மடை திறந்து… (20)

என்னப்பா, நாமெல்லாரும் எப்போதும் போல நலம்தானே?

யஷாஷ்வினி (பேர் ரொம்ப அழகு) நிலாக்குழுவுக்கு புது ரத்தம் பாய்ச்சிருக்காங்க. இணைஞ்ச ஒரு வாரத்திலேயே எங்களோட சுமையை நிறையக் குறைச்சதோட செய்ய முடியாம விட்ட பகுதிகளையெல்லாம் திரும்பக் கொண்டு வரது பற்றியும் பேச ஆரம்பிச்சிருக்காங்க. அதோட, தாமரை இல்லத்துப் பெண்களுக்கு நான் செய்ய நினைச்சு நேரமில்லாம முடங்கிக் கிடந்த வேலைகளையெல்லாம் கடகடன்னு செய்ய ஆரம்பிச்சிட்டாங்க. வாழ்க! அவங்ககிட்டே பேசும்போது நம்ம குழுவில முன்னாடி இருந்த காயத்ரி எனக்கு நினைவுக்கு வர்றாங்க. பேச்சு, நடவடிக்கை எல்லாம் அப்படியே டிட்டோ. அவங்களை ஜி3ன்னுதான் நாங்க கூப்பிடுவோம். ரொம்ப நெருக்கமா இருந்தவங்க திடீர்னு விலகிட்டாங்க. விலகின பின்ன தொடர்பு கொள்ளவும் இல்லை. உங்களுக்கு நினைவிருக்கலாம் – நிறைய எழுதிருக்காங்க நிலாச்சாரல்ல. அவங்களும் எங்கிருந்தாலும் வாழ்க!

நேத்திக்கு சில தாமரை இல்லத்துப் பெண்களோட பேசிட்டிருந்தேன். அதில செல்வின்னு ஒரு பொண்ணு ரொம்ப இம்ப்ரஸ் பண்ணினாங்க. பி.ஏ ஆங்கில இலக்கியம் இரண்டாவது வருஷம் படிக்கிறாங்க. நிறைய தெரிஞ்சிக்கணும்கற ஆர்வம் இருக்கு. அவங்களுக்கு ஒலிநூல்கள் ஏற்பாடு செஞ்சிட்டிருக்காங்க யஷ். வேற சில பேர் தமிழ் இலக்கிய நூல்கள் கேட்டிருந்தாங்க. நல்ல தமிழ் நூல்களை வாசிச்சு பதிவு செஞ்சு தர யாராவது தயாரா இருக்கீங்களாப்பா? இந்திரா மாமல்லன், என்ன நினைக்கறீங்க இந்த ஐடியா பற்றி?

தாமரைப் பெண்களுக்காக மடைதிறந்து ஒலி வடிவில செய்யலாமான்னும் யோசிச்சிட்டிருக்கேன். போன வாரம் தொ.நு காரணங்களால மடைதிறந்து தாமதமாப் போச்சு. இதில காமெடி என்னன்னா என்ன செய்யறதுன்னு முழிச்சிட்டிருந்தப்ப பிரச்சினை தானா சரியாப் போச்சு. பிரபஞ்சத்துக்கு வந்தனம் 🙂
நான் மடைதிறந்து எழுதாமப் போகலாம்னு சொன்னதுக்கு நிறையப் பேர் வருத்தம் தெரிவிச்சிருந்தீங்க. நன்றி. கவலைப்படாதீங்க

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கிறது
எது நடக்கவேண்டுமோ அதுவும் நன்றாகவே நடக்கும்.

***

என்னோட குட்டியஸ்ட் தம்பி (சித்தி பையன்) ஃபேஸ்புக்ல வந்தான். ‘என்னட்டா பெரிய மனுஷா, எப்படி இருக்கே’ன்னு கேட்டான். "என்னக்கா ரொம்ப நாளா ஃபோன் பண்ணவே இல்லை"ன்னான். எனக்கு ஆச்சரியமான ஆச்சரியம். ஏன்னா நான் அடிக்கடி தொலை பேசின காலங்கள்ல எனக்கு ஒரு கையில ஓசை எழுப்ப முயற்சி செய்யறது போலத்தானிருந்தது. ஓசை வரலைன்னுதும் தன்னால சலிச்சுப் போச்சு. அதை அவன்கிட்டே சொன்னேன். ஒரு பக்கமா இருந்தா எந்த உறவுமே நிலைக்காது. உறவு நீடிக்கணும்னா இரண்டு பக்கத்திலர்ந்தும் விருப்பம் இருக்கணும். முயற்சி கூட தேவை இல்லை. ஆனா விருப்பம் இருக்குங்கறதைப் புரிய வைக்கறது முக்கியம். எனக்கு சில நண்பர்கள் இருக்காங்க. அவங்ககிட்டே என்னோட செயல்களுக்கு நான் எந்த வித விளக்கமும் தரத் தேவையில்லை. அவங்களோட அஞ்சலுக்கு பதில் சொல்லத் தேவையில்லை. அடிக்கடி பேசணும்னு கூடத் தேவையில்லை. ஆனா எங்களுக்குத் தெரியும் – வி கேர். இந்த மாதிரி உறவுகள் அபூர்வம். கிடைச்சா அதிர்ஷ்டம்தான். ஆனா பொதுவா உறவுகள் நீடிக்க பரஸ்பர விருப்பத்தை தெளிவு படுத்தறது அவசியம்கறது என்னோட அனுபவம்.
நிலாச்சாரலுக்கும் வாசகர்களுக்கும் இடையே இருக்கற உறவை பலப்படுத்த எங்களுக்கிருக்கற விருப்பத்தாலதான் நேயம் உருவாச்சு. உங்களுக்கும் இந்த உறவில விருப்பமிருந்தா இணைஞ்சிக்கலாம்:

