பாபா பதில்கள் – மதநல்லிணக்கம் (1)

மதுரை பள்ளிவாசலைக் கட்டித் தந்தது சுந்தர பாண்டியன். இராணி மங்கம்மாள், திருச்சியிலிருந்து ஆண்ட மீனாட்சி ஆகியோர் பள்ளிகளைப் பராமரிக்க மானியம் அளித்துள்ளனர். நாயக்க மன்னர்களும் பள்ளிகளுக்கு நன்கொடை கொடுத்துள்ளனர்.
மதுரை கோரிப்பாளையம் பள்ளிக்கு கூன் பாண்டியன் பதினான்காயிரம் பொற்காசுகள் அளித்திருக்கிறான்.
இதைப் போல முஸ்லீம் மன்னர்கள் பல கோயில்களுக்கு மானியம் அளித்துள்ளனர்.

இந்துமத வெறுப்பாளர் என்று தவறாகச் சித்தரிக்கப்படுகின்ற ஔரங்கசீப், ஜதாம்புலி ஷிவ் ஷங்கர் மந்திர், உஜ்ஜயினி மகா காலேசுவரேர் கோயில், ஷத்ரஞ்சே ஜெயின் கோயில், கௌஹாத்தி அம்ப்ராந்த் கோயில், காசி ஆலயம் ஆகியவற்றுக்கு மானியம் வழங்கியிருக்கிறார்.

தில்லியில் இஸ்லாமிய ஆட்சி நடந்த போது அரசு நாணயங்களில் இராமர், சீதை, இலட்சுமி ஆகியோர் உருவங்கள் பொறிக்கப்பட்டன.

அக்பரின் அரசவைக் கவிஞராக இருந்த ஷைகு பைஸி மகாபாரதத்தை பாரசீக மொழியில் மொழிபெயர்த்தார்.
தாஜ்மஹால் கட்டிய ஷாஜகானின் மூத்தமகன் தாராஷிகோ, வேதங்களையும் உபநிடதங்களையும் பாரசீக மொழியில் ஆக்கினார். இவருடைய நூல்களைக் கொண்டே ஐரோப்பியர் இந்து மதம் பற்றி அறிந்தனர். அமீர் குஸ்ரூ என்ற பாரசீகக் கவிஞர்,

‘இப்பூமி என்
ஜன்ம பூமி
என் புகலிடம்
என் அருமைத் தாய்நாடு’
என்று பெருமிதத்தோடு பாடினார்.

சென்னை கபாலீசுவரர் கோயிலுக்குக் குளம் கட்ட இடம் கொடுத்தவர் ஆற்காட்டு நவாப்.

கி.பி. 1688ஆம் ஆண்டு காஞ்சி வரதராஜப் பெருமாள் மற்றும் தாயார் திருமேனிகள், திருச்சி மாவட்ட உடையார் பாளையம் காட்டில் கொண்டு போய் வைக்கப்பட்டிருந்தன. கோயில் பொறுப்பாளர்கள் கேட்டும் கூட உடையார்பாளைய ஜமீன்தார், அவற்றைக் கொடுக்க மறுத்தார். ஆத்தான் திருவேங்கட இராமானுஜ ஜீயர், கர்நாடக நவாப் சாததுல்லாகானை தெய்வத் திருமேனிகளை மீட்டுத் தருமாறு வேண்டினார்.நவாப்பின் ஆணைப்படி, அவருடைய தளபதி தோடர்மால் படையோடு சென்று, திருமேனிகளை மீட்டு காஞ்சிக் கோயிலில் மீண்டும் பிரதிட்டை செய்ய உதவினார்.

(மீதி அடுத்த இதழில்)

About The Author