பார்த்ததில் ரசித்தது! படித்ததில் பிடித்தது!! – (24.3)

அனுதினமும் ரமணருடன்! – 3

பகவான் ரமணர் மிக அரிதாகவே தன்னைப் பற்றியும் தனது அனுபவங்களைப் பற்றியும் கூறுவார். அந்த அனுபவங்களை அவர் கூறும்பொழுது அவற்றைப் பக்தர்கள் ஆர்வத்துடன் கூர்ந்து கேட்பார்கள். அவற்றில் சில:

ஒரு நாள் இலையில் ஏதோ ஒரு பொருள் அவருக்குக் கொடுக்கப்பட்டு அதை நக்கிச் சாப்பிடுமாறு கூறப்பட்டது. அது ஜீரணத்திற்கு உதவும் என்றும் கூறப்பட்டது. அவர் அதை நக்கி உண்டார். பின்னர் தனது வழக்கமான உணவை உண்டார். சற்று நேரம் கழித்து அவருக்கு அங்கு கூடியிருந்தோர் அனைவரும் ஒளி மயமாக – தேஜோமயமாகத் – தெரிந்தனர். சற்று நேரம் கழித்து அந்தக் காட்சி மறைந்தது.

Ramana Maharishiபகவானைக் கவனித்து வந்த உதவியாளர் மாதவ ஸ்வாமி, பகவான் பல மாதங்கள் உணவின்றிக் கோவிலின் கீழே இருந்த அறையில் இருந்ததுண்டா என்று ஒரு முறை கேட்டார். பகவான் பதிலளித்தார் இப்படி: "உம் உம்! உணவு வரும் – பால், பழம் போன்றவை – யார் உணவைப் பற்றி நினைத்தார்கள்?"

கோவிலைச் சுற்றியுள்ள இடத்தில் இருந்த ஒரு மரத்தின் கீழ் அவர் உட்கார்ந்திருந்தபோது புழுதியால் மூடப்பட்டார். அந்தக் காலக்கட்டத்தில் அவர் குளிப்பதே இல்லை. குளிர்காலத்தில், டிசம்பர் மாத ராத்திரி நேரங்களில் தனது இரண்டு கால்களுக்கு இடையில் தலையை வைத்துக் கொண்டு அசையாமல் அவர் இருப்பார். அதிகாலை நேரத்தில் அவர் மேனியில் இருந்த புழுதியின் மீது வெள்ளை வெளேரெனப் பனி படர்ந்திருக்கும். வெயில் அடித்த பிறகு பனி நீங்கிய பின்னர் அது கறுப்பாகத் தெரியும்.

14-2-1937

விரூபாக்ஷக் குகையில் பகவான் தங்கி இருந்தபோது ஒரு நாள் முதலியார் ஸ்வாமி அவருடன் கூடவே நடந்து ஸ்கந்தாசிரமம் சென்று கொண்டிருந்தார். வழியில் ஒரு 15 அடி உயரப் பாறை இருந்தது. அதில் ஒரு பள்ளம் இருந்தது. அங்கு ஒரு இடைப்பெண் அழுதவாறே நின்று கொண்டிருந்தாள். பகவான் அவள் அழுகைக்கான காரணத்தைக் கேட்டார். அவள் சொன்னாள்; "என்னுடைய ஆடுகளில் ஒன்று அந்தப் பள்ளத்தில் விழுந்து விட்டது. அதனால் அழுது கொண்டிருக்கிறேன்" என்று.

பகவான் பள்ளத்தில் இறங்கினார். ஆட்டை எடுத்துத் தனது தோளில் போட்டுக் கொண்டார். பள்ளத்திலிருந்து ஏறி மேலே வந்தார். ஆட்டை அவளிடம் தந்தார். சாதாரணமாக எந்த ஒரு மனிதராலும் செய்ய முடியாத அபாரமான காரியம் அது என்று முதலியார் ஸ்வாமி சொன்னார்.

பக்தர் ஒருவர் ரமணரிடம் கேட்டார் இப்படி:-

பக்தர்: ராமகிருஷ்ண பரமஹம்ஸர் போலக் கடவுளுடன் பேச முடியுமா?

பகவான்: நாம் ஒருவருடன் ஒருவர் பேசிக் கொள்ளும்போது கடவுளுடன் அதே மாதிரி பேச முடியாமல் என்ன?

