பெரியோர் வாழ்விலே சுவையான நிகழ்ச்சிகள் (முதல் தொகுதி) (2.2)

எட்டு ரூபாயில் படித்தவர் (2)

இதைக் கண்ட ஆசிரியருக்கு ஒன்றும் புரியவில்லை. "கோகலே, ஏனப்பா கண்ணீர் விடுகிறாய்?" என்று திகிலுடன் கேட்டார்.

"என்னை நீங்கள் கெட்டிக்காரன் என்கிறீர்கள். ஆனால், இந்தக் கணக்கை நானாகப் போடவில்லை; எனக்குத் தெரிந்த ஒருவனுடன் சேர்ந்துதான் போட்டேன். உண்மையில் நான் ஒருவனாகவே இதைப் போடவில்லை" என்று கூறி மேலும் அழுதார்.

இதைக் கேட்டதும், ‘அடடா! இந்தப் பையன் எவ்வளவு தூரம் உண்மையைக்
கடைப்பிடிக்கிறான் !’ என்று எண்ணி எண்ணி வியந்தார் ஆசிரியர். அவர் மட்டுந்தானா வியந்தார்? மற்ற மாணவர்களும் வியந்தார்கள்!

* * *

பூனாவில் ‘புதிய ஆங்கிலப் பள்ளிக்கூடம்’ என்ற ஒரு பள்ளிக்கூடம் இருந்தது. அது ஒரு தருமப் பள்ளிக்கூடம். அதற்கு அரசாங்கத்தின் ஆதரவு இல்லை; பெரிய மூலதனமும் இல்லை. அப்படியிருந்தும் கோகலே தம்முடைய படிப்பு முடிந்தவுடன் அந்தப் பள்ளியில் ஓர் ஆசிரியராகப் போய்ச் சேர்ந்தார்.

அவர் நினைத்திருந்தால், ஏதேனும் ஒரு பெரிய அரசியலார் பள்ளியில் நல்ல சம்பளத்தில் சேர்ந்திருக்கலாம். பரோபகார எண்ணத்துடன் பாடுபட வேண்டும் என்று நினைத்தார்.

புதிய ஆங்கிலப் பள்ளியில் மாதம் முப்பத்தைந்து ரூபாய்தான் அவருக்குக் கிடைத்து வந்தது. மகிழ்ச்சியுடன் அதைப் பெற்று மாணவர்களுக்கு ஆர்வமுடன் கல்வி கற்பித்து வந்தார்.

அன்றியும், அந்தப் பள்ளிக்கூடத்தை உயர்தரக் கலாசாலையாக்க வேண்டுமென்று நிர்வாகிகள் நினைத்தார்கள். அதற்கு உதவியாக ‘தட்சிண கல்விச் சங்கம்’ என்ற ஒரு சங்கத்தை ஏற்படுத்தினார்கள். அந்தக் கல்விச் சங்கத்தில் சேர்ந்து, அதன் வளர்ச்சிக்காக இருபது ஆண்டுகள் உழைப்பது என்று கோகலே சபதம் எடுத்துக் கொண்டார். எவ்வளவோ துன்பங்கள் இடையிலே வந்தன. ஆயினும், அவர் தம்முடைய உறுதியை விடவில்லை. இருபது ஆண்டுகள் அந்தக் கல்விச் சங்கத்தில் ஆசிரியராக இருந்து தம்முடைய சபதத்தை நிறைவேற்றி விட்டார்.

1885-ஆம் ஆண்டு முதல் 1904-ஆம் ஆண்டு வரை அவர் அங்கேயே இருந்து அரும்பாடுபட்டு வந்தார்.

* * *

கோகலே ஓய்வு நேரங்களிலெல்லாம் படித்துக் கொண்டேயிருப்பார். ஒரு புத்தகத்தைப் படிக்கும்போது அதில் சிறந்த பகுதி ஒன்று இருந்தால் உடனே மனப்பாடம் செய்துகொள்வார். மனப்பாடம் என்றால், சிலர் நெஞ்சிலே குத்திக் கொண்டு திரும்பத் திரும்ப உரக்கப் படிக்கிறார்களே, அப்படியல்ல! ஒரு தடவை அல்லது இரு தடவை படிப்பார். உடனே, அது அவர் மனத்தில் நன்றாகப் பதிந்து விடும். கடினமான பாடல்கள், பெரிய அறிஞர்களின் சொற்பொழிவுகள் முதலியவற்றையும் மனப்பாடம் செய்து வந்தார். இதனால் அவருக்கு அழகாகவும் ஆழ்ந்த கருத்துடனும் பேசும் சக்தி உண்டானது. எவருடன் பேசினாலும் அவர் மிகவும் இனிமையாகப் பேசுவார்; ஆழ்ந்த கருத்துடன் பேசுவார்.

