பாபா பதில்கள் – எனக்கும் உனக்கும் உள்ள தொடர்பு

எனக்கும் உனக்கும் உள்ள தொடர்பு

நீ என்னிடத்தில், உன்னுடைய பழைய ஜன்ம தொடர்பினால் வருகிறாய். உனக்கு வேற சாமியாரிடத்தில் பழைய ஜன்மத் தொடர்பிருந்தால் நீ அவங்ககிட்டே போவே. நான் இதை மறுக்கவேயில்லை. உன்னுடைய மனைவியோ, குழந்தைகளோ, நண்பர்களோ, முதலாளியோ, சொந்தக்காரர்களோ எல்லோருமே ஏதோ ஒரு கர்மாவினால் இணைக்கப்பட்டவர்கள். நீ Microsoft கம்பெனியில் வேலை செய்யறேன்னா அவன் உனக்கு பாக்கி. இந்த ஜென்மத்தில் உனக்கு சம்பளம் கொடுத்து கழிக்கறான், அவ்வளவுதான். நீ யாரையும் முதலாளினு நினைக்காதே. உலகத்தில் யாரும் முதலாளி இல்லை, யாரும் தொழிலாளி இல்லை. யார் உனக்கு பாக்கியோ அவன் உனக்குக் கொடுப்பான். நீ யாருக்கு பாக்கியோ அவனுக்கு நீ கொடுப்பே. இவ்வளவுதான் ஆன்மீகம். இதெல்லாம் உனக்குப் புரிவதற்கு நாளாகும்.

நான்தான் உனக்கு பாக்கி. அதனால்தான் உன்னைக் கூப்பிட்டிருக்கிறேன். உனக்கு நல்லது செய்தே ஆகணும். இல்லைன்னா எனக்கு மோட்சம் கிடைக்காது. எனக்கு கர்மா இருக்கு. அந்த கர்மா என்ன? நீ ஏதோ ஒரு பிறவியில் எனக்கு உதவி செய்திருக்கிறாய். நான் இந்த பிறவியில் சாமியாகியிருக்கேன். இதற்கு முன் பிறவியில் நான் ஒரு பரதேசியாக சுற்றிக் கொண்டிருந்திருப்பேன். அப்போ, நீ என்னை உன் வீட்டுத் திண்ணையில் உட்கார வைச்சு மோர் கொடுத்திருப்பே, சாப்பாடு போட்டிருப்பே, செருப்பு வாங்கிக் கொடுத்திருப்பே, டிரஸ் வாங்கிக் கொடுத்திருப்பே, காசு கொடுத்திருப்பே. இப்போ நான் கடவுளிடத்தில் ஒரு பதவியில் இருக்கேன். அதனால், உங்க எல்லோரையும் கூப்பிட்டு ‘உங்க கஷ்டம் என்ன?’ னு கேட்டு செய்தால்தான் நானே மேலே போகமுடியும். இல்லைன்னா போக முடியாது. இதுதான் ஆன்மீகம்.

எல்லாருக்கும் Magician P.C. சர்க்காரைத் தெரியும். ஒரு முறை அவர்கிட்டே, ‘நீங்க எப்படி successful ஆன magician ஆக இருக்கீங்க?’னு கேட்டதற்கு, ‘Show ஆரம்பிப்பதற்கு முன்னால் திரையை விலக்கிப் பார்ப்பேன். அங்கேயிருக்கிற ஜனங்களைப் பார்த்தவுடன், ‘கடவுளே என்னை நம்பி எல்லாரும் டிக்கெட் வாங்கிக்கொண்டு showவிற்கு வந்திருக்காங்க. கடவுளே! I should come out with the best today’னு வேண்டிக்கொள்வேன்’ என்று சொன்னாராம். P.C சர்க்கார் பாலிசிதான் என்னுடையதும். சிவசங்கர் பாபாவின் மனோபாவமும் கூட அதுதான். ‘கடவுளே! இவ்வளவு பேரை என்கிட்டே கொண்டு வந்து விட்டிருக்கே. நான் இவங்களுக்கு என்னவெல்லாம் பாக்கியோ அதையெல்லாம் கழித்துவிடு. அவங்களுக்கு ஏதாவது நல்லது செய்து எனக்கும், அவங்களுக்கும் கடன் இல்லாமல் செய்திடு’ என்பதுதான் என்னுடைய பாலிசி. நான் சொல்கிற விஷயம் உனக்குப் புரியலை? புரிகிறமாதிரி சொல்கிறேன்.

