பாடல் ரசிக்க வாரியளா? (3)

சிறு பஞ்ச மூலம் என்பது பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. இந்தப் பெயருக்கு ‘ஐந்து சிறிய வேர்கள்’ என்று பொருள்படும். இந்த வேர்கள் அடங்கிய மருந்து உடல் நலம் பேணுவது போல, சிறுபஞ்சமூலப் பாடல்களில் குறித்த பொருட்களும் வாழ்க்கை நலம் காப்பவை. இந்நூலை இயற்றியவர் காரியாசான் எனப் பெயர் பெற்ற காரி எனும் புலவர். இந்த சிறு பஞ்ச மூலத்திலிருந்து இரு பாடல்கள்.

பக்கம் படாமை, ஒருவற்குப் பாடு ஆற்றல்,
தக்கம் படாமை, தவம்; அல்லாத் தக்கார்,
இழிசினர்க்கேயானும் பசித்தார்க்கு ஊண் ஈத்தல்,
கழி சினம் காத்தல், கடன்.

நடு நிலையும், பிறபொருளிடத்தில் பற்று வைக்காமையும், துன்பம் ஆற்றுதலும் தவம் செய்பவர்களுக்கு இருக்க வேண்டிய குணங்கள் ஆகும். இழிகுலத்தில் பிறந்தவர்களாகவே இருந்தாலும் அவர்கள் பசித்திருந்தால் உணவு கொடுத்தலும், கோபத்தைத் தடுத்துக் கொள்ளலும் இல்லற வாழ்வில் இருப்பவர்களுக்கான கடமைகளாகும்.

பஞ்சப் பொழுது பாத்து உண்பான்; கரவாதான்;
அஞ்சாது, உடை படையுள், போந்து எறிவான்; எஞ்சாதே
உண்பது முன் ஈவான்; குழவி பலி கொடுப்பான்
எண்பதின் மேலும் வாழ்வான்.

பலருக்கும் பகுத்துண்பவன், தன்னிடமுள்ள பொருட்களை ஒளிக்காமல் பிறருக்குக் கொடுத்து உதவுபவன், தன் படை தோல்வியுற்றுச் சிதறும் நேரத்தில் அஞ்சாமல் போராடிப் பகைவரை அழித்துத் தன் படையைக் காப்பவன், பசித்த குழந்தைகளுக்குச் சோறளிப்பவன் எண்பது வயதுக்கு மேலும் சுகமாக உயிர் வாழ்வான்!

மூலம்: சிறு பஞ்ச மூலம் பாடல்கள்.
நன்றி: திரு.பால சங்கரன் எம்.ஏ, பி.எட் அவர்களின் உரை.

About The Author