பாரதி நினைவுகள்

முதல் அனுபவம்

மதுரை தினமணி நாளேட்டில் சீனியர் உதவி ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தில் ஏற்பட்ட அனுபவம் இது.

1982ஆம் ஆண்டு பாரதி நூற்றாண்டு விழா தமிழ்நாடெங்கும் சிறப்பாக நடைபெற்ற தருணம் அது. யாரும் செய்யாத ஒரு வேலையை நாம் செய்து புகழ் பெறுவோம் என்று தினமணி ஆசிரியர் குழு தீர்மானிக்க, என் தலையில் ஒரு பொறுப்பு விழுந்தது. நான் படித்த சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் பாரதியாரும் சில மாதங்கள் பணியாற்றியதால், "சுவாமிநாதா, நீ போய் அந்தக் காலத்தில் ஆசிரியர் ரெஜிஸ்டரில் பாரதியார் போட்ட கையெழுத்தைப் புகைப்படம் எடுத்துக் கொண்டு வா. முதல் பக்கத்தில் பெரிதாகப் போடுவோம்" என்று ஆசிரியர் பணித்தார். உடனே நிருபர் புகைப்படக்காரர் சகிதம் விரைந்தோம்.

முதலில் பள்ளிக்குப் போன் செய்து பழைய ஆசிரியர் ரெஜிஸ்டர்களை தயாராக வைத்திருக்கச் சொன்னோம். தலைமை ஆசிரியருக்கு மட்டில்லா மகிழ்ச்சி. பள்ளிக்கூடத்தில் நுழைந்தவுடன் எங்களுக்கு ராஜ உபசாரம். பாரதியார் வேலை பார்த்த ஆண்டு ரெஜிஸ்டரை எடுத்து ஆவலுடன் பிரித்தோம். அதற்குள் புகைப்படக்காரர் எங்களை ரெஜிஸ்டருடன் படம் எடுக்கத் துவங்கிவிட்டார். பக்கத்தைத் திருப்பினோம்.. திருப்பினோம்.. அவர் போட்ட கையெழுத்தைக் காணவில்லை. என்ன இது, கையெழுத்துப் போடாமல் அவர் சம்பளம் வாங்கியிருக்க முடியாதே என்று மீண்டும் மீண்டும் புரட்டினோம். அப்பொழுதுதான் தெரிந்தது ஒரு பக்கம் ‘மிஸ்ஸிங்’ என்று. அவர் வேலை பார்த்த காலம் முழுவதும் அவர் கையெத்துப் போட்ட பக்கங்களைக் காணவில்லை. எல்லோருக்கும் பெரிய ஏமாற்றம். யாரோ ஒருவர் தமிழ் ‘ஹெரிட்டேஜைப் பாதுகாக்க’ அதை எடுத்துச் சென்றுவிட்டார். அது இப்பொழுது எந்த வெளிநாட்டு மியூசியத்தில் இருக்கிறதோ, கடவுளுக்குத்தான் வெளிச்சம்!

இரண்டாவது அனுபவம்

சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் திரு வி.ஜி.சீனிவாசன் என்ற ஆசிரியர் பணியாற்றி வந்தார். அவருக்கு பாரதி நாமம்தான் உயிர்மூச்சு. அவருடைய பெருமுயற்சியில் சேதுபதிப் பள்ளியில் பாரதியாருக்கு ஒரு சிலையும் வைத்தார்கள். அவர் எந்தப் பாடம் நடத்தினாலும் பாரதியின் பெயரை எப்படியாவது கொண்டுவந்துவிடுவார். "பாரதியின் சிலையைச் சுற்றி வந்து தினமும் வணங்குங்கள். உங்களுக்குத் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் வரும். பாரதி பாட்டைப் படியுங்கள், உங்களுக்குப் புண்ணியம் கிடைக்கும்" என்றெல்லாம் எங்களை மூளைச் சலவை செய்வார். வகுப்பு முடிந்தவுடன் வெளியே வந்து எல்லோரும் வி.ஜி.எஸ். கூறியதை சொல்லிச் சொல்லி கிண்டல் செய்வோம்.

இப்போது பாரதி பாடல்களைப் படிக்கும்போதெல்லாம் அவர் நினைவுதான் வருகிறது. அவர் கூறிய வாசகங்களின் உண்மைப் பொருள் இப்போது விளங்குகிறது. இன்று பாரதியை வணங்கும்போது அவரையும் சேர்த்து வணங்குகிறேன். சென்னை திரைப்பட டைரக்டர் திரு அம்சன்குமார் இருமுறை லண்டனுக்கு வந்தபோதும் அவர் தயாரித்த பாரதியாரின் செய்திப்படங்களை தமிழ் மரபு அறக்கட்டளையின் சார்பில் திரையிட்டோம். ‘நல்லதோர் வீணை செய்தே.. அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ’ என்ற பாடலுடன் படம் முடிந்தபோது அறையில் இருந்த எல்லோர் கண்களிலும் கண்ணீர் வழிந்தோடியது. ஒரு யுக புருஷனை, மஹாகவியை அவர் வாழ்ந்த காலத்தில் மதிக்க மறந்த மக்களின் சார்பில் இன்று மன்னிப்பு கேட்போம். தமிழ் வாழ்க. பாரதி நாமம் வாழ்க.

About The Author

1 Comment

Comments are closed.