புலி பசித்தாலும்…

மகா மாமிசப் பிரியன் என் நண்பன். அவன் வேலையே நாள் முழுவதும் மாமிசத்தோடு மல்லுக்கட்டுவதுதான். மாமிசம் சமைப்பதில் படு கில்லாடி! மிகச் சுவையாகச் சமைப்பான். "எப்பொழுதும் இறைச்சியையே விரும்பிச் சாப்பிடுகிறாயே, மரக்கறியையோ பழவகைகளையோ ஏன் சாப்பிடக்கூடாது" என்று கேட்டால் அலட்சியமாகச் சிரித்துவிட்டுக் கேட்பான்,
"புலி புல்லையோ இலைகுழைகளையோ தின்பதை நீ பார்த்திருக்கிறாயா?” என்று. "அது மாம்பழமும் பலாப்பழமுமா சாப்பிடுகின்றது? ஆனால், அதனுடைய பலத்தைப் பார்த்தாயா, அதன் ஆண்மையைப் பார்த்தாயா" என்று சவால் விடுவதுபோலக் கேட்பான்.

புலியும் சிங்கமுந்தானா காட்டில் இருக்கின்றன. காட்டில் உலாவும் யானைகளைப் பார்! காண்டாமிருகத்தைப் பார்! இவை வெறும் இலைகுழைகளைத்தானே உண்கின்றன? இவற்றின் பலம் பற்றி உனக்குத் தெரியாதா என்று பதிலுக்குக் கோபத்தோடு கேட்பேன். சிரித்து மழுப்புவான்.

குரங்குகளும் பறவைகளும்தான் பழங்களைத் தேடுகின்றன. பலசாலியான மிருகங்களுக்கு இவை தேவையில்லை என்று சொல்லி விட்டு வாயில் ஒரு துண்டு இறைச்சியைத் தள்ளுவான்.

"இதன் சுவை வேறு எதற்குத்தான் இருக்கின்றது!" என்று சொல்லவும் தவறமாட்டான்.

இந்த இளைஞன் இன்றைய சமுதாயத்தின் ஓர் உதாரணம்! இறைச்சி இல்லாமல் எதையும் உண்ண முடியாது என்ற நிலையில்தான் இவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். சாப்பாட்டுடன் மரக்கறி சேர்ப்பது, மீன் உணவைச் சேர்த்துக் சொள்வது என்பவையெல்லாம் இவர்களுக்கு ஒவ்வாத விடயங்களாகி விட்டன.

மாமிசம் வேண்டப்படாத உணவு என்று சொல்ல வரவில்லை. ஆனால், நிறையுணவாக வேறு பலவற்றையும் தினசரி சேர்த்துக் கொள்ள வேண்டியது மிக அவசியமாகின்றது. இன்றைய இள வயதினர் வெறும் மாமிச யுகத்தில் வாழ்வது ஆரோக்கியமானதல்ல!

மீன், சிப்பி உணவுகள், தோல் நீக்கிய கோழி, 6 அவுன்ஸ் எடைக்கு மேற்படாத மிக மெல்லியதாக வெட்டப்பட்ட இறைச்சி ஆகியவை உங்கள் உணவில் தினசரி சேர்க்கப்பட வேண்டியவை என்பதை நீங்கள் அறிவீர்களா?

கோழி இறைச்சியோ, மீனோ எதுவும் செய்து சாப்பிடுங்கள். ஆனால், அவற்றை எண்ணெயில் பொரிப்பதை அடியோடு தவிர்த்து விடுங்கள்!

பன்றி இறைச்சியை உங்கள் அன்றாட உணவிலிருந்து அடியோடு தவிர்த்து விட்டால் மிகச் சிறந்தது! உடலில் பெரும் விஷமாக மாறும் பலவற்றை இந்த இறைச்சிதான் கொண்டிருக்கின்றது. பெரும்பாலும், உடலில் கொலஸ்ரோல் அளவை அதிகரிப்பதும் இதுதான்.

வாரத்தில் இரண்டு தடவையாவது எண்ணெய்த்தன்மை கொண்ட மீனை அவித்தோ, கிறில் செய்தோ சாப்பாட்டுடன் சேர்த்துக் கொள்வது மகா சிறப்பான விடயம்! மீனை வாங்கும்போது பழுதுபடாத மீனாகப் பார்த்து வாங்குங்கள். அது மிக முக்கியம்!
பன்றி இறைச்சியைத் தவிர்க்கக் கேட்டோம். அப்படியானால் ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி சாப்பிடலாமா? இவை நஞ்சல்ல. ஆனால், இவற்றிலும் கொழுப்பு அதிகம்தான்.

இறைச்சி தரும் சத்தைப் பருப்பு, பயறு போன்றவையும் தருகின்றன. இவற்றையும் சுவை பார்க்கலாமே? புலி பசித்தாலும் புல் தின்பதில்லை என்று இன்று இளம் வயதில் வீரம் பேசலாம். ஆனால் ஐம்பதைக் கடக்கும்போது, இந்த மனிதப்புலிகளுக்கு மெல்லப் புல்லிலும் ஆசை வரத் தொடங்கிவிடும். உடலுக்குப் பழங்களும், மரக்கறி வகைகளும் தேவை என்ற காலம் கடந்த ஞானோதயம் வரத் தொடங்கி விடும்.

ஐம்பதிலும் ஆசை வரும் என்று சொல்ல இதுவும் ஒரு காரணமாக இருக்கலாமோ?

About The Author