பொருத்தமான தாயத்து

தேவாலயத்தின்
ஞாயிற்றுக்கிழமை
பூசை முடிந்து
தெருவுக்குள்
இறங்கினால்
நேராக
கோவில்

வாடகை வாகன ஓட்டுனரிடம்
வீட்டுக்குப் போகச் சொன்னால்
அவரோ தன் இஷ்ட தெய்வங்களை தானே
அறிமுகப்படுத்தும் ஆர்வத்தில்

வாகனத்தினுள்ளிருந்த
கண்ணாடியில்
தொங்கின
நூலில் கட்டிய
பன்றியிறைச்சியைப்போல
அவரது புத்தர்கள்
பொய்யான
வாத்தியங்களை
இசைத்தபடி
என் பின்னால்
பீங்கான் தேவதைகள்

போனது
பொறுமை
என்னுடன்
பொருந்தும்,
பொறுமைதரும்
வீர்யம்மிகு
தாயத்தை
கேட்டேன்
அவரிடமே

முன்னிருக்கையின்
முன்னிருந்த
மேடையினின்று
ஒரு படத்தை
காட்டினார்
‘இது தான் என்னை
பாதுகாப்பாக வீடு சேர்க்கிறது’

இரண்டு சிறார்கள்
சிரித்தனர்
எனைப்பார்த்து
ஏழுவயதுக்கு
மேலிருக்காது
அதை அவரிடம்
மெதுவாக
திரும்பக் கொடுத்தேன்
அதைவிட
அதிக சக்தி வாய்ந்த
கடவுள் என்னிடம் இல்லாததால்

(சொற்கள் தோற்கும்பொழுது – மின்னூலில் இருந்து)

About The Author