புராணத் துளிகள் (3)

லலிதா ஸஹஸ்ர நாம மஹிமை

புருஷார்த்தம் தரும் மூன்று ஸ்லோகங்கள் வருமாறு:-

ரஹஸ்யானாம் ரஹஸ்யம் ச
லலிதாப்ரீதி தாயகம் I
அனேன ஸத்ருஸம் ஸ்தோத்ரம்
ந பூதம் ந பவிஷ்யதி II

ஸர்வரோக ப்ரசமனம்
ஸர்வ ஸம்பத் ப்ரவர்தனம் I
ஸர்வபாப ம்ருத்யுசமனம்
காலம்ருத்யு நிவாரணம் II

ஸர்வ ஜ்வரார்த்திசமனம்
தீர்க்காயுஷ்ய ப்ரதாயகம் I
புத்ரப்ரதம் அபுத்ராணாம்
புருஷார்த்த ப்ரதாயகம் II

த்யானம், ஜபம் முதலான அநேக ரஹஸ்யங்களோடு கூடிய இந்த ஆயிரம் நாமங்கள் லலிதாம்பிகைக்கு ப்ரீதியைக் கொடுப்பவை. நிகழ்காலம், இறந்தகாலம், எதிர்காலம் ஆகிய மூன்று காலங்களுக்கும் மிஞ்சிய இதற்கு சமமான ஸ்தோத்ரம் வேறொன்றுமில்லை.

அறிய முடியாதென்று கை விடப்பட்ட அஸாத்யம், அயாப்யம் என்ற பேதங்களை உடைய வியாதிகளையும் கூட இது போக்கடிக்கும். ரோகம் என்பதற்கு நிகரான வறுமையையும் போக்கும். திடீரென ஏற்படும் அபமிருத்யுவை இது விலக்கும். காலத்தினால் ஏற்படும் மரணத்தையும் இது போக்கும்.

ஒரு நாளைய ஜ்வரம் முதல் ஸன்னிபாத ஜ்வரம் வரை அனைத்தும் அகலும். சதாயுஸ் எனப்படும் நூறு வயதை இது அருளும். புத்திர செல்வம் இல்லாதவர்களுக்கு புத்ர செல்வம் தரும். புத்திமான்களால் விரும்பப்படும் முக்தியையும் இது அருளும்.

-ப்ரம்மாண்ட புராணத்தில் லலிதோபாக்யானத்தில் ஹயக்ரீவர் – அகஸ்த்ய ஸம்வாதத்தில் வரும் ஸ்லோகங்கள்.

அர்க்யம் விடுவது எதற்காக?

அர்க்கிய ஜலத்தை எடுத்து எதற்காக விடுகின்றோம் என்பதற்கான காரணம் சொல்லுகிறேன். கேட்பீராக!

மஹாவீரர்களாகவும் நன்றி மறந்தவர்களாகவும், பயங்கரர்களாகவும் இருக்கின்ற முப்பது கோடி மந்தேஹா என்னும் ராட்ஸசர்கள் சூரியனை விழுங்க ஆசைப்படுகிறார்கள். அவர்கள் இச்சையைக் கெடுப்பதற்குத் தேவ கூட்டங்களும் ரிஷிகளும் சந்தியை உபாசித்து உதக அஞ்சலியாக அர்க்கியத்தை விடுகிறார்கள். விட்டவுடன் அந்த அர்க்கிய ஜலம் வஜ்ர உருவம் கொண்டு அந்த ராட்ஸசர்களைக் கொளுத்துகின்றது. இதுதான் அதற்குக் காரணம்.

-நாரதரிடம் நாராயணர் கூறுவது.

தேவி பாகவதத்தில் பதினொன்றாம் ஸ்கந்தத்தில் பதினாறாவது அத்தியாயமான சந்தியோபாசனம் என்னும் அத்தியாயத்தில் வருவது.

