புதுமைகள் செய்யும் பூடான் இயற்கை வேளாண்மையில் முதன்மை!

மொத்த உள்நாட்டு உற்பத்திக் குறியீட்டை விட ‘ஒட்டுமொத்த மகிழ்ச்சிக் குறியீட்டுக்கு’ப் பெயர்பெற்ற இமாலய அடிவாரத்து நாடான பூடான் இப்போது தன் வேளாண்மை முறையை நூறு விழுக்காடு இயற்கை வேளாண்மைக்கு மாற்றத் தீவிரமாக முயற்சி செய்து வருகிறது.

புத்த மதத்தினர் நிறைந்த இந்தச் சிறிய நாடு, பொருளாதார வளர்ச்சி, சுற்றுப்புறப் பாதுகாப்பு ஆகியவற்றுக்கான அணுகுமுறைகளை அனைவரும் வியக்கும் வகையில் கையாண்டு வருகிறது!

இப்போது செயற்கை உரங்களைத் தடை செய்து, முற்றிலும் இயற்கை முறை வேளாண்மைக்கு மாறும் முயற்சிகளில் தீவிர ஆர்வம் காட்டி வருகிறது. 12 லட்சம் மக்கள் நிறைந்த இந்தச் சிறிய நாட்டின் இயற்கை வேளாண்மை முயற்சிகள் உணவு உற்பத்தியைக் குறைந்து விடும் என்ற உலக வங்கியின் கருத்துக்கு மாறாகப் பூடான் அரசு உணவு உற்பத்தி மிக அதிகரிக்கும் எனக் கணக்கிடுகிறது. தவிர, அண்டை நாடுகளான இந்தியா, சீனா ஆகியவற்றுக்கு உணவுப் பொருட்களை ஏற்றுமதி கூடச் செய்ய முடியும் என்று அந்நாட்டு மந்திரி பேமா கியாம்ட்ஷோ கருதுகிறார்.

இன்னும் பத்து ஆண்டுகளில், வழக்கமான செயற்கை உரங்களைத் தவிர்ப்பது மூலம் பழம், உருளைக்கிழங்கு, கோதுமை ஆகிய பயிர்களில் இயற்கை வேளாண்மை முறை 100 சதவிகிதம் முழுமை அடைந்து விடும் என்று தீர்மானமாக நம்புகிறார்கள் பூடான் மக்கள்.

பேமா கியாம்ட்ஷோ மேலும் கூறுகிறார்,
“பூடானைப் பசுமைப் பொருளாதாரத்திற்கு மாற்ற முடிவு செய்துவிட்டோம். கோள்களில் நாம் ஏற்படுத்தும் நெருக்கடியை மனதில் கொண்டு நாங்கள் பசுமைப் பொருளாதாரத்திற்கு மாற முடிவு செய்து விட்டோம்” என்று கூறுகிறார்.

மேலும், “நாங்கள் இயற்கை வேளாண்மை முறைக்கு மாறத் தீர்மானித்திருப்பது நடைமுறைக்குரியதும் தத்துவரீதியானதும் ஆகும். நாங்கள் புத்த மதத்தைச் சார்ந்தவர்கள். இயற்கையுடன் ஒன்றி வாழ வேண்டுமென்பதில் உறுதியாக இருக்கிறோம். பூடான் ஒரு மலைப் பிரதேசம். வேதிம உரங்களைப் பயன்படுத்தும்போது அவற்றை எங்கு பயன்படுத்துகிறோமோ அந்த இடத்தில் மட்டும் நிற்காது. மற்ற இடங்களிலும் மற்ற உயிரினங்களையும் பாதிக்கும். ஆகவே, நாங்கள் சுற்றுப்புறத் தூய்மையை மனதில் கொண்டுதான் இயற்கை முறை மாற்றத்தைக் கொண்டுவருவதில் உறுதியாக இருக்கிறோம்!” என்றும் தெரிவிக்கிறார்.

கியாம்ட்ஷோ அவர்களும் அவரின் சக அமைச்சர்களும் உழவர்கள்! கியாம்ட்ஷோ நியூசிலாந்திலும் சுவிட்சர்லாந்திலும் மேனாட்டு வேளாண் முறைகளை முறையாகக் கற்றவர்.

“நாங்கள் நாள் குறிப்பிட்டுக்கொண்டு அதற்குள் இயற்கை வேளாண்மை முறைக்கு மாற வேண்டும் என்று முடிவு செய்துகொள்ளவில்லை. சில பயிர்களைத் தேர்வு செய்திருக்கிறோம். அவற்றில் உடனடியாக இயற்கை வேளாண்மை முறையைச் செயல்படுத்த முடியும். மற்ற பயிர்களில் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் இயற்கை முறைக்கு மாற முடியும்” என்று அவர் சொல்கிறார்.

வேளாண்தொழில் சார்ந்த நாடான பூடான் வளர்ந்து வரும் மற்ற நாடுகளைப் போலவே பல சவால்களைச் சந்திக்க நேரிடுகிறது. இளைஞர்கள் பலர் வேளாண்மையில் விருப்பமற்றவர்களாக இந்தியா போன்ற பல நாடுகளை நோக்கிச் சென்றுவிடுகிறார்கள். தவிர, மக்கள்தொகைப் பெருக்கமும் தவிர்க்க இயலாத நுகர்வுக் கலாச்சார மாற்றங்களும் பூடானையும் பாதித்துள்ளன. ஆனாலும், பூடான் தன் திட்டத்தில் நம்பிக்கை கொண்டுள்ளது!

இந்நாடு சில வகைக் காளான்களை ஜப்பானுக்கும், காய்கறிகளைத் தாய்லாந்துக்கும், விலைமதிப்பு மிக்க ஆப்பிள்களை இந்தியாவுக்கும் ஏற்றுமதி செய்கிறது.

வேதிம உரங்களைத் தவிர்த்து இயற்கை உரங்களுக்கு மாறுவதால் பூடானுடைய இறக்குமதி வெகுவாகக் குறைந்து அந்நியச் செலாவணியை அதிகரிக்க முடிகிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக, பூடான் இயற்கை வேளாண்மை முறைக்கு
மாற ஆர்வம் காட்டுவது அதனுடைய கொள்கையான நாட்டின் ‘மொத்த மகிழ்ச்சித்தரக் குறியீட்டை’ அதிகரிப்பதற்குத்தான்! வேளாண்மையே ஒருவருக்கொருவர் சார்ந்து இருப்பதற்கும், இயற்கையுடனும் மற்ற உயிரினங்களுடனும் இணங்கி இருப்பதற்கும் காரணமாகி மகிழ்ச்சியின் தரத்தை அதிகரிக்க உதவுகிறது.

ஆதாரம்: ‘டவுன் டு எர்த்’ மற்ற இணையதள, செய்திக் கட்டுரைகள்.

நன்றி: பாடம் மாத இதழ்.

About The Author