புராணத் துளிகள் (8)

சப்த ரிஷிகள் யார் யார்?

கஸ்யபர், அத்ரி, வசிஷ்டர், விஸ்வாமித்திரர், கௌதமர், ஜமதக்னி, பரத்வாஜர் ஆகிய இவர்களே சப்த ரிஷிகள் ஆவர்.

– ஸ்ரீமத் பாகவதம், விஷ்ணு புராணம், வாமன புராணம், கூர்ம புராணம்.

மரீசி, அங்கீரஸர், அத்ரி, புலஸ்த்யர், புலகர், க்ரது, வசிஷ்டர் ஆகிய இவர்களே சப்த ரிஷிகள் ஆவர்.

– வாயு புராணம், அக்னி புராணம்.

மரீசி முதலான ஏழு ரிஷிகளும் பிரம்மாவின் புத்திரர்கள் என சிவ புராணம் கூறுகிறது.

சப்த ரிஷிகளின் ஒரு வருடமானது தேவர்களின் ஏழு வருடங்களுக்குச் சமமாகும் என்று மத்ஸ்ய புராணம் கூறுகிறது.

சப்த ரிஷிகளின் பெயர்கள் மாற்றி மாற்றிக் கூறப்படுகிறதே என்று பலரும் சந்தேகம் கொள்வர். ஆனால், ஒவ்வொரு கல்பத்திலும் சப்தரிஷிகள் மாறுவர் என்பதைக் கருத்தில் கொண்டு பார்த்தால் இந்த சந்தேகம் எழாது.

சிவனைத் துதிக்கும் பாக்கியம் எப்படி ஏற்படுகிறது?

தவம், யாகம், தானம் முதலியவை சிவ ஞான இச்சை (பக்தி) உண்டாவதற்குக் காரணமாக அமைகின்றன. வேதம் மற்றும் வேதாங்க அத்தியயனம் செய்தல், அத்தியயனம் செய்வித்தல், வேதார்த்த பக்தி, வேதத்துக்கு விரோதமான நூல்களை விலக்குதல், சாந்தி, தாந்தி முதலியவை ஞானாங்கமாகும் என்று கற்றோர் சொல்வார்கள்.

ஞானங்கள் எல்லாவற்றுள்ளும் சிவலிங்க பூஜை செய்தல், சிவலிங்கப் பிரதிஷ்டை செய்தல், சிவ ஸ்தலங்களுக்கு யாத்திரை செய்தல், சிவனடியார்களைப் பூஜித்தல், விபூதி, ருத்ராக்ஷம் தரித்தல், ஞானாசிரியன் சேவடி தரிசனம் செய்தல், பஞ்சாட்சரம் உள்ளிட்ட மந்திரங்களை ஜபித்தல் – இவை மேலானவை என்று பெரியோர்கள் சொல்வார்கள்.

சிவத் தலங்கள் பலவற்றுள்ளும் காசி, திருக்காளத்தி, சிதம்பரம் ஆகியவை விசேஷமாகும்.

-ஸ்கந்த புராணம், சூத சம்ஹிதை, யக்ஞ வைபவ காண்டம், எட்டாவது அத்தியாயம்.

சிவனும் விஷ்ணுவும் ஒருவரே!

சிவபெருமானை லக்ஷ்மி துதி செய்தவுடன் மனம் மகிழ்ந்து சிவபிரான் லக்ஷ்மியை நோக்கிக் கூறுவது:-

“ஓ கமலாக்ஷீ! நீ சொல்லி வந்த நியாயப்படி எனக்கும் விஷ்ணுவுக்கும் அபேதம் என்பது சத்தியமே! இந்த நியாயம் உனக்கு எப்படித் தெரிய வந்தது? யான் எல்லாமாய் இருக்கும் தன்மையாகிய ஏகத்வத்தைத் தேவர்களும், முனிவர்களும், வேதாந்தம் உணர்ந்த ஞானிகளும் குதர்க்கத்தால் அறியாமல் பேத புத்தி உடையவர்களாகி துவேஷிக்கின்றனர். இவர்கள் இங்ஙனம் இருக்க, உலகில் எனக்கு பக்தர்கள் என்று சொல்லப்பட்ட பலர் விஷ்ணுவைத் தூற்றி நிந்திக்கின்றவர்களாயும், விஷ்ணு பக்தர்கள் என்று சொல்லப்பட்ட பலர் என்னைத் தூற்றி நிந்திக்கின்றவர்களாயும் இருக்கின்றனர். இதற்குக் காரணம் தேவியின் மாயையினால் அவர்கள் கவரப்பட்டிருக்கும் தன்மையே ஆகும்.