பாகவத மஹிமை

எவன் ஒருவன் இந்த ஸ்ரீ பாகவத சாஸ்திரத்தை அர்த்தத்துடன் வாசிக்கிறானோ, அவன் கோடி ஜன்மங்களில் செய்த பாவங்களும் தீரப் பெறுவான். இதில் சந்தேகமில்லை. இதில் பாதி ஸ்லோகத்தையாவது அல்லது கால் ஸ்லோகத்தையாவது வாசிப்பானாயின், ராஜசூய, அஸ்வமேத யாகங்களின் பலனைப் பெறுவான். சரீரத்தை விடும் காலத்தில் இந்தக் கதையைக் கேட்பானாயின், அவனுக்கு ஸ்ரீமன் நாராயணன் தனது வைகுண்ட லோகத்தைக் கொடுப்பான். இந்தக் கதையை ஒரு தடவையாவது கேளாதவனுடைய ஜன்மம் பயனற்றதே. இந்தக் கதையைக் கேட்கும்படியான பாக்கியம் கோடி ஜன்மங்களில் செய்த புண்ணியங்களினால்தான் கிடைக்கும்.

-நாரத முனிவரிடம் ஸனகாதிகள் கூறும் இந்தப் பகுதி பத்ம புராணத்தில் உத்தர காண்டத்தில் பாகவத மாஹாத்மியத்தில் இடம் பெறுகிறது.

அம்பிகைக்குப் பிரியமான விரதங்கள் எவை?

"அனந்த த்ரிதியை விரதம், ரசகல்யாணி விரதம், ஆனந்தத்தை விளைவிக்கின்ற ஆருத்ரா விரதம், மங்கள வார விரதம், சுக்கிர வார விரதம், கிருஷ்ண பக்ஷ சதுர்தசி விரதம், பிரதோஷ விரதம், புரட்டாசி மாதத்திலும் சித்திரை மாதத்திலும் வருகிற நவராத்ரி விரதம் ஆகியவற்றைப் புருஷர்களும் ஸ்தீரிகளும் பிரயத்தனத்தோடு அனுஷ்டிக்க வேண்டும். இவை போலவே சோமவார விரதமும் எனக்குப் ப்ரீதியானது."

ரசகல்யாணி விரதமானது அந்தந்த திரிதியையோடு கூடிய தினம். ஆருத்ரா விரதமாவது ஆருத்ரா நக்ஷத்திரத்தில் திரிதியையோடு கூடிய தினம். மஹாதேவன் தேவியை அந்திப் பொழுதில் உன்னதமான ஆசனத்தில் வீற்றிருக்கச் செய்து சகல தேவர்களும் தன்னைச் சூழ்ந்திருக்க அந்த அம்பிகை எதிரில் நடம் புரிவன். அந்த அந்திப் பொழுதே பிரதோஷ காலம் எனப்படும். அக்காலத்தில் ஆகாராதிகளை விட்டு மஹாதேவியைப் பூஜிக்க வேண்டும்.

-பர்வத ராஜனிடம் தேவி கூறியது. தேவி பாகவதத்தில் ஏழாம் ஸ்கந்தத்தில் 39ஆம் அத்தியாயமான தேவீ பூஜா விதி என்னும் அத்தியாயத்தில் வருவது.

மூன்று ஈஷணைகள்!

ஈஷணைகள் மூன்று.

1)தாரேஷணை
2)தனேஷணை
3)புத்ரேஷணை

(தாரேஷணை என்றால் மனைவியின் மீது ஆசை. தனேஷணை என்றால் பணத்தின் மீது ஆசை. புத்ரேஷணை என்றால் மகன் மீது ஆசை).

இந்த மூன்று ஆசைகளையும் திருதிராஷ்டிரன் விட்டு விடுவான் என்று அவன் முடிவு பற்றி நாரதர் தர்மபுத்திரருக்கு உரைத்தது.

-ஸ்ரீமத் பாகவதம் முதல் ஸ்கந்தத்தில் 13ஆம் அத்தியாயம்.

–தொடரும்…

About The Author