பாதாள லோகத்தில் மாயசீலன் – 4

மாயசீலன் நன்றாகத் தூங்கிக் கொண்டிருக்கிறான்; மிகவும் களைப்படைந்திருக்கிறான்; நாம் என்ன செய்தாலும் அவனுக்குத் தெரியாது என்று புரிந்துகொண்ட ஆறு சகோதரர்களும் மாயசீலனை மரத்துடன் சேர்த்துக் கட்டிப் போட்டனர். காட்டு விலங்குகள் அவனைத் தின்று கொள்ளட்டும் என்று முடிவு செய்து, லீலாவதியை அழைத்துக் கொண்டு கிளம்பினர். மாயசீலனை அவ்வாறு விட்டுச் செல்ல லீலாவதிக்கு மனம் வரவில்லை. கட்டிப் போட முயன்ற சகோதரர்களை முடிந்த வரை தடுத்தாள். முடியாமல் போகவே அவர்களைத் திட்டினாள்; புலம்பினாள். ஆனால், சிறியவளான அவள் பேச்சைக் காதில் வாங்கிக் கொள்ளாத அந்த ஆறு பேரும் அவளை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றனர். இவற்றையெல்லாம் அறியாதவனாய் மாயசீலன் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தான். ஒரு பகல் ஓர் இரவு என்று ஒரு நாள் முழுவதும் தூங்கினான். மறுநாள் சூரிய ஒளி முகத்தில் பட்டு விழித்தான். தான் மரத்துடன் கட்டிப் போடப்பட்டிருப்பதைக் கண்டான். மரத்தைத் தன் பலம் கொண்டு பூமியிலிருந்து பெயர்தெடுத்தான். கயிற்றை அறுத்துத் தன்னை விடுவித்துக் கொண்டான். பின்னர், மரத்தை எடுத்துத் தோள் மீது சாய்த்துக் கொண்டு வீட்டிற்குப் புறப்பட்டான்.

இதற்குள், வீடு சென்று சேர்ந்த சகோதரர்கள், மாயசீலன் பற்றித் தாய் மூலம் எல்லாம் கேள்விப்பட்டு, "அப்படியானால் நாம் மரத்தில் கட்டிப் போட்டது மாயசீலனாகத்தான் இருக்க வேண்டும். வாருங்கள்! நாம் போய் அவனை அழைத்து வரலாம்" என்று கிளம்பினர்.

அதே நேரம், திடீரென்று வீட்டின் மேல் ஏதோ மோதுவது போல் சத்தம் கேட்டது. பார்த்தால், மாயசீலன் தான் கொண்டு வந்த மரத்தைக் கோபமாகக் கீழே போட்டான். வெளியே வந்த சகோதரர்களைக் கண்டதும், "உயிரைக் காப்பாற்றியவனுக்கே உலை வைக்கும் நீங்களும் மனிதர்களா! உங்கள் முகத்தில் கூட இனி நான் விழிக்க விரும்பவில்லை. நீங்களே இங்கு இருங்கள். நான் போய் வருகிறேன்" என்று கூறியவாறு வெளியேறினான்.

தாயும், தந்தையும், அக்காவும் எவ்வளவோ முயன்றும் அவனைத் தடுக்க முடியவில்லை.
தனது வாளைத் தோளில் சாய்த்துக் கொண்டு வேகமாய் அங்கிருந்து நடந்தான். போய்க்கொண்டே இருந்த மாயசீலன், ஓரிடத்தில் ஒரு மனிதனின் விநோதச் செயலைப் பார்த்து நிற்க வேண்டியதாயிற்று. ஒரு மனிதன் இரண்டு மலைகளுக்கு நடுவில் நின்றுகொண்டு, கைகளையும் கால்களையும் வைத்து அழுத்தி அவற்றை நகர்த்திக் கொண்டிருந்தான். அவனைப் பார்த்து மாயசீலன், "வணக்கம் நண்பா!" என்றான்.

அவனும் பதிலுக்கு வணக்கம் தெரிவித்தான்.

"நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்?" என்று கேட்டான் மாயசீலன்.

"சாலைக்கு இடம் வேண்டுமென்று மலைகளை நகர்த்துகிறேன்" என்றான் அவன் சாதாரணமாக.

வியப்படைந்த மாயசீலன், "அப்படி இவற்றை நகர்த்திவிட்டுக் கிடைக்கும் வழியில் நீ எங்கு செல்வதாக இருக்கிறாய்?" என்று மேலும் கேட்டான்.

"எங்கே செல்வம் கிடைக்குமோ அங்கே செல்கிறேன்" என்றான் அவன்.

மாயசீலன், "நானும் அங்கேதான் செல்கிறேன். உன் பெயர் என்ன?" என்று வினவினான்.