ஏனெனில், பக்தர்கள் என்று சொல்லப்பட்ட இவர்கள் ஸ்தூல உருவங்களைக் கண்டு பக்தி செய்ய வந்தார்களேயன்றி சொரூப உண்மையை அறிந்து பக்தி செய்ய வந்தவர்கள் அல்லர். சொரூப உண்மையை அறியப் புகுவாராயின் துவேஷம் உடையவர் ஆகார். ஸ்தூல உருவம் பல வேற்றுமை உள்ளது. சொரூபம் வேற்றுமையாகாது ஒரே தன்மையாக உள்ளது. ஆகவே, ஒரு தன்மையாய் இருக்கும் சொரூப உண்மையை விட்டு விட்டுப் பல தன்மையாய் இருக்கும் வடிவத்தைப் பற்றினாராதலின் கண்ட ஞானமுடையவராகி பேதவாதத்துக்கு உள்ளாகின்றனர். என்னுடைய வேற்றுமை இல்லாத ஏகத்வத்தை அறிவதென்றால் அகண்ட ஞானமும் புண்ணிய விசேஷமும் பெற்றவராக இருப்பின் அறிவர். அவர்களிடத்தில் தேவியின் மாயா விலாசம் போய் ஞான விலாசம் உண்டாகும். இது யாவர்க்கும் கிடைத்தல் அரிது. கஷ்டப்பட்டு அறிதல் வேண்டும்.”

இவ்வாறு லக்ஷ்மி தேவியிடம் சிவபிரான் அருளுவதை ‘தேவி பாகவதம்’ ஆறாம் ஸ்கந்தம் 18 ஆம் அத்தியாயம் விளக்குகிறது.

காலமே ஈஸ்வரனுக்குச் சமம்!

காலத்தை ஒழிய சிருஷ்டி முதலியவை எவையும் சம்பவிக்க மாட்டா. ஆகையால் அந்தக் காலம் ஈஸ்வரனைப் போல் எல்லாத் திறமைகளும் அமைந்திருக்குமாகையாலும், அந்த ஈஸ்வரனுக்கு உடலாகி அவனுக்கு உட்பட்டிருக்குமாகையாலும் அதை ஈஸ்வரன் என்றே சொல்லலாம். அக்காலம் என்னும் பொருள் நேரடியாக அறிய முடியாத ஸ்வரூபம் உடையது. காரியங்களைப் பற்றியே அதை ஊகிக்க வேண்டும். அத்தகைய காலத்திற்கு அவ்யக்தமான அந்த பிரகிருதியும் உட்பட்டே இருந்தது. ஆகையால் பிரளயத்திலும் காலம் உதவியாகவே இருந்தது. சிருஷ்டியிலும், சம்ஹாரத்திலும் காலம் தொடர்ந்து வருவதே.

விதுரருக்கு மைத்ரேயர் விளக்குவது.

-ஸ்ரீமத் பாகவதம் – மூன்றாம் ஸ்கந்தம், பத்தாம் அத்தியாயம்.

யார் யாரை வதம் செய்தனர் – 2

(புராணத் துளிகள் முதல் பாகத்தில் 30ஆவது பொருளாக அமைந்த முதல் பகுதியைத் தொடர்ந்து வரும் பட்டியல் இது).

1) கார்த்திகேயன் தான் பிறந்த ஆறாம் நாளன்றே தாரகாசுரனை வதம் செய்தார்.
– சிவ புராணம், விஷ்வகர்மா புராணம்.

2) கிருஷ்ணர் கம்ஸனையும், பூதனையையும் வதம் செய்தார்.
– ஸ்ரீமத் பாகவதம்.

3) சால்வ தேசத்து அரசன் ப்ரஹ்மதத்தனை ஸ்ரீகிருஷ்ணர் வதம் செய்தார்.
– ஸ்ரீமத் பாகவதம்.

4) ஸ்ரீகிருஷ்ணர் பால்ய காலத்திலேயே பகாசுரன் மற்றும் காகாசுரன் ஆகியோரை வதம் செய்தார்.
– ஸ்ரீமத் பாகவதம் – ப்ரஹ்ம வைவர்த புராணம், கோவிந்தலீலாம்ருதம்.

5) கணேசர் (பிள்ளையார்) லோபாசுரனை வதம் செய்தார்.

– முத்கல புராணம்.

–தொடரும்…

About The Author