவும் சுவையாக இருக்கும்.

7. தோசைக்கு அரைக்கும்பொழுது ஒரு கைப்பிடி அவல் சேர்த்து அரைத்தால் தோசை மிகவும் முறுகலாக வரும்.

8. இட்லிக்கு அரைக்கும்பொழுது, உளுந்தைச் சற்று குறைவாகப் போட்டுக் கெட்டியாக அரைத்துக்கொண்டு, இட்லி வார்க்கும்பொழுது ஒரு கிண்ணம் நல்லெண்ணெயை ஊற்றிக் கலந்து வார்த்தால் இட்லி மிருதுவாகவும் இருக்கும், இரண்டு நாட்கள் வரை கெட்டும் போகாது. பிரயாணங்களுக்கு இந்த முறையில் தயாரிக்கலாம்.

9. சிறிது மிளகை வெறும் வாணலியில் வறுத்துப் பொடித்து வைத்துக் கொண்டு, வறட்டு இருமல் என்றால் நெய்யுடன் கலந்தும், ஜலதோஷத்துடன் கூடிய இருமலானால் தேனுடனும் சாப்பிட, உடனே குணமாகும்.

10. உளுந்து வடை செய்யும்பொழுது, மாவில் சேமியாவைப் பொடி செய்து சேர்த்து வடைகளைப் பொரித்தால் சுவையாகவும், மொறுமொறுப்பாகவும் இருக்கும்.

11. தேங்காய், மிளகு, சிறு துண்டு இஞ்சியுடன் பேரீச்சம் பழத்தைச் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். இந்தச் சுவையான துவையலைத் தயிருடன் கலந்து சாப்பிடலாம். தேவையானால் பொடியாக நறுக்கிய வெங்காய,
வெள்ளரித் துண்டுகளைச் சேர்க்கலாம்.

12. பசலைக்கீரையை நன்றாகக் கழுவி விட்டுக் கடலை மாவில் தோய்த்துப் பொரித்தால், உடம்புக்கு அளப்பரிய சத்துக்களைத் தரும் பசலைக்கீரை பஜ்ஜி தயார்!

13. அரிசி வேகும்பொழுது சில துளிகள் எலுமிச்சை ரசம் சேர்த்தால் மல்லிகைப்பூப் போன்ற சாதம் கிடைக்கும்.

14. வற்றல், வடகம் போன்றவற்றில் சில சிவப்பு மிளகாய்களைப் போட்டு வைத்தால் ஓர் ஆண்டு ஆனாலும் கெடாது.

15. வேப்பம்பூவை நெய்யில் வறுத்து, சுடு சாதத்துடன் சிறிது நெய் சேர்த்து அடிக்கடி சாப்பிட மிகவும் நல்லது.

16. எலுமிச்சம்பழங்களை ஊறுகாய் போடும் முன்னால், சர்க்கரை சேர்த்த சுடுநீரில் ஊற வைத்துப் போட்டால் ஊறுகாய் கசக்காமல் இருக்கும்.

17. பாகற்காய்ப் பொரியலுக்கு உப்பு, மிளகாய்த்தூளுடன் சிறிது ஆம்சூர் சேர்த்தால் கசப்பு குறைந்து, சுவையாக இருக்கும்.

18. எலுமிச்சம்பழங்களின் தோலைக் காய வைத்து, உப்பு சேர்த்துப் பொடி செய்து நல்லெண்ணெயுடன் கலந்து பற்களைத் துலக்கினால் பற்களின் மஞ்சள் கறை போகும். வாரம் ஒரு முறை பயன்படுத்தலாம்.

19. சூடு பட்ட காயத்திற்கு, பெருங்காயப் பொடியை நீரில் கலந்து தடவினால் வடுவின்றிக் குணமாகும்.

20. சிறிது மருதாணி இலைகளுடன் கொஞ்சம் படிகார உப்பைச் சேர்த்து, விழுது போல் அம்மியில் அரைத்து, மருதாணி இடுவது போல் இரவில் நகத்தைச் சுற்றித் தொப்பி போட்டுக்கொண்டு காலையில் எடுத்து விட்டால் நகச்சுற்று சுத்தமாக நீங்கி விடும்.

21. சுக்கு, மிளகு திப்பிலி, பெருங்காயம், இந்துப்பு, உப்பு ஆகியவற்றைக் காய்ந்த கறிவேப்பிலையுடன் சேர்த்துப் பொடி செய்தால் சுவையும், சத்தும் நிறைந்த கறிவேப்பிலைப் பொடி தயார்! இதைச் சுடு சாதத்தில் போட்டு நெய் விட்டுப் பிசைந்து சாப்பிட்டு வர, கண்கள் ஒளி பெறும், கூந்தல் தொடர்பான பிரச்சினைகள் தீரும்.

22. தோசைக்கல்லில் புளித்த தயிரை நன்றாகத் தடவிப் பத்து நிமிடங்கள் கழித்து தேய்த்துக் கழுவ, பிசுக்கு போய்விடும்.

23. கொத்துல்லித் தழையையும், அதிமதுரத்தையும் மசிய அரைத்துக் கொண்டு, உலர் சருமமாக (dry skin) இருந்தால் பாலிலும், எண்ணெய்ச் சருமமமாக (Oil skin) இருந்தால் பன்னீரிலும் கலந்து முகத்தில் தடவி, பதினைந்து நிமிடங்கள் கழித்துக் கழுவினால் முகம் பொலிவுறும். அதிமதுரப் பட்டைகள் நாட்டுமருந்துக் கடைகளில் கிடைக்கும்.

24. ஒரு கப் காய்ச்சிய பசும்பாலில் ஐந்தாறு பூண்டுப் பற்களைத் தட்டிப் போட்டு, பத்து நிமிடங்கள் மட்டான தழலில் கொதிக்க வைத்து இரவில் குடித்து வர, உடல் எடை குறையும். (திருமணமானவர்களுக்கு மட்டும்)

********

Disclaimer: Tips given in this section are based on knowledge and experience of the author. Nilacharal.com cannot take any responsibility for the authenticity and contents of the response.

About The Author