பக்தர்: அப்படியானால் நம்மால் ஏன் அப்படிப் பேச முடியவில்லை?

பகவான்: அதற்கு வலிமை வாய்ந்த, மிகவும் சுத்தமான மனம் வேண்டும்! தியானத்தில் பயிற்சியும் வேண்டும்!

பக்தர்: நீங்கள் சொன்ன நிலைகள் இருந்து விட்டால் கடவுள் பிரத்யக்ஷமாவாரா?

பகவான்: அப்படிப்பட்டவை, நீங்கள் இருப்பது போலவே நிஜமானவை. சொல்லப் போனால் நீங்கள் ஜாக்ரதா அவஸ்தையில் உங்கள் உடலை அடையாளம் காணும்போது நீங்கள் பருப்பொருள்களைக் காண்கிறீர்கள். ஸ்வப்ன அவஸ்தையில் மனோமய தளத்தில் இருக்கும்போது சூக்ஷ்ம அவஸ்தையில் சூக்ஷ்மமாகப் பொருள்களைப் பார்க்கிறீர்கள். சுஷுப்தியில் அடையாளமற்ற நிலையில் எதையும் பார்ப்பதில்லை. பார்க்கும் பொருள்கள் பார்ப்பவருடன் தொடர்பு கொண்டவை. இதே போலத்தான் கடவுள் காட்சிகளும்! நீண்ட காலப் பயிற்சியினால், தியானத்தில் எந்தக் கடவுளைத் தியானிக்கிறீர்களோ அது கனவில் காட்சியாக வரும். பின்னர் ஜாக்ரதை அவஸ்தையிலும் வரும்.

ரமண மஹரிஷியை அவர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த ஏராளமானோர் சந்தித்துப் பயன் பெற்றதுண்டு. சுதந்திர இந்தியாவின் முதல் ஜனாதிபதியாகத் திகழ்ந்த பாபு ராஜேந்திர பிரசாத், பிரபல வங்கக் கவிஞர் ஹரீந்த்ரநாத் சட்டோபாத்யாய, மஹாகவி சுப்ரமண்ய பாரதியார், ‘ஆட்டோபயாகிராபி ஆஃப் எ யோகி’ என்ற புகழ்பெற்ற நூலை எழுதியவரும் கிரியா யோகத்தை உலகெங்கும் பரப்பியவருமான ஸ்வாமி யோகானந்தா, பிரபல எழுத்தாளர்களான பால் பிரண்டன், சாமர்செட் மாம், மைசூர் மஹாராஜா, திருவிதாங்கூர் மஹாராஜா, திருவிதாங்கூர் மஹாராணி, நாராயண குரு, காவ்யகண்ட கணபதி முனிவர், ராஜாஜி உள்ளிட்டோர் இவர்களில் அடங்குவர். ஆன்மிகத்தில் ஆர்வமுள்ளோர், இவர்கள் பகவானைச் சந்தித்தபோது நிகழ்ந்தவற்றையெல்லாம் படித்துப் பயன் பெறலாம்.

ரமணரைப் பற்றிய ஏராளமான சுவையான சம்பவங்களையும் அவரது அருமையான உபதேசங்களையும் அவரது அணுக்க பக்தர்கள் தொகுத்துள்ளனர். TALKS WITH RAMANA MAHARISHI (3 பாகங்கள் – 704 பக்கங்கள்) மற்றும் DAY BY DAY WITH BHAGAVAN (405 பக்கங்கள்) ஆகிய அருமையான நூல்கள் சாதகர்கள் படித்துப் பயன் பெறுவதற்கான நல்ல நூல்கள். இவற்றை முழுவதுமாக ஆங்கிலத்தில் படிக்க விரும்புவோர் நாட வேண்டிய இணையத்தளம்:

http://www.messagefrommasters.com/Ebooks/Ramana_Maharshi_Books/talks_with_sri_ramana_maharshi_complete.pdf

http://www.messagefrommasters.com/Ebooks/Ramana_Maharshi_Books/day%20by%20day.pdf

இங்கு இது வரை தரப்பட்டவை அந்தப் புத்தகங்களிலிருந்து ஆங்காங்கு கொய்யப்பட்ட சில மலர்களே!

அடுத்த வாரம் பார்த்ததில் ரசித்தது…

About The Author