கிராமத்தில் ஒரு ஏழைப் பையன் இருப்பான். அந்த கிராமத்தில் யாரோ ஒரு நல்லவர் இருப்பார். அவர் அந்த பையன்கிட்டே, "என் வீட்டில் சாப்பிட்டுக்கோ, புத்தகம், யூனிஃபார்ம் எல்லாம் நான் வாங்கித் தரேன். ஸ்கூல் ஃபீஸ் நான் கட்டறேன்’னு சொல்வார்". அவனும் நல்லா படிச், கலெக்டர் ஆகிடுவான். அந்த மாவட்டத்துக்கே கலெக்டராகி காரிலிருந்து இறங்குவான். இவனை வளர்த்து, படிக்கவைச்சவர் கையில் பெட்டிஷனோடு கலெக்டரைப் பார்க்கிறதுக்கு வரிசையில் நின்று கொண்டிருப்பார்.

கலெக்டர் இவரைப் பார்த்ததும், தன்னுடைய ப்யூனைக் கூப்பிட்டு ‘அங்கே பச்சை வேஷ்டி கட்டிக்கிட்டு நிற்கிறவர் முனுசாமி; அவரை கூட்டிக்கிட்டு வா’னு சொல்வார். ப்யூன் அங்கே வரிசையில் நிற்கிறவங்களைப் பார்த்து, "யார் முனுசாமி? கலெக்டர் கூப்பிடுகிறார்’னு சொன்னதும், இவருக்கு ஒரே பயமாக இருக்கும். ‘என்னடா, இது, இத்தனை பேர் வரிசையில் நிற்கும்போது கலெக்டர் நம்மை எதுக்கு கூப்பிட்டார்?’னு தோணும். உள்ளே போனவுடனே, கலெக்டர் எழுந்து நின்று, ‘ஐயா! வணக்கம். உட்காருங்க, டீ சாப்பிடறீங்களா?’னு கேட்டவுடன், ‘இவன் ஏதோ நம்மகிட்டே நிறைய காசு கேட்பான் போலிருக்கு’னு குழப்பமாக இருக்கும்.

கலெக்டர், ‘ஐயா! உங்களுக்கு ஏதாவது குறையிருந்தால் சொல்லுங்க. அதை சரி செய்துவிடுகிறேன்’னு சொல்வான். இவருக்கு இன்னும் சந்தேகம் அதிகமாகிடும். அப்போ, கலெக்டர் சொல்வான், ‘ஐயா! உங்களுக்கு என்னைத் தெரிகிறதா? நீங்கதான் நான் படிக்கிறதுக்கு புத்தகம், யூனிஃபார்ம் எல்லாம் வாங்கிக் கொடுத்தீங்க. ஸ்கூல் ஃபீஸ் எல்லாம் கட்டினீங்க. உங்க வீட்டு சாப்பாடு சாப்பிட்டுத்தான் வளர்ந்தேன். இப்போ கலெக்டர் ஆயிட்டேன். அதனால் உங்களுக்கு ஏதாவது நல்லது செய்யணும்னு நினைக்கிறேன்’ என்று சொல்லிவிட்டு அவர் கையிலிருக்கிற பெட்டிஷனை வாங்கிப் பார்த்து அவருக்கு நல்லது செய்வான்.

