போன்சாய் (5)

கடந்த வாரம் போன்சாயை வளர்ப்பது எப்படி, பராமரிப்பது எப்படி என்பவற்றைப் பார்த்தோம். இப்பொழுது, போன்சாய் வளர்ப்பில் செய்யக்கூடியவை எவை, கூடாதவை எவை எனப் பார்ப்போம்.

செய்யக்கூடியவை:

•அதிகப்படியான நீர் வெளியேற அடியில் ஓட்டை உள்ள (drainage hole) தொட்டியையே பயன்படுத்த வேண்டும்!
•சூரிய ஒளி, காற்று, மழை, பனி இவையெல்லாம் நன்கு கிடைக்குமிடத்தில் தொட்டியை வைக்க வேண்டும்!
•சிறிய இலைகள் கொண்ட மரங்கள், போன்சாய்க்கு ஏற்றவை.
•நம் நாட்டுத் தட்பவெப்ப நிலையில் வளரும் தாவரங்களைத் தேர்ந்தெடுத்தால், வளர்ப்பது எளிது.
•மரத்தின் வளர்ச்சியைப் பொறுத்து, குறிப்பிட்ட இடைவெளியில் மறுநடவு செய்ய வேண்டும்!
•தினமும் நீர் வார்ப்பதோடு தேவையான இடைவெளியில் உரமிடுவதும் அவசியம்!
•பூச்சிமருந்து மூலம் நோய்த் தாக்குதலிருந்து பாதுகாக்க வேண்டும்!
•சரியான சமயத்தில் கம்பி கட்டுதல், கத்தரித்தல் போன்ற பணிகளைச் செய்ய வேண்டும்!
•புதிதாக முயல்பவர்களுக்கு அலுமினியக் கம்பி ஏற்றது. கம்பியை ஆறு அல்லது எட்டு மாதங்களுக்குப் பிறகு கட்டர் மூலம் நீக்கி விட வேண்டும்!
•கத்தரிக்கும் ஆயுதங்களைக் கூர்மையாய் வைத்திருங்கள்!
•மரத்தின் தொடக்க வளர்ச்சியைக் கவனித்து அதற்கேற்பப் பாணியைத் தேர்ந்தெடுத்தல் நலம்.
•மறுநடவு செய்த போன்சாய் புதுத் தொட்டியில் வேர்ப் பிடிக்கும் வரை நிழலில் வைத்துப் பராமரிக்க வேண்டும்!

செய்யக்கூடாதவை:

•பெரிய இலைகள் உள்ள மரவகைகளைத் தேர்ந்தெடுக்கக் கூடாது!
•தேவைக்கதிகமாக நீர் ஊற்ற வேண்டாம்!
•கடுமையான கோடையிலும், மழைக்காலத்திலும் உரமிடுதலைத் தவிர்க்க வேண்டும்!
•மறுநடவு செய்த போன்சாய் புது வேர்விட்டுத் துளிர்க்கும் வரை உரமிடக்கூடாது!
•மரம் நோயுற்ற சமயத்தில் உரமிடுதலைத் தவிர்க்க வேண்டும்!
•குளிர்காலத்தில் கம்பி கட்டக் கூடாது!
•சுற்றப்பட்ட கம்பி அதிக இறுக்கமாகமோ, தளர்வாகவோ இருக்கக் கூடாது!
•இரும்பின் துரு கிளையில் படியுமென்பதால் கம்பி கட்டுதலுக்கு இரும்புக் கம்பியைத் தவிர்ப்பது நல்லது.
•நீண்ட காலம் கம்பியை மரத்திலேயே விட்டு வைக்கக் கூடாது!
•கண்கவர் வண்ணத்தில் தொட்டி கூடாது!
•தொட்டியின் அடிப்பாகம் மண்ணில் படும்படியாக வைக்கக்கூடாது!

அழகுக் கலையான போன்சாய், தற்போது வருமானம் கொடுக்கும் தொழிலாகவும் மாறி வருகின்றது. இந்தியாவில் டெல்லி, மும்பை, சென்னை போன்ற பெரு நகரங்களில் போன்சாய் விற்பனை சூடு பிடித்துள்ளது.

"போன்சாய் மூலம் லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்க முடியும். ஆனால், குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் கழித்துத்தான் போன்சாய் முழு வடிவம் பெறும் என்பதால் அதுவரை காத்திருக்க வேண்டும்" என்கிறார் விரிக்ஷா கிளப்பைச் சேர்ந்த உமா பாண்டியன்.

போதுமான இடவசதி இல்லாத நகர மக்களும், மொட்டை மாடியில் தொட்டிகளில் மரம் வளர்த்துத் தம் ஆசையைப் பூர்த்தி செய்து கொள்ளலாம்.

ஜப்பானில் பிறந்து அமெரிக்காவில் குடியேறிய ஜான் ஒய் நாகா (JOHN Y NAKA) என்பவர் அமெரிக்கப் போன்சாயின் தந்தை எனப் போற்றப்படுகிறார்.

இவர் எழுதிய போன்சாய் டெக்னிக்ஸ் – 1 & 2 (Bonzai Techniques I & II) என்ற புத்தகங்கள் உலகின் பல்வேறு மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளன. பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள இவரது போன்சாய் ஓவியங்கள் உலகப்புகழ் பெற்றவை.

தாம் வளர்த்த போன்சாய்களும் கருத்தரங்குகளில் ஆர்வலர்கள் சமர்ப்பித்த செடிகளும் சில ஆண்டுகளுக்குப் பிறகு எப்படித் தோற்றமளிக்கும் என்பதைத் தம் மனக்கண்ணால் அனுமானித்துத் துல்லியமாக இவர் வரைந்த மாதிரிச் சித்திரங்கள் (sketches) இவரது திறமையைப் பறைசாற்றுகின்றன.

இத்தொடரில் போன்சாய் பற்றிய குறிப்புகளை ஓரளவுக்குக் கொடுத்துள்ளேன். மேலும் பல விவரங்கள் இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றன.

Bonsai Culture — Leila Dhanda என்னும் புத்தகமும் The Japanese Art of Miniature Trees and Landscapes — Yoshimura and Halford. என்னும் புத்தகமும் புதிதாக முயல்பவர்களுக்குச் சிறந்தவை.

ஏற்கெனவே சொன்னது போல் "தரையைத் தொடாத தருக்கள்" என்ற புத்தகத்திலும் போன்சாய் வளர்ப்புப் பற்றிய விவரங்கள் விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன.

ஏட்டுச்சுரைக்காய் கறிக்குதவாது என்பது போல போன்சாய் வளர்ப்பில் தேர்ச்சி பெற இப்புத்தகங்கள் மட்டும் போதா. வளர்க்கும்போது நமக்கேற்படும் அனுபவங்களே அழகான பல போன்சாய்களை உருவாக்கப் பெரிதும் உதவும்.

தனிமையைப் போக்கவும், டென்ஷனைக் குறைக்கவும் உதவும் உயிரோட்டமுள்ள இந்த அழகுக்கலை மூலம், வீட்டில் போன்சாய் வளர்த்துப் புத்துணர்வு பெறுங்கள்! இல்லத்தில் மன அமைதியும் மகிழ்ச்சியும் மலர்ந்து மணம் வீசும்!

இத்துடன் இத்தொடர் முடிவடைகிறது.

நன்றியுடன்,
கலையரசி

About The Author