பாதாள லோகத்தில் மாயசீலன் – 7

தங்க மூட்டைகளையும் இளவரசியையும் அனுப்பியபொழுது உடனுக்குடன் கயிற்றைத் திரும்ப அனுப்பிய தன் நண்பர்கள் இளவரசியை அனுப்பிய பிறகு தன்னைத் தூக்குவதற்குக் கயிறு அனுப்ப மட்டும் இவ்வளவு தாமதம் செய்வானேன் என்று மாயசீலனுக்கு ஐயம் எழுந்தது. எதற்கும் சோதித்துப் பார்க்கலாம் என்றெண்ணி, தனக்குப் பதில் ஒரு பெரிய கருங்கல்லைக் கயிற்றில் கட்டி, "இப்பொழுது என்னை மேலே இழுங்கள்" என்று கூவினான்.

கருங்கல்லை அவர்கள் பாதி உயரத்துக்கு இழுத்துக் கயிற்றை விட்டு விட்டனர். அடித்து மோதிக் கீழே சென்று அது தடாரென விழுந்தது.

‘நண்பர்களே! நீங்களும் இப்படிப்பட்டவர்கள்தானா’ என்று மாயசீலன் வருத்தத்துடன் தன்னுள் கூறிக் கொண்டான். பிறகு, பாதாள உலகைச் சுற்றியலைந்து மேலே செல்ல ஏதாவது வழி கிடைக்கிறதா என்று பார்க்கலானான். இவ்வாறு பல நாட்கள் சுற்றியலைந்தான். திடீரென்று ஒருநாள் புயல் மேகங்கள் திரண்டு வானம் இருண்டு விட்டது. ஆம்! அந்தப் பாதாளலோகத்துக்குள்ளேயே மழை கொட்டியது. மாயசீலன் வானளாவி உயர்ந்து வளர்ந்திருந்த ஒரு மரத்தின் அடியில் பதுங்கிக் கொண்டான். மரத்தின் உச்சியில் கூட்டினுள் இருந்த கழுகுக் குஞ்சுகள் பரிதாபமாய்க் கீச்சிடுவது அவன் காதில் விழுந்தது. உடனே மரத்தில் ஏறி, தனது சட்டையைக் கதகதப்பாக இருக்கும்படி கழுகுக் குஞ்சுகளுக்குப் போர்த்திவிட்டு இறங்கினான். மழை நின்றதும், தாய்க் கழுகு கூட்டுக்கு வேகமாய்ப் பறந்து வந்தது. தனது குஞ்சுகள் மூடப்பட்டு பத்திரமாய் இருப்பதைக் கண்ணுற்றது.
"குழந்தைகளே! உங்களைப் பத்திரமாய் மூடி வைத்தது யார்?" என்று கேட்டது. அதற்குக் குஞ்சுகள், "நீ அந்த ஆளைக் கொல்லாமல் இருப்பாயானால் யார் என்று சொல்கிறோம்" என்றன.
"கொல்ல மாட்டேன்! சொல்லுங்கள்" என்றது.

"மரத்துக்கு அடியில் உட்கார்ந்திருக்கிறானே? அவன்தான் எங்களை இப்படி மூடி வைத்துக் காப்பாற்றினான், அம்மா" என்றன குஞ்சுக் கழுகுகள்.

உடனே தாய்க் கழுகு மாயசீலனிடம் பறந்து வந்தது. "அன்புமிக்க மனிதனே! நீ யார்? யாருமே வர முடியாத இந்தப் பாதாளலோகத்துக்கு நீ எப்படி வந்தாய்?" என்று கேட்டது.

மாயசீலன் நடந்ததையெல்லாம் கூறினான். அவன் கதையைக் கேட்டு இரக்கம் கொண்ட கழுகு, "உனக்கு இப்பொழுது என்ன வேண்டும்? சொல்! கண்டிப்பாக உனக்காக எது வேண்டுமானாலும் செய்கிறேன்" என்று கழுகு அவனிடம் கூறிற்று.

அதற்கு மாயசீலன், "அப்படியானால் என் உலகிற்கு என்னைத் தூக்கிச் சென்று விடவேண்டும்" என்று கேட்டான்.

கழுகு மாயசீலனைப் பார்த்து, "நீ எனக்கு அளித்திருக்கும் பணி எளிதானது இல்லை. ஆனாலும், கூட்டில் நான் இல்லாதபோது இந்த மாதிரி கனமழையில் என் குஞ்சுகள் தப்பியது இதுதான் முதல்முறை. இப்பேர்ப்பட்ட உதவி செய்த உன் விருப்பத்தை நான் கண்டிப்பாக நிறைவேற்ற முயலுகிறேன்" என்றது.