http://groups.google.com/group/neyam?pli=1

***

நான் முன்னமே உங்ககிட்டே க்ரையான் பற்றி சொல்லிருக்கேன். க்ரையானோட இன்னொரு சொற்பொழிவு சமீபத்தில கேட்டேன். கடவுளைப் பற்றி க்ரையான் சொல்லிருந்த விளக்கம் ரொம்ப அற்புதமா இருந்தது… நீங்களும் இங்கே கேக்கலாம்:

http://www.kryon.com/cartprodimages/download_Kaz_1_11.html

ஆடியோ தரவிரக்கமாக நாலைந்து நிமிடங்களாகலாம்.

ஒரு நண்பருக்கு செஷன் தந்தப்போ ஒரு விஷன் வந்தது. அதில பிள்ளையார் படம் அதுக்கு முன்னால வழக்கம் போல எலி, லட்டு. ஆனா ஃபோகஸ் எலிலயும் லட்டிலேயுமிருந்தது. வந்த செய்தி என்னன்னா… கடவுளும் லட்டும் அங்கே இருந்தாலும், எலியோட கவனம் லட்டுலதானிருக்கு. அது போலத்தான் பல சமயம் பிரபஞ்சம் எவ்வளவோ நமக்காக வச்சிருந்தாலும் நம்மோட கவனம் அற்ப விஷயங்கள்லதானிருக்கு. அந்தப் படத்தை எத்தனையோ முறை நான் பார்த்திருக்கேன். ஒரு தடவை கூட எனக்கு இந்த மாதிரி தோணினதில்லை!

இன்னொரு முறை இன்னொரு நண்பருக்காக வந்த விஷனும் சுவாரஸ்யமானது. ஒரு பெரிய யானையை சங்கிலியால ஒரு தூண்ல கட்டிருக்காங்க. அந்த யானை தடியான சங்கிலியை அறுக்கறதுக்கு பதிலா அந்தத் தூணையே முட்டிச் சாய்ச்சு விடுதலையாகுது. அந்த நண்பர் தீர்வைப் பெற கொஞ்சம் மாத்தி யோசிக்கணும்கறதுதான் செய்தி. எனக்கும் அந்த செய்தி பயனுள்ளதா இருந்தது.

***

ஆற்றல் சிகிச்சைகள்ல இருக்கற பல விதங்கள்ல டாக்டர் ஷாவோடது வித்தியாசமான முறை. டாவோ பாடல்கள் மூலமா சுகம் பெறலாம்னு சொல்றார் அவர். வார்த்தைகள்ல இருக்கற ஒலி அதிர்வுகள் சுகத்தைத் தருதுங்கறதுதான் அடிப்படைக் கோட்பாடு. குறிப்பிட்ட பிரச்சினைகளுக்கான பாடல்களை இங்கே இலவசமாவே தர்றார்:

http://powerofsoul.com/soulpowermedia/daily-tao-song/

காசா பணமா, முயற்சி செய்துதான் பார்க்கலாமே!

அமைதியான ஆழ்ந்த தூக்கத்துக்கு கீழே இருக்கற சுட்டில இருக்கற மூன்று பயிற்சிகள் நான் செய்யறேன். உங்களுக்கும் பயன்படலாம். ரொம்ப எளிமையான பயிற்சிகள்தாம்:

http://www.tap4health.com/energy-exercises-beat-insomnia-sleep-problems-thinking-too-much/

Deva Premal என்கிற பெண்மணி பல சமஸ்கிருத மந்திரங்களுக்கு இசையமைச்சு ஆல்பமா வெளியிடறாங்க. எனக்கு ரொம்ப ரொம்பப் பிடிச்சிருக்கு… அதிலருந்து ஒண்ணு இங்கே:

http://www.youtube.com/watch?v=l5-WaEwrXak

இந்த வாரம் சுட்டியா போட்டு பக்கத்தை நிறைச்சாச்சோ… எனக்குத் தெரிஞ்சதை எல்லாம் சொல்லணும்கற ஆவல்தான்.

