பாபா பதில்கள் – உண்மையான குரு

குரு என்பவர் ஒவ்வொரு ஜென்மத்திலும் உங்களைத் தடுத்தாட்கொள்பவர். இந்த உலகத்தில் எங்கே பிறந்தாலும் தக்க சமயத்தில் அவருடைய அருள் உங்களை இழுத்துக் கொண்டு வந்துவிடும். நீங்கள் அவரைத் தேடிப் போகத் தேவையில்லை. அவராகவே உங்களைத் தன்னிடம் இழுத்துக் கொள்வார். உண்மையான குரு என்பவன் தன்னை உணர்ந்தவன். ஆத்ம ஞானி! உங்களுக்கு ‘நாம் யார்?’ என்பது தெரியாது. ஆனால் அவருக்கு உங்களை அடையாளம் தெரியும்.

ஆத்ம ஞானி எப்போதும் அழியாத, முக்தி நிலையில் இருந்து கொண்டிருப்பவர். சாதாரணமானவர்கள் அழிந்து பிறக்கிறவர்கள். இறப்பும், பிறப்பும் அற்ற நிலையில் இருப்பதினாலேயே அவருக்கு "இந்த உலகத்தில் யார் பிறக்கிறார்கள்? தன் சிஷ்யன் எங்கே இருக்கிறான்?" என்றெல்லாம் நன்றாகத் தெரியும். உங்களுக்கு சந்தேகம் இருந்தால் ‘The Autobiography Of A Yogi’ என்ற புத்தகத்தைப் படித்துப் பாருங்கள்.

பாபாஜி என்கிற ஒருவர் இமாலயத்தில் இருப்பார். பூர்வ ஜென்மத்தில் அவருடைய சிஷ்யனாக இருந்த ஒருவன் மறுபடி பிறந்து ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டராக இருப்பான். ஒரு நாள் அவனுக்கே தெரியாமல் காட்டிற்குள் ஒரு எழுபது மைல் நடந்து போய்விடுவான். அந்த இடத்திற்கு ஒருவன் வந்து "பாபாஜி இதை குடிக்கச் சொன்னார்; உங்களை வரச் சொன்னார்" என்று சொல்கிறான். அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. அவன் குடித்து முடித்தபின், தான் ஒரு அழகான இடத்தில், சிஷ்யர்களுடன் அந்த பாபாஜியின் எதிரில் உட்கார்ந்து கொண்டிருப்பதை அறிகிறான்."நான் உன்னுடைய குரு. போன ஜென்மத்தில் நீ என்கிட்டே இருந்தே. கொஞ்சம் மாயை இருந்ததினால் நீ திரும்பவும் பிறக்கிற மாதிரி ஆச்சு. நீ பிறந்ததிலிருந்தே நான் உன்னைக் கண்காணிச்சிண்டிருக்கேன். இப்போதான் நேரம் வந்திருக்கு. நான்தான் உன்னைக் கூப்பிட்டேன். நீ தவம் இருந்த குகை இதுதான். இதோ பார், நீ குடிச்ச பாத்திரம்" என்று ஒவ்வொன்றாகக் காட்டுகிறார்.

இந்த நிலையில்தான் ஒரு ஞான குருவின் லட்சணங்கள் இருக்கும். He knows you and he is with his total knowledge intact! Though you have come with a different body, he understands you. இந்த நிலையை அடைந்த குரு உலகத்தில் எத்தனை பேர் இருப்பார்கள் என்று சொல், பார்க்கலாம். அதனால் ஞானி, ஞானி என்று சொன்ன பேய்கள் கோடி, கோடியே – தன்னை ஞானி என்று சொல்கிற எத்தனை கோடி பேர் பேய்கள் மாதிரி இருக்கிறார்கள். அவன் ஞானி அல்ல. உண்மையான ஞானி புஸ்தகத்தைப் படித்து அறிந்து கொண்டவன் அல்ல. இன்னும் சொல்லப் போனால் அவன் வாய்வார்த்தைகளால் பேசுபவன் அல்ல. மௌனமாக இருந்து கொண்டே உங்களுக்கு அனுபவங்களைக் கொடுக்கக் கூடியவன். அவனுடைய presence-ல் உங்களுக்கு ஒரு மன அமைதி கிடைக்க வேண்டும். அவனுடைய presence-ல் ஒரு கன்று தன் தாய்ப்பசுவுடன் இருக்கிற சந்தோஷம் உங்களுக்கு கிடைக்க வேண்டும்.