"ஆனால், அதற்காக நீ சில ஏற்பாடுகள் செய்துகொள்ள வேண்டும்! ஆறு அண்டா இறைச்சியையும், ஆறு பை தண்ணீரையும் நாம் எடுத்துச் செல்ல வேண்டும். நாம் பறந்து சென்று கொண்டிருக்கும்பொழுது நான் என் தலையை வலப் பக்கம் திருப்பினால், நீ இறைச்சியில் ஒரு துண்டை என் வாய்க்குள் போட வேண்டும். இடப் பக்கம் திருப்பினால், குடிக்க ஒரு வாய் தண்ணீர் தர வேண்டும். நீ இவ்விதம் செய்யவில்லையென்றால் நாம் அங்கே போய்ச் சேர முடியாது. நான் பறக்க முடியாமல் தரையில் விழுந்து விடுவேன்" என்றது.

மாயசீலனும் கழுகு கூறியபடியே ஆறு அண்டா இறைச்சியும், ஆறு பை தண்ணீரும் தயார் செய்தான். பிறகு, கழுகின் முதுகில் ஏறி உட்கார்ந்து கொண்டான். இருவரும் பறந்தனர். கழுகு தன் தலையை வலப் பக்கம் திருப்பும்போதெல்லாம் மாயசீலன் அதன் வாய்க்கு ஓர் இறைச்சித் துண்டைப் போட்டான். தலையை அது இடப் பக்கம் திருப்பும்போதெல்லாம் ஒரு வாய்த் தண்ணீர் தந்தான். இவ்வாறு நெடுந்தூரம், நீண்ட நேரம் பறந்து கொண்டே இருந்தனர். பூவுலகை அடைய சிறிது தூரம் இருந்தது. கழுகு இறைச்சி வேண்டுமென்று தலையை வலப் பக்கம் திருப்பியது. ஆனால் மாயசீலனிடம், ஒரு துண்டு இறைச்சி கூட இல்லை. சட்டென்று, தன் தொடையிலிருந்து ஒரு துண்டை வெட்டியெடுத்து அதைக் கழுகின் வாயில் போட்டான். தொடர்ந்து அவர்கள் மேல் நோக்கி உயர்ந்து பறந்து கடைசியாக பூலோகத்தை வந்தடைந்தனர்.

அப்போது கழுகு மாயசீலனைப் பார்த்து, "தின்பதற்கு நீ கடைசி முறை என்ன தந்தாய் எனக்கு? மிகவும் சுவையாய் இருந்ததே!" என்று கேட்டது.

"என்னுடைய கால் தொடையிலிருந்து ஒரு துண்டு கொடுத்தேன்" என்று மாயசீலன் புன்னகையுடன் பதிலளித்தான். உடனே கழுகு, "என்ன காரியம் செய்து விட்டாய்!" என்று சொல்லியவாறு அந்தத் துண்டை வெளியே துப்பியது. பிறகு, எங்கோ பறந்து சென்று மூலிகை நீர் கொண்டு வந்தது. அந்தத் துண்டை மாயசீலன் தொடையில் வைத்துத் தண்ணீரைத் தெளித்தது. என்ன ஆச்சரியம்! கால் மீண்டும் பழையபடி ஆகிவிட்டது.

ஒரு சிறு உதவிக்காக உயிரையே பணயம் வைத்துத் தன்னைத் தன் உலகிற்கு மீட்டு வந்ததோடு, காலையும் குணப்படுத்தி அளவில்லா நன்மைகள் புரிந்த தாய்க் கழுகை மாயசீலன் கண்களில் நீர் தளும்பப் பார்த்தான். நன்றிப் பெருக்குடன் அதன் கழுத்தைக் கட்டிக் கொண்டான். கழுகும் தன் இறக்கைகளால் அவனை அணைத்துத் தன் அன்பைத் தெரிவித்தது. பின்னர், கழுகு மாயசீலனிடம் பிரியா விடைபெற்றுத் தன் இருப்பிடத்திற்குப் பறந்து சென்றது. மாயசீலன் தன் நண்பர்களைத் தேடிச் சென்றான். அவர்கள் இளவரசியின் நாட்டிற்குத்தான் சென்றிருக்க வேண்டும் என்று ஊகித்து அங்கு பயணித்தான்.

நண்பர்கள் மூவரும் இளவரசியின் நாட்டில்தான் தங்கியிருந்தனர். பாதாளலோகத்திலிருந்து தூக்கும்பொழுது கயிறு அறுந்து மாயசீலன் கீழே விழுந்து இறந்து விட்டதாக இளவரசியை நம்ப வைத்து, அவளை ஆறுதல்படுத்திச் சொந்த நாட்டிற்கு அவர்கள் அழைத்து வந்திருந்தார்கள். ஆனால், ஊருக்கு வந்து சேர்ந்ததும் அவளை மணந்து கொள்வதில் மூவருக்கும் இடையே பலத்த போட்டி. ஒவ்வொருவரும் இளவரசியைத் தானே மணந்து கொள்ள விரும்பியதால் அவர்களுக்கிடையில் சண்டை மூண்டது. இதைப் பார்த்த இளவரசியின் தந்தையான அந்நாட்டு அரசர், மறுநாள் அரசவை கூட்டி, பின்வருமாறு பேசலானார்.

