பாதாள லோகத்தில் மாயசீலன் ( 3)

சகோதரர்களையும் சகோதரியையும் மீட்கப் புறப்பட்ட மாயசீலன், வீட்டுக்கு வெளியே வந்ததும் முதலில் எந்தத் திசையில் தேட ஆரம்பிக்கலாம் என்று சுற்றும்முற்றும் பார்த்தான்.

அம்மா சொன்ன கதைப்படி, முன்பு பூதம் கிழித்திருந்த கோடு இப்பொழுதும் அங்கும் இங்கும் இலேசாகத் தெரிந்தது. அதன் வழியாகச் சென்ற மாயசீலன் ஒரு காட்டிற்குள் நுழைந்தான். நீண்ட தூரம் காட்டினுள் நடந்து சென்ற பிறகு அங்கு ஒரு பெரிய வீடு இருக்கக் கண்டான். அதனுள்ளே நுழைந்தான். அங்கு ஒரு பெண் இருந்தாள். அவள்தான் தன் அக்காவாக இருக்க வேண்டும் என்று நினைத்தவண்ணம் அவளை நெருங்கி, "அன்புக்குரிய பெண்ணே! வணக்கம்!" என்றான். அங்கு பூதம் இருப்பதற்குரிய எந்த அறிகுறியும் தெரியவில்லை.

அவனைக் கண்டதும் திடுக்கிட்ட லீலாவதி, "இளைஞனே! நீ யார்? இங்கு எதற்கு வந்தாய்? வெளியே சென்றுள்ள பூதம் வந்தால் உன்னை அடித்துத் தின்று விடுமே! இங்கிருந்து சீக்கிரம் போய்விடு" என்று கெஞ்சாத குறையாக மாயசீலனை அங்கிருந்து அனுப்ப முற்பட்டாள்.

ஆனால் மாயசீலன் அதைப் பற்றிக் கவலைப்படாமல், "பூதம்தானே? வரட்டும் பார்க்கலாம்! என்னை அதனால் ஒன்றும் செய்ய முடியாது. முதலில் நீ யார்? அதைச் சொல்" என்றான்.

லீலாவதி தன் கதையைச் சொல்லலானாள். "நான் என் தாய் தந்தைக்கு ஒரே மகள். எனக்கு ஆறு சகோதரர்கள். நான் என் குடும்பத்தினருடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்தேன். ஆனால், இந்த பூதம் என்னை இங்கு தூக்கி வந்து ஆண்டுக்கணக்கில் சிறை வைத்துவிட்டது. எனது ஆறு சகோதரர்களும் என்னை விடுவிக்க முயன்று தோற்றுப் போனார்கள்" என்றாள்.

"அது சரி! உன் சகோதரர்கள் எங்கே?" என்று மாயசீலன் கேட்டான்.

"பூதம் அவர்களை ஒரு பாதாள அறைக்குள் தள்ளிற்று. உயிருடன் இருக்கிறார்களா என்று கூடத் தெரியவில்லை" என்று வருத்தமான குரலில் பதிலளித்தாள் லீலாவதி.

"கவலைப்படாதே! உன் சகோதரர்கள் உயிரோடிருந்தால் அவர்களை நான் மீட்கிறேன்" என்று ஆறுதல் கூறினான் மாயசீலன், தான் யார் என்பதைக் காட்டிக் கொள்ளாமல்.

அதற்கு லீலாவதி, "உன்னால் எப்படி முடியும்? என் ஆறு சகோதரர்களாலேயே முடியவில்லை. நீ தனி ஆள். உன்னால் முடியாது. ஆபத்து! நீ போய் விடு" என்று மீண்டும் அவள் அவனை அவசரப்படுத்தினாள்.

ஆனால் மாயசீலன், "பரவாயில்லை. பார்ப்போம்" என்று கூறிவிட்டு பூதத்தின் வரவிற்காக வீட்டு வாயிலிலேயே காத்திருக்க ஆரம்பித்தான்.

அப்பொழுது பூதம் பறந்து வந்தது. வரும்பொழுதே மூக்கைச் சுளித்துக் கொண்டது. "மனித வாசனை மூக்கைத் துளைக்கிறதே!" என்று கூறியபடியே வாயிலை நெருங்கியது.

