புரட்டியதும் திரட்டியதும்

நாடாளுமன்றத்தில் பெண்கள் பங்கு – ஸ்வீடன் வழி தனி வழியா?

இங்கிலாந்தில் 1918ஆம் ஆண்டு வரை, மணமான பெண்களுக்கு வாக்குரிமை இல்லாமலிருந்தது. ஒரு பெரிய போராட்டதிற்குப் பின்பே அவர்களுக்கு அந்த உரிமை கிட்டியது. அது வீரமும் வன்முறையும் நிறைந்த ஒரு நீண்ட போராட்டமாக அமைந்தது. எம்லைன் பங்கர்ஸ்ட் என்ற ஐந்து குழந்தைகளின் தாய் ஒரே ஆண்டில் 12 முறை சிறைக்கு அனுப்பப்பட்டார் தேர்தலில் வாக்குரிமை கேட்டதற்காக!

ஆனால் போராட்டம், ஊர்வலம், உண்ணா விரதம் பொதுக்கூட்டங்கள் இவை எதுவுமே இல்லாமல் பெண்களுக்கான உரிமைகளைப் பெற்றுக்கொண்ட நாடு ஸ்வீடன். இன்று உலகத்திலேயே, நாடாளுமன்றத்தில் அதிக அளவில் பெண்கள் பங்கேற்கும் பெருமை கொண்ட நாடு ஸ்வீடன். பெண்களைக் கொண்ட ஒரு சிறு குழுவே இதைச் சாதித்தது. அது அரசியல் கட்சி கூட இல்லை என்பதுதான் ஆச்சரியம்! அவர்கள் இதை எப்படிச் சாதிக்க முடிந்தது?

Redstockingsஸ்வீடன் நாடு தேர்தலில் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறையைப் பின்பற்றுகிறது. ஒவ்வொரு கட்சிக்கும், அது பெறுகின்ற வாக்குகளின் விகிதத்திற்கு ஏற்ப நாடாளுமன்றத்தில் இடம் ஒதுக்கப்படும். அந்த இடங்களில் அந்தந்தக் கட்சி நியமிக்க விரும்புகிற வேட்பாளர்கள் யார் என்பதைக் கட்சிகள் அறிவித்துவிடும். ஆகவே, வேட்பாளர்களின் அடிப்படையிலேயே ஸ்வீடன் மக்கள் தாங்கள் விரும்பும் கட்சிக்கு வாக்களிப்பார்கள்.

எந்த அரசியல் கட்சிக்கும் வாக்களிக்க ஒருவருக்கு விருப்பம் இல்லையென்றால் அவர் அத்தனைக் கட்சிகளின் பெயர்கள் மீதும் குறுக்காக ஒரு கோடு போட்டு அடித்து விட்டுத் தனக்கு விருப்பமான ஒருவரது பெயரை எழுதிக் கொள்ளலாம். அது செல்லாத வாக்காகக் கருதப்படாது. பெரும்பான்மையானோர் ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டால் அவர் சுயேச்சை வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்படுவார். அவர் ஸ்வீடன் நாட்டுக் குடிமகனாக இருந்தால் போதும்.

எந்த அரசியல் கட்சியின் பெயர் மக்களால் நிராகரிக்கப்படுகிறதோ அந்தக் கட்சி நாடாளுமன்றத்தில் இடம்பெற முடியாது. குறிப்பிட்ட அளவுக்கு மேல் நிராகரிக்கப்பட்டால் அது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாகச் செயல்பட முடியாது.

ஸ்வீடனின் ரெட் ஸ்டாக்கிங்ஸ் என்ற மகளிர் அமைப்பு, இந்தத் தேர்தல் முறையைப் பயன்படுத்திக் கொள்ளத் தீர்மானித்தது. ரெட் ஸ்டாக்கிங்ஸ் என்பது அமெரிக்காவின் புகழ்பெற்ற பெண்கள் அமைப்பு. அந்தப் பெயரையே தங்கள் அமைப்புக்குச் சூட்டிக் கொண்டது இந்தப் பெண்கள் குழு.

அந்தக் குழு செய்தது இதுதான்.

தேர்தல் நடக்க இருந்த சமயத்தில் இந்தக் குழு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஒரு கடிதம் அனுப்பியது. "நடக்க இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பாதி அளவிற்காவது பெண்களை நிறுத்தாவிட்டால் எங்கள் பெண்கள் குழுவின் உறுப்பினர்கள் உங்கள் கட்சியின் பெயரின் நடுவே ஒரு கோடு போட்டு நிராகரித்துவிட்டு எங்களுக்கு விருப்பமான ஒருவரின் பெயரை எழுதுவார்கள்" என்று அந்தக் கடிதத்தில் அறிவித்தது. தங்களுடைய இந்தக் கோரிக்கையை ஆண்களும் ஆதரிப்பதாகவும் அந்தக் குழு கடிதத்தில் குறிப்பிட்டது.

இது மிகவும் தந்திரமான உக்திதான்! தங்களின் அமைப்புக்கு மிகவும் ஆதரவும் பலமும் இருப்பதுபோல அந்தக் குழு ஊடகங்கள், ஆதரவாளர்கள் மூலம் ஒரு தோற்றத்தை ஏற்படுத்திக் கொண்டது.

முதலில் இதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அலட்சியப்படுத்திய அரசியல் கட்சிகள் அந்தக் குழுவிற்கு வளர்ந்து வந்த வலுவைப் பார்த்து மிரண்டன. நாடாளுமன்றத்தை இழப்பதோடு மட்டுமின்றி அரசியல் அங்கீகாரத்தையும் இழக்க வேண்டி வருமோ என்ற அச்சம் அவர்களைப் பற்றிக் கொண்டது. எனவே கடைசியில், தங்கள் கட்சியின் வேட்பாளர்களில் பாதிக்கு மேல் பெண்களாக இருக்கும்படிப் பட்டியலை தயார் செய்தனர். இதனால், அதிகமான பெண்கள் நாடாளுமன்றத்திற்குச் செல்ல முடிந்தது.

அரசியல் சாராத மகளிர் குழு ஒன்று அமைதியாக, எந்தப் போராட்டமுமின்றிப் பெண்களின் பங்கை நாடாளுமன்றத்தில் கைப்பற்றி வரலாறு படைத்தது!

–திரு.மாலன் அவர்களின் "சொல்லாத சொல்" நூலிலிருந்து.

About The Author