கீதா,
நான் சொல்றதைப் புரிஞ்சிக்க முடியாத தூரத்தில இருக்கறதா சொன்னீங்க இல்லையா… சிலருக்குப் புரிஞ்சிக்கற அவசியமில்லை. சிலபேர் இயற்கையிலேயே பிரபஞ்சத்தோட இழைஞ்சிருப்பாங்க. இது எதனாலங்கறதை வேறொரு சமயம் பார்ப்போம். நீங்களும் அப்படி ஒருத்தரா இருக்கலாம். அதனால எவ்வளவு புரியுதோ அவ்வளவு போதுமானது…

உங்களுக்குத் தெரியுமா, 2009 ஜூன்ல எனக்கு வந்த செய்தி நான் நிலாச்சாரலை நிறுத்திடுவேன்கறது. அப்போ எனக்கு துளி கூட அப்படி எண்ணமில்லை. பயங்கர அதிர்ச்சியாயிடுச்சு. ஆனா 2010 ஆரம்பத்திலருந்தே பிரச்சனைகள் ஆரம்பிச்சிடுச்சு. ஆனாலும் என்னால விட்டுக் கொடுக்கவே முடியலை. ரொம்ப கஷ்டப்பட்டேன். போன வாரம் அறிமுகப்படுத்தின சுதந்திர உத்தி (இஎஃடி) மூலமாத்தான் அந்தத் தளையிலேர்ந்து விடுபட்டு ஜூலைல நிறுத்தப் போறதா அறிவிச்சோம். அப்பறம் தொடர்ந்து யாராவது கொஞ்சம் கொஞ்சம் முயற்சி போட்டு ஏதோ ஓடிட்டே இருக்குது. இதிலருந்து எனக்கு நாமெல்லாரும் சேர்ந்துதான் நம்ம வாழ்க்கையை உருவாக்கறோம்கற நம்பிக்கை வலுப்பட்டிருக்கு. முதல்ல எனக்கு செய்தி வந்தப்போ நாம போயிட்டிருந்த பாதை நிலாச்சாரலை மூடற இடத்துக்குக் கொண்டு போய் விட்டிருக்கும். ஆனா வாசகர்களோட விருப்பமும் சில தொண்டர்களோட முயற்சியும் ஒரு புதிய பாதையை உருவாக்கி நிலாச்சாரல் தொடர்றதுக்கான சூழலை ஏற்படுத்திடுச்சு. அது மாதிரிதான் நம்ம வாழ்க்கையும். நம்மோட விதி கல்லுல எழுதி வைக்கப்படலை. நாம விருப்பப்பட்டா மாத்திக்கலாம்னு கிரையான் சொல்றார். மரண தேதிகளைக் கூட மனிதர்கள் விருப்பப்பட்டால் மாத்திக்கலாம்னு க்ரையான் சொல்றது நம்ப முடியாதது போலத்தான் எனக்கு இருந்தது. ஆனா இப்போ இதுவும் உண்மையா இருக்கலாம்னு தோண ஆரம்பிச்சிருக்கு.

யாரோ என்னை சமீபத்தில கேட்டாங்க… "நீங்க இதையெல்லாம் நம்பறீங்களா?"
நம்பறேனோ இல்லையோ… இப்படி ஒரு சாத்தியக் கூறு இருக்குன்னு கேள்விப்படும்போதே மனசில ஒரு தெம்பு வருதில்லையா? ‘வாழ்க்கையை முன்னாலேயே கடவுள் எழுதிட்டார், நாம வெறும் பொம்மைகள்’ங்கறதும் ஒரு நம்பிக்கைதானே? அது உண்மைன்னு யாராலயாவது நிரூபிக்க முடியுமா? அந்த நம்பிக்கை எனக்குத் தராத சக்தியை என்னோட வாழ்க்கையை நானே மாற்றியமைச்சுக்க முடியும்கற நம்பிக்கை தருமானால், நான் எதைத் தேர்ந்தெடுப்பேன்?

சரிப்பா… நீங்களும் யோசிச்சுப் பாருங்க…

அடுத்த வாரம் பார்க்கற வரைக்கும் ஒரு பெரிய அன்பம் உங்க எல்லாருக்கும்…

அபரிமிதமான அன்புடன்,
நிலா

About The Author

3 Comments

 1. vimalaramani

  இந்த வாரம் மடை மிக நன்றாகத் திறந்துள்ளது.மகிழ்ச்சி
  ந்ட்பு என்பது கணக்கல்ல போடுவதற்கு சரித்திரம் அல்ல படிப்பதற்கு அது ஒரு ரசாயனம்.அதன் கலவைகல் சரியாக இருந்தால் தான் முடிவு சரியாக இருக்கும்
  பாராட்டுக்கள்
  விமலா ரமணி

 2. கீதா

  நிலா, நான் என் மனதில் தோன்றியதைச் சொன்னேன். அதைச் சரியாகப் புரிந்துகொண்டதற்கு மிக நன்றி. தாமரை இல்லப் பெண்களுக்கு தமிழ் இலக்கிய நூல்கள் வாசித்து ஒலி வடிவில் அனுப்ப என்ன செய்யவேண்டும்? எந்த முறை எளிதாக இருக்கும்? என்ன மாதிரியான நூல்கள் வாசிப்புக்கு எதிர்பார்க்கிறீர்கள்?

  யஷாஷ்வினிக்கு என் பாரட்டுகள்.

 3. sugu

  Very good work Nilla, like always, I am also willing to work for ur audio book making, Let me know the way to reach u and abt next step.

Comments are closed.