"ம்… துளைக்கும் துளைக்கும்! இதோ நான் ஒருவன் இங்கிருக்கிறேன்" என்று குதித்தெழுந்து நின்றான் மாயசீலன்.

பூதம் ஆச்சரியத்துடன் பார்த்தது. "நீ யார் இளைஞனே? எதற்காக வந்திருக்கிறாய்?" என்று கேட்டது.
மாயசீலன், "நான் இந்தப் பெண்ணை மீட்டுப் போக வந்திருக்கிறேன்" என்றான்.

அதற்கு பூதம், "என்னைப் போராடி வென்றால் நீ தாராளமாக அழைத்துச் செல்லலாம். இல்லையென்றால் நீ எனக்கு அடிமையாக வேண்டும்" என்றது.

"சரி! வா சண்டைக்கு!" என்று தோள்களைத் தட்டினான் மாயசீலன்.

"ஓகோ! அப்படியானால் வா, நாம் வெளியில் உள்ள திடலுக்குப் போகலாம்" என்றது பூதம்.
"நல்லது" என்றான் மாயசீலன்.

இருவரும் அந்த இடத்திற்கு வந்தனர். பூதம் அவனைப் பார்த்து, "நீ முதலில் தாக்கு" என்றது. மாயசீலன், "இல்லை, நீயே முதலில் ஆரம்பி!" என்றான். பூதம் உடனே ஒரு பலத்த அடி கொடுத்து, அவனைக் கணுக்கால் ஆழத்துக்கு பூமியில் அழுத்தியது. ஆனால், மாயசீலன் உடனே துள்ளிக் குதித்து வெளியே வந்து, தன் வாளைத் திருப்பி அடித்து பூதத்தை முழங்கால் ஆழத்துக்கு பூமியில் புதைத்தான்.

பூதமும் உடனே வெளியே வந்து அவனைத் தாக்க முற்பட்டது. இரண்டு பேருக்கும் கடுமையான சண்டை மூண்டது. மாயசீலன் தன் பலத்தையெல்லாம் திரட்டி பூதத்தை அடித்து, அதை இடுப்பளவு ஆழத்திற்குத் தரையில் அழுத்தினான். அது வெளியே வர முயற்சிப்பதற்குள், மீண்டும் ஓங்கி அடித்து அதே இடத்தில் அதைக் கொன்றுவிட்டான்.

பிறகு, மாயசீலன் பாதாள அறைக்குள் சென்றான். அது ஆழமாகவும் இருட்டாகவும் இருந்தது. பாதி உயிர் போன நிலையில் உள்ளே கிடந்த தன் சகோதரர்களை அவன் விடுவித்தான். அவர்களையும் லீலாவதியையும் அழைத்துக் கொண்டு பூதத்தின் வீட்டிலிருந்து பொன்னையும், வெள்ளியையும் வாரிக் கொண்டு வீட்டிற்குப் புறப்பட்டான். கடைசி வரை தான் அவர்கள் தம்பி என்பதை அவன் தெரியப்படுத்தவே இல்லை. வீட்டுக்குப் போய் அம்மா அப்பா வாயால் தெரிந்துகொண்டு அவர்கள் ஆச்சரியப்படட்டும் என்று நினைத்து, அவனைப் பற்றிய அவர்களின் கேள்விகளுக்கெல்லாம் குறும்புப் புன்னகை பூத்தபடி அமைதியாகவே இருந்தான்.

நீண்ட தூரம் நடந்ததால் எல்லோரும் சோர்வடைந்தனர். வழியில் ஒரு பெரிய மரம் எதிர்ப்படவே, அதனடியில் அமர்ந்து ஓய்வெடுத்தனர். மாயசீலன் பூதத்துடன் போரிட்டதால் மிகவும் களைப்படைந்திருந்தான். அதனால் படுத்தவுடன் அயர்ந்து தூங்க ஆரம்பித்தான்.

அப்போது ஆறு சகோதரர்களும் தமக்குள்ளே பேச ஆரம்பித்தனர். நாம் ஆறு பேர் சேர்ந்து பூதத்தை ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆனால், இந்தச் சிறுவன் தன்னந்தனியே வந்து அதைக் கொன்று விட்டானே. ஊருக்குப் போனதும் எல்லோரும் நம்மைப் பார்த்துச் சிரிப்பார்களே. இதற்கு என்ன செய்வது என்று பேசிக் கொண்டனர்.

–தொடரும்…

About The Author