மந்திரச் சாதக்கிண்ணம் (1)

நீயூ என்றொரு மூதாட்டி இருந்தாள். அநாதை விடுதியிலிருந்து மூன்று பதினோரு வயது சிறுவர்களைத் தத்தெடுத்தாள். அவர்களின் பெயர்கள் லான் துவா, ஸ்வா ஜோவ் மற்றும் கோவ் சர். சீமாட்டி நீயூ லான் துவா மற்றும் ஸ்வா ஜோவ் இருவரையும் உயர்ரக ஆடைகள் அணிவித்து முறையான கல்வி பெறவென்று பள்ளிக்கு அனுப்பினாள். கோவ் சர் கண் பார்வையற்றவன். ஆகவே, அவனை மட்டும் ஒரு வேலைக்காரனைப் போல நடத்தினாள். அவனை மட்டும் பழைய கிழிந்த ஆடைகளை அணிவித்து பட்டினி போட்டாள். மூதாட்டியின் ஏவல்களைச் செய்வது தான் அவனின் வேலை. முறையான கல்வி அவனுக்கு மறுக்கப் பட்டது.

ஒரு நாள் இரவு எல்லோரும் உறங்கிக் கொண்டிருந்தார்கள். அப்போது, அரிசி சேமித்திருந்த கிடங்கு அறைவியில் தீப் பிடித்தது. அது மெதுவாக வீட்டிற்கும் பரவியது. கோவ் சர் எல்லோரையும் எச்சரித்துக் கத்தினான். சத்தம் கேட்டு லான் துவா மற்றும் ஸ்வா ஜோவ் விழித்துக் கொண்டனர். எழுந்து வீட்டை விட்டு வெளியேறினர். மூதாட்டி நீயூவுக்கு வேகமாக நடக்க முடியாது. இது கோவ் சர்ருக்குத் தெரியும். கோவ் சர் அவளை நோக்கிப் போனான். அதற்குள் நெருப்பு அவர்களைச் சூழ்ந்து கொண்டது.

"சீக்கிரம், சீமாட்டி நீயூ! உங்களின் கண்களே எனக்கு வழி காட்டட்டும்." கோவ் சர் மூதாட்டி நீயூவைத் தன் முதுகில் தூக்கிக் கொண்டான். மூதாட்டி ஆபத்திலிருந்து தப்ப அவனுக்கு வழி சொன்னாள்.

"நீ உன் உயிரைப் பணயம் வைத்து என்னைக் காப்பாற்றி இருக்கிறாய். நீ மிகவும் துணிச்சலானவன். சுயநலமற்றவனும் கூட. சாதக் கிண்ணத்தைப் பெற மிகத் தகுதியான ஆளை நான் அறிந்து கொண்டேன். இப்போது தான் எனக்கு நிம்மதி", என்று சொன்னாள் முதாட்டி. பிறகு, அவள் கோவ் சர்ரிடம் சாதக் கிண்ணத்தைக் கொடுத்தாள். "இந்த சாதக் கிண்ணம் மந்திர சக்தி வாய்ந்தது. இது நாம் நினைப்பதைச் செய்யும். வருடத்திற்கு ஒரு முறை அந்த சக்தியைப் பயன்படுத்தலாம். சாதக் கிண்ணம் உடைந்து விட்டால், அது வரை நடந்த மந்திரமெல்லாம் மறைந்து போகும். ஆகவே, கவனமாக இரு. புத்திசாலித்தனத்துடன் பயன்படுத்து", என்று அறிவுரை சொல்லிவிட்டு மூதாட்டி தன் கடைசி மூச்சை விட்டாள்.

லான் துவா மற்றும் ஸ்வா ஜோவ் மூதாட்டியைப் பற்றி ஒரு கவலையும் கொள்ளவில்லை. கோவ் சர் தான் மூதாட்டியை முறையாகப் புதைத்தான். புதைப்பதற்கு முன்பு அவன், "என்னால் பார்க்க முடிந்தால் எப்படியிருக்கும்! ஒரு முறை மூதாட்டியைப் பார்த்தால் அவளை நினைவில் வைக்கவும் என்னால் முடியும்", என்று சொன்னான் சோகமாக.
அவன் சொல்லி வாயை முடுவதற்குள் அவனின் ஆசை நிறைவேறியது. கண்ணைத் திறந்த அவனால் பார்க்க முடிந்தது. மகிழ்ச்சியில் திளைத்தான். ஒரு பள்ளியில் சேர்ந்தான். தன் செலவுகளைச் சமாளிக்க ஒரு கடையில் வேலையும் செய்தான். அதே வேளையில் நெருப்பில் சிதிலமடைந்திருந்த வீட்டையும் சீராக்கினான்.