"வீர இளைஞர்களே! மந்திரவாதியிடம் வீரப்போர் புரிந்து என் மகளை மீட்டது உங்கள் நண்பன் மாயசீலனாக இருந்தாலும், அவன் துரதிருஷ்டவசமாக உயிரிழந்துவிட்ட நிலையில், என் மகளை அங்கிருந்து காப்பாற்றி அழைத்து வந்த உங்களில் ஒருவருக்கு அவளை மணம் செய்விப்பதே முறை. ஆனால், நீங்கள் யாரும் விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லாததால் என் மகளை மணக்கவிருக்கும் அந்த ஒருவர் யார் என்பதைத் தீர்மானிக்க உங்களுக்குள் போர்ப் பந்தயம் நடத்துவதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை…"

இப்படி அரசர் உரையாற்றிக் கொண்டிருந்த நிலையில்தான் மாயசீலன் இளவரசியின் அரண்மனைக்குப் போய்ச் சேர்ந்தான். பாதாளலோகத்திலிருந்து கயிறு கட்டி மேலே தூக்கப்படும் முன், கடைசி நொடியில் தற்செயலாக இளவரசி அவனுக்கு அணிவித்த முத்திரை மோதிரம் அரசவைக்குள் நுழையுமளவுக்குச் செல்வாக்கு தரக்கூடியதாயிருக்கும் என்று அவன் அதுவரை நினைக்கவில்லை. வியப்புடன் உள்ளே நுழைந்தவன் அரசரின் அறிவிப்பைக் கேட்டான். போர்ப் பந்தயம் நடத்துவதைத் தவிர வேறு வழியில்லை’ என்று அரசர் கூறி முடிக்கும் முன் குறுக்கிட்டு,
"அந்தப் பந்தயத்தில் நானும் கலந்து கொள்ளலாமா?" என்று மாயசீலன் கம்பீரமாகக் கேட்க, அரசர், இளவரசி, மாயசீலனின் நண்பர்கள் என அனைவரும் திரும்பிப் பார்த்தனர். இரண்டு கைகளையும் இடுப்பில் வைத்தபடி மிடுக்குடன் நின்ற அவனைப் பார்த்ததும் நண்பர்கள் மூவரும் கதிகலங்கிப் போய்விட்டனர். தங்களை அவன் கொன்று போட்டு விடுவான் என்றே நினைத்தனர். மாயசீலனின் பராக்கிரமத்தை அவர்கள் நன்றாகவே அறிவார்கள்.

ஆனால், மாயசீலன் அவர்களைப் பார்த்து, "என் உடன்பிறந்த சகோதரர்களே எனக்கு வஞ்சம் புரியத் தயங்காதபோது, உங்களிடமிருந்து அதிகமாய் நான் எதிர்பார்க்கலாமா? மன்னிப்பதைத் தவிர வேறு ஒன்றுமே தோன்றவில்லை" என்று அவர்களை மன்னித்து வழியனுப்பி வைத்தான்.

இறந்துவிட்டான் என்று நினைக்கப்பட்ட மாயசீலன் திடீரென்று வந்து நட்டநடு அவையில் தோன்றி நிற்பதைக் கண்டு திகைப்பில் செயலற்றுப் போன இளவரசி, சிறிது நேரம் கழித்துத்தான் தன் உணர்வு வரப் பெற்றாள். அளவு கடந்த மகிழ்ச்சியுடன் ஓடோடி வந்து மாயசீலனின் கைப்பிடித்து அழைத்து வந்தாள். அரசர் முன் நிறுத்தி அறிமுகப்படுத்தினாள்.

தன் மகள் விரும்பிய மணாளனே கிடைத்ததை எண்ணிப் பூரித்துப் போன அரசரும் அரசியும் அவனுக்கே இளவரசியை மணம் செய்து வைத்தனர்.

அதுவரை, துரோகங்களால் உள்ளம் உடைந்து போயிருந்த மாயசீலன் இளவரசியை மணந்து கொண்ட பின் அன்பும் இன்பமும் பொங்க அவளுடன் வாழ்ந்து வந்தான். பின்னாளில், தன் பெற்றோரையும் சகோதர சகோதரிகளையும் கூடத் தன்னுடன் அழைத்து வந்து வைத்துக்கொண்டு காலமெல்லாம் மகிழ்ச்சியுடன் இருந்தான்.

(முற்றும்)

About The Author