உலகத்தில் மூணு நிலை இருக்கிறது.

முதல் நிலை – பறவைக் குஞ்சு ஒன்று கூட்டுக்குள்ளேயே இருக்கிறது. அதற்கு தனக்கு ஒரு தாய்ப் பறவை இருக்கிறது என்று தெரியும். தாய்ப் பறவை இரை தேடப் போயிருக்கிறது என்றும் தெரியும். திரும்பி வந்து வாயில் ஊட்டிவிடப் போகிறது என்றும் தெரியும். ஆனால் தாய்ப் பறவை எங்கேயிருக்கிறது என்றெல்லாம் அதற்குத் தெரியாது. அப்போது "தெரியும் -தெரியாது". It knows that the mother exists but it does not know where the mother is. இது முதல் நிலை.

இரண்டாவது நிலை – கன்றுக்குட்டிக்கு இதுதான் தன்னுடைய தாய்ப்பசு என்று தெரியும். அதே மாதிரி ஆயிரம் மாடுகள் இருக்கிற மந்தையில், தன்னுடைய கன்று வந்தவுடனேதான் தாய்ப்பசு பால் சுரக்கிறது. இல்லையா? ஒவ்வொரு பசுவுக்கும் தன்  கன்றையும், கன்றுக்குட்டிக்கு தாயையும் அழகாக அடையாளம் தெரியும். எப்போது மேய்ப்பவன் வந்து கட்டை அவிழ்ப்பான் என்று இரண்டும் ஒன்றுக்கொன்று பார்த்துக் கொண்டேதான் இருக்கும் . அப்போது, அறியும் – ஆனால் அடையாது. "இது தான் எங்க அம்மா"என்று தெரிகிறது. "இதுதான் என் பிள்ளை" என்று தெரிகிறது. ஆனால் அடைய முடியவில்லை. கட்டி வைத்திருக்கிறார்கள். கட்டுக்களுடன் இருக்கிற நிலைதான் கர்மா என்பது.

மூன்றாவது நிலை – படுக்கையில் படுத்துப் புரள்கிற காதலன்-காதலி நிலை. அதுதான் உண்மையான ஞான குரு-சிஷ்யனின் நிலை. அதற்கப்புறம் ‘கட்டு’ கிடையாது. குரு-சிஷ்யன் இரண்டு பேருமே ஒன்றாகிவிடுகிறார்கள். அந்த அளவுக்கு ஐக்கியமாகிவிடுகிறார்கள். அந்த இடத்தில் தெரியாமல் இருப்பதற்கோ, அல்லது கட்டு அவிழாமல் இருப்பதற்கோ ஒன்றுமேயில்லை. கர்மா போய்விட்டதே! அப்புறம் ‘கட்டு’ எங்கேயிருக்கிறது? கன்றும் தாயும் ஒண்ணுதான். பால் குடித்துக் கொண்டேயிருக்க வேண்டியதுதான். அந்த நிலையில் சேற்றைப் பூசிக் கொண்டு வருகிற கன்றுக் குட்டியைக் கூட தாய்ப் பசு வருடிக் கொடுக்கும், தன்னுடைய நாவால் நக்கிக் கொடுக்கும். அழுக்கைப் பற்றிக் கவலைப் படுவதில்லை.

ஒரு சீடனை அடையாளம் தெரிந்து கொண்டுவிட்ட ஞான குரு, சீடனை அத்தனை குறைகளோடும் ஏற்றுக் கொண்டு, பாவத்தைப் போக்குகிற ‘பாபஹரணனாக’, தன்னுடன் ஐக்கியமாக்கிக் கொண்டு விடுகிறான். உனக்கு பாக்கியம் இருந்தால் அந்த மாதிரி குரு கிடைப்பார். Otherwise, you will be in Stage-I, waiting for the mother bird to come one day.

About The Author