பேரழகி கிளியோபாட்ரா (3)

கி.மு. 51-ல் தனது 12 வயது தம்பி 13-ம் டாலமியை திருமணம் செய்து கொண்டதன் மூலம் எகிப்து பேரரசின் அரசி ஆனாள் 18 வயது கிளியோபாட்ரா. அவளது தம்பி 13-ம் டாலமி நாட்டின் அரசன் ஆனான்.

அரியணையில் ஏறிய கிளியோபாட்ரா, ஒரு நாட்டின் அரசியாக மட்டுமின்றி அழகுப் பதுமையாகவும் திகழ்ந்தாள். பருவத்தின் செழிப்பு அவளது மேனியில் கொட்டிக் கிடந்தது. அதுவரை நைல் நதியை அழகுக்கு அழகாய்ப் போற்றி வந்த எகிப்து கவிஞர்கள், அதற்கும் ஒரு படி மேலாக கிளியோபாட்ராவை புகழ்ந்து தள்ளினர்.

தனது அழகைக் கண்டு தானே வியந்து போனாள் கிளியோபாட்ரா. அந்த பேரழகுக்கு இன்னும் மெருகூட்ட தன்னைப் பலவாறு அலங்கரித்துக் கொண்டாள். ஆடை, ஆபரணங்கள் அணிவதில் தனிக்கவனம் செலுத்தினாள். அக்காலத்தில் கிடைத்த இயற்கை அழகுப் பொருட்கள் அவளை விதவிதமாக அலங்கரித்தன.

அவளது மேனியில் நறுமணப் பொருட்களின் வாசனை எப்போதும் இருக்கும். அவள் அணிந்த ஆடைகளை நவரத்தினங்கள் அலங்கரித்தன. சிறப்பான சிகை அலங்காரம் அவளது அழகு முகத்திற்கு, மேலும் அழகு சேர்த்தது. கழுத்தில் இருந்து மூக்குவரை மறைக்கும் முகவலைகள் அவளது அழகை மேலும் அதிகரித்தது.

அளவாய்த் திரண்டிருந்த மார்பகங்களும், உதட்டுச்சாயம் இல்லாமலே லேசாக எப்போதும் சிவந்திருந்த உதடுகளும், வில் போன்ற புருவத்தில் இருந்து புறப்பட்ட பார்வை அம்புகளும் அவளுக்கே உரிய அடையாளமாகத் திகழ்ந்தன.

அவள் எங்கு புறப்பட்டுச் சென்றாலும், சேவை செய்யும் அழகான இளம்பெண்களும் பின்தொடர்ந்தனர். அந்த சேவைப் பெண்களுக்கு மத்தியில் நடந்து வந்த கிளியோபாட்ரா சாட்சாத் தேவதை போலவே தெரிந்தாள். இவ்வாறாக, எகிப்து மக்களின் தெய்வமாகவும் தேவதையாகவுமே தன்னைக் காட்டிக்கொண்டாள் கிளியோபாட்ரா.

கிளியோபாட்ரா, கிரேக்க காதல் கடவுளான க்யூபிட் போலவே இருந்தாள். சில நேரங்களில் எகிப்தைக் காக்கும் பிரதான கடவுளான இசிஸ் மற்றும் டார்சஸ் நகரின் முக்கிய காதல் பெண் தெய்வமான அப்ரோடைட் ஆகிய இரு தெய்வங்களின் கலவை போலவும் தெரிந்தாள். நாட்கள் செல்லச் செல்ல அவளது அழகும் மேலும் மேலும் அதிகரித்துக்கொண்டே போனது.

இப்படியெல்லாம் கிளியோபாட்ரா மேனி அழகில் ஜொலிக்க அவள் தினமும் குளித்தவிதம்தான் காரணம் என்று இன்றுவரையில் கூறுவோர் உண்டு. அவர்கள் சொல்லும் காரணம், கிளியோபாட்ரா தினமும் கழுதைப் பாலில் குளித்தாள் என்பதுதான்-. ஆனால், இது எந்த வகையில் உண்மை என்பதற்கு ஆதாரங்கள் இல்லை.

ஆனாலும், அது உண்மையாக இருக்கவும் வாய்ப்புகள் உள்ளன. ஏனென்றால், அந்தக் காலத்தில் எகிப்தில் கழுதைகள் பிரபலமாக திகழ்ந்தன. அவர்களது மறு ஜென்ம நம்பிக்கைக்கு கழுதைகளே முக்கிய காரணமாகத் திகழ்ந்தன.

இறந்தவர் உடலைப் பாதுகாத்து வைத்திருந்தால், அந்த உடல் மறு ஜென்மத்தின்போது உதவும் என்றும், ஆவிகள் இருப்பது உண்மை என்றும் அக்கால எகிப்தியர் நம்பினர். அதன் காரணமாக, ஒருவர் இறந்துவிட்டால், அவரது கல்லறைக் கிடங்கில் ஒரு கழுதையின் சிலையை செய்து வைக்கும் பழக்கம் அவர்களிடத்தில் இருந்தது. மறு ஜென்மத்தில் இந்தக் கழுதை இப்போது இறந்தவருக்கு உதவும் என்பது அவர்களது அசைக்க முடியாத நம்பிக்கையாக இருந்தது.

இப்படி, எகிப்தியர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருந்த கழுதை, கிளியோபாட்ராவின் அழகு ரகசியத்திலும் ஒளிந்திருப்பதில் வியப்பில்லை என்று கருதவும் இடம் ஏற்படுகிறது. தனது அழகுக்காக குங்குமப்பூவையும் அவள் பயன்படுத்தினாள் என்ற கருத்தும் உள்ளது.

அழகு மட்டுமின்றி, பல்வேறு திறமைகளும் கிளியோபாட்ராவிடம் ஒளிர்ந்தன. அவளது பேச்சில் இனிமை மட்டுமின்றி ஒருவித கவர்ச்சியும் சேர்ந்தே வந்தது. கற்பனை வளமும் அவளிடம் நிறைந்திருந்தது. உணர்ச்சிகரமாக அவள் பேசும்போது, துப்பாக்கியில் இருந்து பாயும் குண்டுகள் போல அவளது வார்த்தைகள் வேகமாகவும் ஆக்ரோஷமாகவும் வந்து விழுந்தன.

தாய்மொழியுடன் மேலும் சில மொழிகளையும் கற்று வைத்திருந்தாள். 9 மொழிகள் வரை கிளியோபாட்ராவுக்கு பேசத் தெரியும் என்பது பலரது கருத்து. எகிப்தை ஆண்ட டாலமி வம்ச அரசர்களுக்கு எகிப்திய மொழி தெரிந்திருக்கவில்லை. ஆனால், கிளியோபாட்ரா அதனைக் கற்று வைத்திருந்தாள்.

உலோகங்களைப் பொன்னாக மாற்றும் ரசவாத வித்தையும் அவளுக்குத் தெரியும் என்று கூறுவோரும் உண்டு.

இப்படி பல்வகை திறமைகளுடனும், சாதுரியத்துடனும் செயல்பட்ட கிளியோபாட்ராவுக்கு, அவளது அமைச்சர்களாலேயே முதல் ஆபத்து வந்தது.

(இன்னும் வருவாள்…)

About The Author

1 Comment

  1. uma ananthi

    கிளியோபாட்ராவின் அழகு ரகசியம் மட்டுமல்ல, அவளது பல மொழித் திறமையும் வியக்க வைக்கிறது.

Comments are closed.