இதுதான் ஆன்மீகம். அவன் எவ்வளவு நல்லவனாகயிருந்தால் சின்ன வயதில் செய்த உதவியை ஞாபகம் வைத்துக்கொண்டு அவன் பெரிய கலெக்டர் ஆனதும், ‘நான் கலெக்டர். உங்களுக்கு என்ன நல்லது செய்யணும் என்று சொல்லுங்க?’னு கேட்கிறான்.
அந்தமாதிரிதான் சிவசங்கர் பாபாவும். சிவசங்கர் பாபா இன்றைக்கு கடவுளிடத்தில் கலெக்டர் ஆகிட்டார். நான் ஒரு ஜென்மத்தில் உனக்கு பாக்கி. அதனால், நான் நன்றியோடு உன்னைக் கூப்பிட்டு ‘நான்தான் கடவுளிடத்தில் கலெக்டர்; உனக்கு என்ன செய்யணும்’னு கேட்டுக்கிட்டிருக்கேன். முனுசாமி முதலியார் எப்படி கலெக்டர் மேல் சந்தேகப்பட்டாரோ, அதுமாதிரி நீ என் மேல் சந்தேகப்படுகிறாய். இதுதான் பிரச்சனையே. நம்ம இரண்டு பேருக்கும் wavelength ஒத்துப் போகாததுக்கு இதுதான் காரணம். நான் உனக்குக் கடன்பட்டிருக்கிறேன். உனக்கு நல்லது செய்தே தீருவேன். உனக்கு அதில் சந்தேகம் வேண்டாம். இதுதான் ஆன்மீகம். இதை தெரிந்து கொண்டால் ஞானி. இது தெரியாமல் ‘நான் பெரிய ஆள்’னு, ‘ஓம் ஹ்ரீம்’னு வேப்பிலை, விபூதி போட்டு அடிச்சிக்கிட்டிருந்தேன்னா, நீ அஞ்ஞானி.

மகான் பக்தனிடத்தில் கடமைப்பட்டிருக்கிறான். எந்த பக்தனும் மகானிடத்தில் கடமைப்படவில்லை. நீங்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும். நான் ரொம்ப சீரியஸான ஆள். என்னுடைய seriousness உனக்குத் தெரியக்கூடாதுனுதான் குறும்பாக பேசிக்கிட்டு, அரட்டை அடிச்சுக்கிட்டு சுத்திக்கிட்டிருக்கிறேன். நீங்கள் என்னுடன் பழகினால் என்னை புரிந்து கொள்ள முடியும். என்னைப் புரிந்து கொள்ள கொஞ்ச நாளாகும். எடுத்தவுடனே புரியாது. ஏதோ ஒரு சினிமாவில் கதாநாயகனைப் பார்த்து கதாநாயகி சொல்வாள், ‘எனக்கு உன்னைப் பிடிக்கலை’னு. கதாநாயகன் சொல்வான், ‘என்னை மாதிரி பையன்களை பார்த்தால் பிடிக்காது. பார்க்கப் பார்க்கத்தான் பிடிக்கும்’னு. நான் அந்த மாதிரி கேஸ். :-))))) என்னைப் பார்க்கப் பார்க்கத்தான் உனக்குப் பிடிக்கும். பழக பழகத்தான் புரியும் நான் மற்ற ஆன்மீகவாதிகளிடமிருந்து மிகவும் வேறுபட்டவன். வாழ்க்கையைப் பற்றிய புதிய கண்ணோட்டத்தை உனக்கு கொடுத்திருக்கிறேன்.

யாரும் பெரியவர் இல்லை, யாரும் சிறியவர் இல்லை. யாரும் குரு இல்லை, யாரும் சிஷ்யன் இல்லை. இதுதான் தமிழர்களுடைய வாழ்க்கை நாகரீகம். பிசிராந்தையாரிடத்தில் கேட்கிறாங்க, ‘நீங்க எப்படி ரொம்ப ஜாலியா இருக்கீங்க?’ என்று. அதுக்கு அவர் சொல்றார், ‘ரொம்ப சாதாரண விஷயம் இது. பெரியோர் என வியத்தலும் இலமே சிறியோர் என முனிதலும் இலமே பேரூறாற்றுப்படுஊம் புனைபோல் நற்காட்சி தெளிந்தனம். பெரியவங்கனு பார்த்து பயப்படுவதும் இல்லை, சின்னவங்கனு யாரையும் இழிவாக நடத்துவதும் இல்லை. ஒரு கட்டையைத் தூக்கி தண்ணியில் போட்டால் அது அந்த அனுபவங்களை பார்த்துக்கிட்டு ஓடுகிறது. அந்த மாதிரி என் வாழ்க்கை ஓடுகிறது. வாழ்க்கையில் வரும் அனுபவங்களைப் பார்த்துக்கிட்டு போய் கொண்டிருக்கிறேன்’ என்று.

இதுதான் வாழ்க்கை. இதுதான் நதி நாகரீகம். மிகவும் உயர்ந்த கலாச்சாரம்.

About The Author

1 Comment

Comments are closed.