பயனுள்ள வீட்டுக்குறிப்புகள் (1)

1. ஃப்ளாஸ்க்கைத் திறக்கும்பொழுது வரும் வாடையை நீக்க அதில் ஒரு தேக்கரண்டி சர்க்கரையைப் போட்டு மூடி வையுங்கள்.

2. முட்டைக்கோஸ், காலிஃப்ளவர் ஆகியவற்றை வேக வைக்கும்பொழுது, கூட ஒரு துண்டு எலுமிச்சை சேர்த்து வேக வைத்தால் நிறமும் மாறாது, சுவையும் கூடும்.

3. பூரி – கிழங்கு, காய்கறிக் குருமா செய்யும்பொழுது வெங்காயம் போதாமல் போய்விட்டால் கவலை வேண்டாம்! முழுவதும் வெங்காயம் போடுவதற்குப் பதிலாக முட்டைக்கோசையும், வெங்காயத்துடன் கலந்து போட்டால் சிறிதும் வித்தியாசம் தெரியாது.

4. உருளைக்கிழங்கை நன்றாக அரைத்துச் சாறு எடுத்து வைத்துக் கொண்டு, காலில் தடவினால் வெடிப்புகள் மறைந்து மென்மையாகும்.

5. துளசி கொதிக்க வைத்த நீரில் சுக்கு தட்டிப் போட்டு, தேன் கலந்து, காலை நேரத்தில், வெறும் வயிற்றில் பருகி வந்தால் மலச்சிக்கல் நீங்கி, இரத்த ஓட்டம் சீரடைந்து தேகம் ஆரோக்கியமாகவும், வனப்பாகவும் இருக்கும்.

6. கார வகைகள் செய்யும்பொழுது வெண்ணெய்யும், ஸ்வீட் வகைகளுக்குச் சுத்தமான நெய்யும் சேர்த்துச் செய்தால் மிக மிகச் சுவையாக இருப்பதோடு, அதிக நாள் கெடாமலும் இருக்கும்.

7. கார வகைகளுக்கு மாவு பிசையும்பொழுது ஒரு கப் தேங்காய்ப்பால் சேர்த்துப் பிசைந்தால் தேங்காய் எண்ணெய்யில் செய்தவை போலச் சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.

8. கோதுமை மாவைக் கரைத்து பஜ்ஜி பொரித்தால் வித்தியாசமாகவும், சுவையாகவும் இருக்கும்.

9. தனியாவையும், தேங்காயையும் சிறிது வறுத்துப் பொடி செய்து வைத்துக் கொணடு தேவையானபொழுது சாம்பாரில் போட, சாம்பார் மணக்கும்.

10. புடலங்காய் விதைகளை நன்றாக வெயிலில் வைத்து விட்டு, சிறிது எண்ணெய்யில் உளுத்தம்பருப்பு, கடலைப் பருப்பு, சில மிளகாய்கள் ஆகியவற்றைப் போட்டு வறுத்து எடுத்துக் கொண்டு, இத்துடன் கொஞ்சம் உப்பு, பெருங்காயம் சேர்த்துப் பொடி செய்து, சுடு சாதத்துடன் நெய் கலந்து உண்ண பருப்புப் பொடி, பூண்டுப் பொடி போலச் சுவையாக இருக்கும்.

11. உணவு செரிக்காமல் நெஞ்சைக் கரிக்கும்பொழுது, ஒரு சிறு துண்டு எலுமிச்சம்பழத் தோலைக் கடித்து உண்ண, சரியாகும்.

12. வைட்டமின் ஏ, சி குறைவினால் வறண்ட சருமத்திற்கு, உணவில் கடலை, நெல்லிக்காய், கீரை, ரோஜா இதழ் சேர்த்து உண்ண, குறை நீங்கும்.

13. பித்தளை விளக்கை, விபூதியும் மண்ணெண்ணெய்யும் சேர்த்துத் துடைத்து பிறகு உலர்ந்த துணியினால் துடைக்க, பளீரிடும்.

14. நெய் காய்ச்சிய பாத்திரத்தில், அரை மூடி துருவிய தேங்காயுடன் ஒரு கப் பாலும், சர்க்கரையும் சேர்த்துக் கொதிக்க வைத்து பர்பி செய்து துண்டுகள் போட, மிக நன்றாக இருக்கும்.

15. நான்கைந்து செம்பருத்தி இலைகளுடன் உப்பு, சாம்பல் வைத்துத் தேய்க்க, பித்தளைப் பாத்திரங்கள் மின்னும்.

16. முள்ளங்கியையும், வாழைத்தண்டையும் சிறிய துண்டுகளாக்கி எலுமிச்சை ரசம், உப்பு சேர்த்து வெறும் வயிற்றில் உண்டால் ஊளைச் சதை குறையும்.

17. தீக்காயத்திற்கு, தேங்காய் எண்ணெயுடன் சிறிது சுண்ணாம்பைச் சேர்த்துத் தடவ, விரைவில் குணமாகும்.

18. அரைக் கிலோ கடுகெண்ணெயில் சிறிது கற்பூரத்தையும், 10 – 15 பூண்டுப் பற்களையும் நசுக்கிப் போட்டுக் காய்ச்சி எடுத்து வைத்துக் கொண்டால் கை கால் வெடிப்பு, பெரியவர்களின் மூட்டு வலி, குழந்தைகளின் நெஞ்சுச் சளி ஆகியவற்றுக்கு லேசாகச் சூடுபடுத்தித் தேய்க்க, குணமாகும்.

19. பீட்ரூட்டைத் தோல் சீவி, நன்றாகக் கழுவிச் சிறு துண்டுகளாக்கி, பச்சை மிளகாய்களுடன் வதக்கி உப்பு, புளியுடன் சேர்த்து அரைக்க மிகவும் சுவையான பீட்ரூட் துவையல் தயார்.

20. அடை மாவில் ஒரு கப் ஜவ்வரிசி கலந்து சுட, அடைகள் முத்து முத்தாக, பார்க்க அழகாகவும், சுவையாகவும் இருக்கும்.

******* 

Disclaimer: Tips given in this section are based on knowledge and experience of the author. Nilacharal.com cannot take any responsibility for the authenticity and contents of the response.

About The Author

1 Comment

Comments are closed.