"நெருப்பும் தாங்க முடியாத நெருப்பின் வெப்பமும் தான் அவனுடைய கண்களைத் திறந்திருக்க வேண்டும்", என்றனர் கிராமத்தினர்.

லான் துவா மற்றும் ஸ்வா ஜோவ் இதையெல்லாம் நம்பவில்லை. கோவ் சர்ரிடமே போய் கேட்டார்கள். கோவ் சர் சாதக் கிண்ணத்தைப் பற்றி சொன்னான். தம்முடன் அக்கிண்ணத்தைப் பகிர்ந்து கொள்ளும் படி இருவரும் வற்புறுத்தினர். கோவ் சர் மகிழ்ச்சியுடன் சம்மதித்தான். மூதாட்டி சொன்ன அதே அறிவுரையை அவர்களுக்குச் சொன்னான். "உங்கள் ஆசை தான் என்ன?", கோவ் சர் கேட்டான்.

"ஒரு பெரிய வீடு, எப்போதும் நிறைய உணவு", என்றான் லாவ் துவா.

"பள்ளியில் எதுவுமே படிக்காமல் நிறைய மதிப்பெண்கள் கிடைத்தால் நல்லது", என்றான் ஸ்வா ஜோவ்.

அவர்கள் ஆசைப் பட்ட மாதிரியே ஒரு பெரிய புது வீடு தோன்றியது. அதுவும் மூதாட்டியின் எரிந்திருந்த வீட்டுக்கு எதிரிலேயே. அதற்குள் இருந்த சாப்பாட்டு மேசையிலும் சமையலறையிலும், கிடங்கிலும் ஏராளமான உணவு இருந்தது. லான் துவா மற்றும் ஸ்வா ஜோவ் இருவரும் ஆளுக்கு ஒரு பேரிக்காயை எடுத்துக் கடித்துத் தின்றார்கள். மிகவும் சிரமமானதும் கடினமானதுமான பெருக்கல் மற்றும் வகுத்தல் கணக்குகளையும் அவர்களால் போட முடிந்தது. "இது, இது தான் வேண்டும் எங்களுக்கு. பள்ளிக்குப் போக வேண்டாம். வேலைக்கும் போக வேண்டாம். பசியில் வாடவும் வேண்டாம், எப்போதுமே!", என்றனர். லான் துவா மற்றும் ஸ்வா ஜோவ் நாட்கணக்கில் உற்சாகமாக உண்டு, விளையாடி சிரித்துக் களித்து சோம்பி உட்கார்ந்தனர்.

கோவ் சர்ரும் மகிழ்ச்சியாக இருந்தான். அவனுக்கு மிகவும் பிடித்தது கற்றல். அதைத் தான் அவன் மகிழ்ச்சியுடன் செய்தான். மூன்று வருடங்கள் மின்னலென ஓடி மறைந்தன. மூவரும் பதிநான்கு வயதாகி விட்டிருந்தனர். இரண்டாவது முறையாக மந்திரக் கிண்ணத்தின் சக்தியைப் பயன்படுத்தும் நேரம் வந்தது. கோவ் சர், "உங்கள் ஆசை என்ன?", என்று கேட்டான்.
"ஆற்றங்கரையோரம் எனக்கென்று ஒரு பெரிய வீடும் பெரிய பெட்டி நிறைய தங்கமும்", என்று லாவ் துவா பதிலளித்தான். சாதக் கிண்ணம் அப்படியே அளித்தது.

"எனக்கும் மலை மீது ஒரு பெரிய வீடும் இரண்டு பெட்டி நிறைய தங்கமும்", என்றான் ஸ்வா ஜோவ். இதையெல்லாம் அப்படியே சாதக்கிண்ணம் அளித்தது. "எனக்கு அடுத்த மூன்று வருடங்களுக்குப் போதுமான ஏராளமான நூல்களுடன் ஒரு பெரிய நூலகம் வேண்டும்", என்று சொன்னான் கோவ் சர் சிரித்தபடியே. இதையும் சாதக்கிண்ணம் அளித்தது.

(மீதி அடுத்த இதழில்)

(‘மீன்குளம்’ மின்னூலிலிருந்து)

To buy the EBook, Please click here

About The Author