பிசிபேளாபாத்

தேவையான பொருட்கள்:

பச்சரிசி – 1 கோப்பை
துவரம்பருப்பு – ½ கோப்பை
மஞ்சள்பொடி – ¼ தேக்கரண்டி
முருங்கைக்காய் – 1
கத்தரிக்காய் – 1
காரட் – 1
பீன்ஸ் – 5
உருளைக்கிழங்கு (சிறியது) – 1
தக்காளி – 2
சின்ன வெங்காயம் – 10
பெரிய வெங்காயம் – 1
கறிவேப்பிலை – சிறிதளவு
புளி – சிறிது
எண்ணெய் – தேவையான அளவு
கடுகு – ½ தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு – ½ தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு

அரைக்க:

சிவப்பு மிளகாய் – 5
தனியா – ½ தேக்கரண்டி
கடலைப்பருப்பு – ½ தேக்கரண்டி
வெந்தயம் – ¼ தேக்கரண்டி
தேங்காய்த்துருவல் – 1 தேக்கரண்டி
பெருங்காயம் – சிறிது

செய்முறை:

துவரம்பருப்பை மஞ்சள்பொடி போட்டு வேக வைத்துக் கொள்ளுங்கள்.

அரிசியைக் கழுவி,நீர் வடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

காய்கறிகளையும் அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

சிறிய வெங்காயத்தைத் தோலுரித்துக் கொண்டு, பெரிய வெங்காயத்தையும், தக்காளியையும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

பின்னர், வாணலியை வைத்து, அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு, சிறிது எண்ணெய் விட்டுச் சிவக்க வறுத்து மின் அம்மியில் (மிக்சி) கரகரப்பாக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.
புளியை ஊற வைத்துக் கரைத்துக் கொள்ளுங்கள்.

குக்கரில் எண்ணெய் ஊற்றிச் சூடாக்கி, அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டுத் தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்குங்கள்.

பிறகு, தக்காளி, காய்கறிகள், உப்பு சேர்த்து வதக்கி, அரைத்த பொடி, சிறிது புளித் தண்ணீருடன் 5 கப் தண்ணீரும் ஊற்றி சிறிது கொதித்த உடன் அரிசியைப் போட்டு, குக்கரை மூடி 2 விசில் வரும் வரை வேக வைத்தால், சுவையான பிசிபேளாபாத் தயார்! கொத்துமல்லித் தழை தூவிப் பரிமாறுங்கள்!

சுவைத்துப் பார்த்து, மறவாமல் உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!

About The Author