பாபா பதில்கள்

பகுத்துண்டு வாழ்தல்…….. Be a generous giver, you reap what you sow.

திரு. சிவ சங்கர் பாபா அவர்களின் உரையிலிருந்து,

 
 
 

தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு.

நாம் கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறவை எல்லாம் தகுதியான செயல்கள், தகுதியானவர்களுக்கு, நாம் அறம் வளர்ப்பதற்காக.

தானமும் தவமும் தான் செய்வராயின்
வானவர் நாடுவழி திறந்திடுமே.

தானமும் தவமும் நாம் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் வானவர் நாட்டில் நமக்கு வழி கிடைக்கும் என்று வள்ளுவர் பெருந்தகை சொல்கிறார். அதனால் நாம் என்ன செய்ய வேண்டும்? தக்க வகையில் உழைக்கணும். அந்த உழைப்பினால் வரக்கூடிய செல்வத்தை நாம் எல்லாரிடத்திலும் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.

எல்லா தர்மங்களிலும் பெரிய தர்மம் என்னவென்றால், நம்மிடத்தில் இருப்பதை பகிர்ந்து கொண்டு வாழ்வது.

காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்னநீ ரார்க்கே உள.

காக்கா என்ன செய்கிறதாம், கா கான்னு கூப்பிட்டு எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்டு சாப்பிடுகிறதாம். அந்த மாதிரி யார் இருக்கிறார்களோ, அவர்களுக்கு எல்லா ஆக்கமும் கிடைக்கும் என்று திருவள்ளுவர் சொல்கிறார். இன்னொரு இடத்தில் சொல்கிறார்,

ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு.

ஊர் நடுவில் ஒரு பொதுக்கிணறு இருக்குமாம். எட்டுப் பக்கமும் ராட்டினம் போட்டு ஆளாளுக்கு சேந்திக்கிட்டு போவார்களாம். அந்த மாதிரி ஒரு நல்ல மனிதனிடம் துட்டு இருந்தால் எல்லாருக்கும் அது பயன்படும் என்று சொல்கிறார்.

பயன்மரம் உள்ளூர் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின்.

மாமரம், புளிய மரம் ஊர் நடுவில் இருந்தால் எல்லாருக்கும் அதனுடைய பழங்கள் கிடைக்கும். பெருந்தன்மையுள்ள மனிதனிடம் செல்வம் இருந்தால் எல்லாருக்கும் பயன்படும். இன்னொரு இடத்தில் சொல்கிறார்,

மருந்தாகித் தப்பா மரத்தாற்றல் செல்வம்
பெருந்தகை யான்கண் படின்.

ஊர் நடுவில் ஒரு துளசி செடி இருக்கு, ஒரு வில்வ மரம் இருக்கு. அது வியாதிகளுக்கு பயன்படுகிறது. கீழாநெல்லி கீரையிலிருந்து எல்லாம் நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. ஒரு நல்லவனத்திடத்தில் இருக்கும் செல்வம் அந்த மாதிரி எல்லாருக்கும் பயன்படும் என்று திருவள்ளுவர் சொல்கிறார்.

ஒப்புரவினால் வரும் கேடெனின் அஃதொருவன்
விற்றுக்கோள் தக்க துடைத்து.

ஒரு நல்ல மனிதனுக்கு வறுமை என்பது என்னிடத்தில் செல்வம் இல்லையே தர்மம் செய்வதற்கு என்பதினால் வருகிற வருத்தம் என்கிறார். பொருள் இல்லாமல் போவதல்ல அவனுடைய வருத்தம். ஒப்புரவாளன் என்று சொன்னால், உதவி செய்து வாழ்கிறவன் என்று அர்த்தம்.

கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என் ஆற்றுங் கொல்லோ உலகு.

எவனொருவன் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உலகத்தில் இருக்கிறவனுக்கு மழை மாதிரி நல்லது செய்கிறானோ, அவனுக்கு இந்த உலகத்தில் இருக்கிறவர்கள் என்ன கைம்மாறு செய்ய முடியும் என்று கேட்கிறார். These all are the thoughts of Thiruvalluvar about பகிர்ந்து வாழ்தல் ஒப்புரவு செய்து உயர்தல்.

About The Author