ஒரு நாள் கோகலேயைப் பார்ப்பதற்காக ஓர் ஐரோப்பிய நீதிபதி வந்தார். கோகலேயுடன் ஐந்து நிமிஷங்களுக்கு மேல் தங்கிப் பேச அவருக்கு நேரமில்லை. ஆகையால் ஐந்து நிமிஷத்தில் திரும்பி விடுவது என்ற எண்ணத்துடன் கோகலேயைக் கண்டார்.

கோகலே அவரை வரவேற்றுப் பேசிக் கொண்டிருந்தார். கோகலேயின் பேச்சு இனிமையாகவும், நன்றாகவும் இருந்ததால், நீதிபதிக்கு நேரம் போனதே தெரியவில்லை!

பேச்சு முடிந்து வெளியில் வந்ததும், நீதிபதி கடிகாரத்தைப் பார்த்தார். சரியாக முப்பத்தைந்து நிமிஷங்கள் பறந்துவிட்டன என்பதை அப்போதுதான் அவர் உணர்ந்தார்!

* * *

ஆசிரியர் வேலை பார்க்கும்போது, ஆங்கிலம், கணிதம், சரித்திரம், பொருளாதாரம் முதலிய பாடங்களை அவர் மிகவும் அழகாகச் சொல்லிக் கொடுப்பார்.

கோகலே சரித்திரப் பாடம் நடத்தும்போது, முன்காலத்துச் சரித்திரத்தை மட்டும் கூறமாட்டார். தற்போது நம் நாட்டுச் சரித்திரம் எப்படி இருக்கிறது என்பதையும் எடுத்துக் காட்டுவார். இப்படியாக மாணவருக்கு நாட்டுப் பற்று, தியாக உணர்ச்சி, வீரம் முதலியவற்றையும் ஊட்டி வந்தார்.

ஒரு சமயம், அவர் கப்பலைப் பற்றியும், கடலைப் பற்றியும் பாடம் நடத்த வேண்டியிருந்தது. கடலைப் பற்றி அவருக்கு நன்றாகத் தெரியும். ஆனால், கப்பலைப் பற்றி அவருக்குச் சரியாகத் தெரியாது. கப்பலில் உள்ள பாகங்களையும் அவர் பார்த்ததில்லை. அதனால், அவற்றைப் பற்றி மாணவர்களுக்குச் சரியாக விளக்கிக் கூற முடியாது என நினைத்தார். உடனே அவருக்கு ஒரு யோசனை தோன்றியது.

பூனாவிலிருந்து மறுநாளே பம்பாய்க்குப் புறப்பட்டார். அங்குள்ள துறைமுகத்துக்குச் சென்றார். துறைமுகத்தில் நின்ற கப்பலுக்குள் அனுமதி பெற்றுச் சென்றார். கப்பலின் ஒவ்வொரு பகுதியையும் நேரிலே பார்த்தார். அவற்றின் உபயோகங்களையும் விளக்கமாகத் தெரிந்து கொண்டார். பிறகுதான், பூனாவுக்குத் திரும்பினார்; கப்பலைப் பற்றி மாணவர்களுக்கு மிகவும் அழகாகவும், தெளிவாகவும் விளக்கிக் கூறினார். ஒவ்வொரு மாணவனும் அவர் கற்பித்த பாடங்களை நன்றாகப் புரிந்து கொண்டான்.

கோகலே தமக்குத் தெரியாத ஒரு பொருளைத் தெரிந்தது போல் காட்டிக் கொள்ளமாட்டார் என்பதும், எந்த வேலையைச் செய்தாலும் ஒழுங்காகச் செய்வார் என்பதும், மாணவர்களின் அறிவை வளர்க்க மனமாரப் பாடுபட்டார் என்பதும் இதிலிருந்தே தெரிகிறதல்லவா?

–நிகழ்ச்சிகள் தொடரும்…

About The Author