"மலைநகர்த்தி மலைச்சாமி. உன் பெயர்?"

"மாயசீலன். நாம் இருவரும் சேர்ந்து செல்வோமா?"

"நல்லது! அப்படியே செய்யலாம்" என்றான் மலைச்சாமி. இருவரும் சேர்ந்து பயணத்தைத் தொடர்ந்தனர். எங்கும் நிற்காமல் நடந்துகொண்டே இருந்தனர். வழியில், காட்டில் ஓர் ஆளைச் சந்தித்தனர். அவன் மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்து கொண்டிருந்தான்.

"வணக்கம் நண்பா!" என்றனர் மாயசீலனும், மலைச்சாமியும். அவனும் பதிலுக்கு வணக்கம் தெரிவித்தான்.

மாயசீலன் அவனைப் பார்த்து, "என்ன செய்கிறாய் நீ?" என்று கேட்டான்.

"நடக்க இடம் வேண்டுமென்று மரங்களைப் பெயர்த்தெடுக்கிறேன்."

"பெயர்த்தெடுத்து விட்டு?…" என்று கேட்டான் மலைச்சாமி.

"செல்வம் எங்கே கிடைக்கும் என்று தேடிச் செல்கிறேன்."

"நாங்களும் அங்கேதான் செல்கிறோம். சரி, உன் பெயர் என்ன?"

"மரம் பெயர்க்கும் பச்சையப்பன்" என்று அவன் சொன்னதும், மாயசீலனும் மலைச்சாமியும் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர்.

"ஒரே இலக்கை நோக்கிப் பயணிக்கும் நாம் மூவரும் சேர்ந்தே செல்வோமே?" என்று மாயசீலன் கூற,"நல்லது! அப்படியே ஆகட்டும்" என்று அவர்களும் ஒப்புக்கொண்டனர். தொடர்ந்து மேற்கொண்டு பயணித்தனர். ஓரிடத்தில், மிகப் பெரிய மீசையுடன் ஓர் ஆள் ஆற்றின் முன்னால் நிற்பதைக் கண்டனர். அவன் மீசையை முறுக்கியதும் ஆற்றின் வெள்ளம் இரண்டாய்ப் பிளந்து விலகிக் கொண்டது. ஆற்றின் குறுக்கே படுகையில், அக்கரைக்கு நடந்து செல்ல வழி கிடைத்தது.
"வந்தனம் நண்பனே!" என்று மூவரும் அவனுக்கு வணக்கம் தெரிவித்தனர்.

"வணக்கம்" என்றான் அவன்.

"இவ்வளவு அருமையான திறமையைக் கற்றுக் கொண்டிருக்கும் நீ யார்? எங்கே செல்கிறாய்?" என்று மூவரும் அவனை ஆவலுடன் கேட்டனர்.

"என் பெயர் மீசை முறுக்கி மாடசாமி. நான் செல்வத்தைத் தேடிச் சென்று கொண்டிருக்கிறேன்" என்றான் அவனும்.

"நாங்களும்தான்" என்று கூறிய பச்சையப்பன், “நாம் நால்வருமாய்ச் சேர்ந்து செல்வோம், வருகிறாயா?” என்று அழைத்தான்.

"தாராளமாக!" என்று அவன் ஒப்புக்கொள்ள, நால்வருமாய்ச் சேர்ந்து இன்னும் பயணித்தனர்.
முடிவில் அவர்கள் ஒரு பெரிய காட்டினுள் நுழைந்தனர். அங்கே ஒரு சிறு குடிசை இருந்தது. நால்வரும் உள்ளே சென்று பார்த்தனர். குடிசை காலியாகத்தான் இருந்தது.

"இரவை இந்தக் குடிசையில் கழிப்போம்" என்றான் மாயசீலன். மற்றவர்களும் சரி என்றனர்.
அடுத்த நாள் காலையில் மாயசீலன் மலைச்சாமியை, "நீ குடிசையில் தங்கி எங்களுக்குச் சாப்பாடு செய். நாங்கள் மூவரும் வேட்டையாடி ஏதாவது கிடைக்கிறதா என்று பார்க்கிறோம்" என்று கூறினான்.

மூவரும் புறப்பட்டுச் சென்றவுடன், மலைச்சாமி காட்டில் கிடைத்த காய்கள், கனிகள், கீரைகள், கிழங்குகள் எனப் பலவற்றையும் சேகரித்து வேக வைத்தும், வறுத்தும், சமைத்தும் சுவையான சாப்பாடு தயார் செய்தான். பிறகு, சற்று நேரம் தூங்கலாம் என்று படுத்துக் கொண்டான்.

அப்பொழுது திடீரென்று குடிசைக் கதவு தட்டப்பட்டது.

–தொடரும்…

About The Author