பாரதமாதா மந்திர்

இந்தியாவில் லக்ஷ்மி, துர்கை, பார்வதி, காளி, மாரியம்மன் போன்ற சக்திகளுக்குப் பல கோயில்கள் உண்டு. ஆனால், பாரதநாட்டின் அன்னை வடிவமாக, தெய்வ வடிவமாகக் கருதப்படும் ‘பாரதமாதா’வுக்கு ஒரு சில ஆலயங்கள்தான் உள்ளன. அதில் நான் பார்த்த ‘பாரதமாதா கோயில்’ ஹரித்துவாரிலிருந்து ரிஷிகேஷ் போகும் வழியில் இருக்கிறது.

ஹரித்துவார், ரிஷிகேஷ் என்றாலே நமது ஞாபகத்திற்கு வருவது புனித கங்கை. பகீரத முனிவர் கடுந்தவம் செய்த பயனாக சிவனது முடியிலிருந்து கங்கை அவதரித்தாள். இமய மலையிலிருந்து பிரவாகமாக மிகுந்த ஆக்ரோஷத்துடன் ஓடி வந்து, பின் ஹரித்துவாரில் முதன் முதலாக நுழைகிறாள். அந்த இடமே ‘ஹர்கி பைய்ரி’ என்ற பெயரில் மிகுந்த புனிதஸ்தலமாக விளங்குகிறது.

மாலை நேரம். இங்கு கூட்டம் பெருகி வழிகிறது. கங்காதேவிக்கு ஆரத்தி சரியாக ஆறு மணிக்கு ஆரம்பிக்கும். அந்தக் காட்சியைப் பார்க்க வேண்டுமே! எல்லோரும் விளக்கேற்றி, சிறிய பனையோலையைக் கப்பல் போல் செய்து, அதனுள் விளக்கை வைத்து கங்கை நீரின் மேல் மிதக்க விடுவார்கள். அந்த அழகைப் பார்க்கக் கோடிக் கண்கள் வேண்டும்!

ஹரித்துவார் வழியே ரிஷிகேஷ் செல்லும் பாதையில் பல கோயில்கள், பல ஆசிரமங்கள் பார்க்க முடிகிறது. பரமார்த்த ஆசிரமம், பவன்தாம் ஆசிரமம், சுவாமி பூமானந்தீர்த்த ஆசிரமம், சப்தரிஷி ஆசிரமம் எனப் பல இருக்க, நடு நடுவே ஸ்ரீ மானஸா தேவி ஆலயம், ஸ்ரீ சண்டிதேவி ஆலயம், ஸ்ரீ தூதாதாரி கோயில், பாரத மாதா மந்திர் போன்ற கோயில்களும் வருகின்றன. சாதாரணமாக, கோயில் என்றால் கோபுரத்துடன் காணப்படும். ஆனால், இந்த பாரதமாதா கோயில் ஏழு அடுக்கு மாடிக் கட்டடமாக அமைந்திருக்கிறது. ஒவ்வொரு மாடியிலும் ஒவ்வொரு விதமான தரிசனங்கள்.

இதோ! முதல் மாடியில் ஏறுகிறோம். இதன் பெயர் ‘கர்ம மந்திர்’. மனிதன் தன் நல்ல கர்மத்தினால் மிகவும் உயர்ந்து, தேசபக்தி கொண்டு, பெரிய இடம் பிடித்துப் பேரும் புகழும் பெற்று மறைகிறான். அப்படிப்பட்ட மனிதன் மகா புருஷனாக ஆகிறான். இந்த இடத்தில் அப்படிப்பட்ட மகான்களின் சிலைகள் வைக்கப்பட்டிருக்கின்றன. எடுத்துக்காட்டாக, மகாத்மா காந்திஜி, கோபாலகிருஷ்ண கோகலே, சுபாஷ் சந்திர போஸ், பகத்சிங் ஆகியோர். இப்படி, இங்கு இருப்பவர் பலரும் தேசத்திற்காகத் தியாகம் செய்தவர்கள்தான். இதைப் பார்த்த பின் இரண்டாவது மாடிக்குப் போகிறோம்.

