புடலங்காய் வறுகடலை உருண்டை

தேவையானவை:

புடலங்காய் – ½ கிலோ
வறுகடலை – ஒரு கோப்பை
பச்சை மிளகாய் – 10
வெங்காயம் – 3
சோம்பு – ஒரு மேசைக்கரண்டி
உப்பு, எண்ணெய், கொத்துமல்லித் தழை – தேவையான அளவு

செய்முறை:

புடலங்காயைக் கழுவி, தண்ணீர் துடைத்து மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள்.

நறுக்கியதும் அதில் உப்பு சேர்த்துப் பிசறி வைத்துக் கொள்ள வேண்டும்.

பச்சை மிளகாய், வெங்காயம், கொத்துமல்லித் தழை, சோம்பு ஆகிய நான்கையும் இலேசாக வாணலியில் வதக்கி, மின் அம்மியில் போட்டு, தண்ணீர் இல்லாமல் ஒன்றிரண்டாகப் பொடித்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து, வறுகடலையை மாவாக அரைத்துக் கொள்ளுங்கள்.

சிறிது நேரத்தில் புடலங்காய் தண்ணீர் விட்டுக்கொண்டு வரும். அதைத் தண்ணீரில்லாமல் ஒட்டப் பிழிந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் அனைத்தையும் போட்டு, தேவையான அளவு உப்புச் சேர்த்துப் பிசைந்து கொள்ளுங்கள்.

ஒரு வாணலியில் எண்ணெயைக் காய வைத்து, பிசைந்த கலவையை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிப் போட்டுச் சிவக்கப் பொரித்தெடுங்கள்!

சுவையான புடலங்காய் – வறுகடலை உருண்டை தயார்!

சுவைத்துப் பார்த்து, மறவாமல் உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!

About The Author