போரும் யோகாவும்!

அமெரிக்க ராணுவம் இப்போது யோகாவின் மீது முழு கவனத்தைத் திருப்பி உள்ளது.

காரணம்?

ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போர்களில் மூளையில் காயம் பட்டுத் திரும்பிய வீரர்களுக்கும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட வீரர்களுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட வேண்டி உள்ளது.

ஆகவே எல்லா விதமான மாற்று சிகிச்சை முறைகளையும் ஆராய அமெரிக்க அரசு 40 லட்சம் டாலர் (சுமார் 20 கோடி இந்திய ரூபாய்கள்) நிதி உதவி அளிக்க முன் வந்துள்ளது. இதில் பாதிரிகளின் ஆன்மீக உபதேசம், மகரிஷி மகேஷ் யோகியின் ஆழ்நிலை தியானம், யோகா சிகிச்சை முறைகள் முக்கிய இடம் பெறும். இதோடு, பயோ-எனர்ஜி எனப்படும் க்யி காங் (Qi gong), ரேகி, தூர சிகிச்சை (distant healing) ஆகிய முறைகளும் ஆராயப்படும்.

3300 வீரர்களுக்கு மூளைக் காயம் ஏற்பட்டுள்ளது. காயம் பட்ட மொத்த வீரர்களில் 17 சதவிகிதம் பேருக்கு பிடிஎஸ்டி எனப்படும் post-traumatic stress disorder ஏற்பட்டுள்ளது. இவர்கள் அனைவருக்கும் ஆயுள் காலம் முழுவதும் சிகிச்சை அளிக்க வேண்டுமென்றால் அதற்கு சுமார் 3500 கோடி டாலர் செலவாகும் என்று கொலம்பியா பல்கலைக் கழக ஆய்வு ஒன்று கூறுகிறது. ஆகவேதான் அமெரிக்க அரசு எல்லா வித மாற்று சிகிச்சை முறைகளையும் ஆராயத் தீர்மானித்துள்ளது.

இசை சிகிச்சை, மிருகங்கள் மூலமாக நோய் போக்கல், நடன அசைவுகள் சிகிச்சை, அக்குபங்சர், ஈஎம்டிஆர் எனப்படும் (Eye Movement Desensitization and Reprocessing) கண் அசைவு மூலம் சிகிச்சை போன்றவற்றிற்கும் இன்னும் கொள்கை அளவில் இருக்கும் பல சிகிச்சை முறைகளுக்கும் கூட மூன்று லட்சம் டாலர் ஆய்வு நிதியாகக் கிடைக்கும்.

1973ல் யோகா சிகிச்சை பற்றி அமெரிக்கா ஆய்வு நடத்தியது. சென்ற வருட பட்ஜெட்டில் 20 லட்சம் டாலர் பிரார்த்தனை மூலம் ஏற்படும் பலன்கள் பற்றிய ஆய்வுக்காக ஒதுக்கப்பட்டது. அமெரிக்க ராணுவத்தில் உயர்நிலை அதிகாரிகளான ஃப்ளாக் லெவல் அதிகாரிகள் (flag-level officers) யோகாவைப் பின்பற்றி பலன் அடைந்து வருவது குறிப்பிடத் தகுந்த விஷயம்! யோகா மனநலம் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு கார்டிஸால் போன்ற மன அழுத்த ஹார்மோன் அளவைக் (ஸ்ட்ரெஸ் ஹார்மோன்) குறைக்கிறது. இப்போது ஸ்கிட்ஸோப்ரெனியா (schizophrenia) என்னும் மன நோயைத் தீர்க்க யோகாவை எப்படிப் பயன்படுத்துவது என்பது தீவிரமாக ஆராய்ந்து வரப்படுகிறது.

மேலே கண்ட விவரங்களைத் தருபவர் அமெரிக்கரான நோவா ஷாசட்மேன் என்பவர். இவரது மனைவி எலிஸபத்தான் இந்த ஆய்வை நடத்தி வருபவர். ஆனால் அவர் ராணுவம் தரும் நிதி உதவியை ஏற்காமல் சுயமாக இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார்.

இதற்கிடையில் டெக்ஸாஸ் பல்கலைக் கழகத்தில் ஆண்டர்ஸன் கான்ஸர் சென்டரில் டாக்டர் லோரென்ஸோ கோஹன் திபெத்திய யோகா முறைகளைப் பின்பற்றும் கான்ஸர் நோயாளிகள் நன்கு தூங்குகின்றனர் என்கிறார். சாதாரணமாக கான்ஸர் நோயாளிக்கு தூக்கமே வராது. அவர்களுக்கு யோகா ஒரு வரப்பிரசாதம் என்கிறார் கோஹன்.

11ம் நூற்றாண்டு திபெத்திய ஓலைச் சுவடிகளில் குறிப்பிடப்பட்டுள்ள ட்ஸா லங் மற்றும் ட்ருல் கொஹர் ஆகிய உத்திகளே இந்த அமைதியான உறக்கத்தைத் தருகின்றன. ஆழ்ந்து மூச்சு விடுவது, மனதை ஒரு நிலைப்படுத்துவது, அதன் சலனத்தை நிறுத்துவது ஆகியவை இந்த உத்தியில் அடங்கும். கிளைக்குக் கிளை தாவும் குரங்கு போல உள்ள மனத்தை ஒரு நிலைப் படுத்த வல்லது யோகாஎன்பதை மேலை உலகம் அறிவியல் பூர்வமாகவும் அனுபவ பூர்வமாகவும் கண்டு பிடித்து விட்டது!

மேலை நாட்டு மருத்துவர்களும் விஞ்ஞானிகளும் இப்போது கண்டு பிடித்துள்ள உண்மை – ஒரு நாளைக்கு 45 நிமிடங்கள் யோகா பயிற்சி செய்வதால் ஏற்படும் பலன்கள் அலாதியானவை என்பதுதான்!

About The Author