இதை ‘மாத்ரு மந்திர்’ என்கிறார்கள். நாட்டின் பத்தினி தெய்வங்கள், கற்புக்கரசிகள், உத்தமப் பெண்மணிகள் இங்கு சிலையாக அமைக்கப்பட்டிருக்கிறார்கள். எ.டு: சீதை, மண்டோதரி, திரௌபதி, மீராபாய்.

மூன்றாவது மாடியில் ‘சாந்த் மந்திர்’ என்ற இடத்தில் கௌதம புத்தர், மகாவீரர், துளசிதாசர், கபீர்தாசர், சாந்த ஞானேஸ்வர், புரந்தரதாசர், சாந்த துகாராம், ஜெயதேவர் போன்ற சாந்த மூர்த்திகளைக் காண முடிகிறது.

நான்காவது மாடிக்குப் போகிறோம். இங்கு பல ரிஷிகள், ஞானிகள், சித்த புருஷர்கள் அமர்ந்து நமக்கு அருள் புரிகின்றனர். எ.டு: சுகப்பிரம்மம், அகஸ்தியர், பராசரர், வியாசர், யாக்ஞவல்கியர்.

ஐந்தாவது மாடியை வைஷ்ணவ சம்பிரதாயம் பரப்பியவர்கள் அலங்கரிக்கிறார்கள். இதை ‘விஷ்ணு மந்திர்’என்று அழைக்கிறார்கள். இங்கு ராமானுஜர், மாத்வர், தத்தாத்ரேயர், பிரஹ்லாதன் போன்றவர்களைக் காணலாம்.

ஆறாவது மாடிக்குள் நுழைய, ‘ஓம் நமச்சிவாய’ என்ற ஒலி நம் காதில் மெல்ல ஒலிக்கிறது. அப்போதே அது ‘ஸ்ரீ சிவ மந்திர்’ எனப் புரிந்து கொள்கிறோம். கைலாய மலை. பரமேஸ்வரருடன் பார்வதி அருமை மைந்தர்கள் கார்த்திகேயன், விநாயகனுடன் அமர்ந்திருக்க, நந்தீஸ்வரன் அவர்களைப் பார்த்தபடி அமர்ந்திருக்கிறார். தவிர, அர்த்தநாரீஸ்வரர் மிக அழகான ரூபத்துடன் அருள் பாலிக்கிறார்.

இப்போது கடைசி மாடி. ஏழாவது மாடி. அதனுள்ளே நுழைகிறோம். இதன் பெயர் ‘ஸ்ரீயுத் சக்தி காயத்திரி மந்திர்’. காயத்திரி மந்திரம் ஒலிக்கிறது. இதில் அடங்கியவை 24 அட்சரங்கள். ஒவ்வோர் அட்சரமும் ஒவ்வொரு தேவதையைக் குறிக்கிறது. ஒவ்வொரு தேவதையும் சலவைக் கல்லினால் செய்யப்பட்டு, மிக அழகான பட்டு உடை அலங்காரத்துடன் அருள் புரிகிறார்கள். இதில் மேலும் என்ன சிறப்பு என்றால், ஒவ்வொரு தேவதையின் கீழேயும் அதற்குரிய மந்திரமும் யந்திரமும் சலவைக் கல்லில் செதுக்கி வைத்திருக்கிறார்கள். எ.டு: கௌமாரி, சாம்பவி, வைஷ்ணவி, வேதமாதா, மந்தாகினி, மகாமாயா.

முற்றிலும் வித்தியாசமாகக் கட்டப்பட்டிருக்கும் இந்தக் கோயில் எல்லோரையும் கவருகிறது. இதை நிதானமாகப் பார்க்க ஒரு நாள் ஆகிவிடும். இங்கு வந்தால் முழு பாரதத்தையும் பார்த்த திருப்தி ஏற்படுகிறது.

About The Author