மனித இயல்பு – ஓர் ஆராய்ச்சி

"உன் மனதைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருத்தல் அவசியம்" என்று பலர் என்னிடம் எத்தனையோ முறை சொல்லியிருக்கின்றார்கள். ஏன்மனிதனாகப் பிறந்த நமக்கு மனக்கட்டுப்பாடு ரொம்பவும் அவசியமாக இருக்கின்றது என்பதைப் பற்றி நினைத்திருக்கிறீர்களா?

ஒரு மனிதனிடம் "உனக்குப் பிடித்ததையெல்லாம் நீ செய்து கொள்ளலாம்" என்று சொல்லிவிட்டால், அனைத்து அறநெறிகளையும் தூக்கிக் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு மீண்டும் குரங்குகளின் கலாசாரத்திற்கே சென்று விடுவான் என்பதுதான் உண்மை! அப்படிப்பட்ட மனிதனின் உள்மனதில் என்னதான் இருக்கின்றது? அவன் ஆசைகள் என்ன? மனித நேயத்தைப் பற்றியும் மனித இயல்புகளைப் பற்றியும் ஆராய்ச்சிகள் நடந்த வண்ணம் உள்ளன. அப்படிப்பட்ட ஒரு ஆராய்ச்சியின் கண்டுபிடிப்புகள்தான் பின் வருபவை.

கவர்ச்சி இல்லையேல் பெண்ணில்லை!
———————————-
பெரும்பாலான ஆண்களுக்குக் கவர்ச்சிக் கன்னிகளைக் கண்டால் ஒரு தனி ஈடுபாடு. வேடிக்கை என்னவென்றால் பெரும்பாலான பெண்களும் அப்படி இருப்பதையே அதிகம் விரும்புகின்றார்களாம். இளமையாக இருத்தல் அவசியம். சிற்றிடை, விரிந்த மார்பு, நீலநிறக் கண்கள் என்று பட்டியல் நீண்டு கொண்டே போகின்றது. பெரிய மார்பகங்கள் இருந்தால் ஏன் அனைவருக்கும் பிடிக்க வேண்டும் என்ற தலைப்பிலேயே எத்தனையோ ஆராய்ச்சியாளார்கள் இரவும் பகலுமாக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்களாம். கொடுமை! (நானும் ஆராய்ச்சியாளன்தான் – ஆராய்ச்சி செய்ய எனக்கு வேறு நிறைய தலைப்புகள் உள்ளதைய்யா.)

ஒருத்தனுக்கு ஒருத்தி? அப்படி என்றால்?
————————————
சரித்திரத்தில் தேடினாலும் சரி, நம்மை நாமே கேட்டுக் கொண்டாலும் சரி – ஒரு மனிதன் ஒன்றிற்கும் மேற்பட்ட பெண்களால் ஈர்க்கப்படுகிறான் என்பது உண்மையே. அதே போலத்தான் ஒரு பெண்ணையும் நிறைய ஆண்கள் கவர்கிறார்கள்.

நிறைய திருமணங்கள் செய்துகொள்வதால் யாருக்குப் பலன்? ஆண்கள்? பெண்கள்?
———————————————————————
பதில் – பெண்களே. பெண்களைப் பல கல்யாணங்கள் செய்து கொள்ள அனுமதித்தால், அவர்களுக்கு ஒரே ஒரு ஏழையைக் கட்டிக்கொண்டு அழ வேண்டும் என்ற தலையெழுத்து இல்லை – நான் சொல்லவில்லை, ஆராய்ச்சி! ஆனால், ஆண்கள் பல பெண்களைக் கல்யாணம் செய்து கொள்ள ஆரம்பித்தால், பாதி ஆண்களுக்குக் கல்யாணம் செய்து கொள்ளப் பெண்கள் மிஞ்சமாட்டார்களாம். ஹா! அப்பொழுது என்னதான் தீர்வோ?

கூலிப்படையினரில் அனேகப்பட்டோர் முஸ்லிம்கள்தானாம். அன்புச் சகோதரர்கள் கோபம் கொள்ள வேண்டாம். ஆராய்ச்சி என்ன சொல்கிறதென்றால், முஸ்லிம் ஆண்கள் நிறையக் கல்யாணங்கள் செய்து கொள்வதால், சில ஆண்களுக்குப் பெண்கள் எஞ்சி இருப்பதில்லை. இதனால், இளம் பருவத்தினர் இடையே போட்டியும், பொறாமையும், வன்முறையும் வளர்கின்றனவாம். தற்கொலைப் படையில் கல்யாணம் ஆனவர்களைக் காண்பது அரிது, மிக அரிது… அத்தனைக்கும் அடிப்படை கலவிதானா?

விவாகரத்து வேண்டாமா?
———————
நம் சமூகத்தில் ஒரு ஆணுடைய மதிப்பு அவன் சொத்துக்கணக்கில்தான் தெரிகின்றது. ஒரு பெண்ணுடைய மதிப்பு, அவள் அழகில் (கவர்ச்சியில் என்று படிக்கவும்!). ஆண் குழந்த பெற்ற தாய்மார்கள் தங்கள் கணவனைப் பிரிய யோசிப்பதற்குக் காரணம் தந்தையின் சொத்து தன் குழந்தைக்கு வராமல் போய்விடுமே என்பதுதானாம். சொத்து இருந்தால்தான் தன் மகனைப் பிற்காலத்தில் சமூகம் மதிக்கும் என்ற எண்ணமாம். பெண்ணாக இருந்தால் அந்தக் கவலை இல்லை – அழகொன்றுதான் பிரதானம். அதனால் பெண் குழந்தை பெற்ற தாய் தன் கணவனுக்கு ‘குட்-பை’ சொல்லிவிடுகிறாளாம். நம் சமூகத்தில் தலைகீழாக இருப்பதாகத்தான் தோன்றுகிறது!

அழகான மக்கள் பெற்றெடுப்பது பெண் குழந்தைகளைத்தான்.
————————————————–
ஆகா? அப்படியா? நான் ஒப்புக்கொள்ள மாட்டேன்! கணக்கெடுப்பில் கண்டுபிடிக்கப்பட்ட உண்மையாம். அமெரிக்காவில் (அங்கு தான் இது போன்ற ஆராய்ச்சி எல்லாம் நடக்கும் போல!) இந்தக் கண்டுபிடிப்பை நியாயப்படுத்தவும் முயற்சி செய்திருக்கிறார்கள். இதோ அவர்களது ‘தியரி’.

‘ட்ரிவர்ஸ்-வில்லியர்ட்’ தியரியின்படி பெற்றோர்களிடம் உள்ள குணங்களைத் தம் மக்களுக்கு உதவும் விதத்தில் அவர்கள் தாரை வார்ப்பார்கள். அதாவது, பெற்றோரிடம் அதிகமாக செல்வம் இருந்தால், அவர்களுக்குப் பிறக்கப் போகும் குழந்தைக்கு அந்த செல்வத்தால் மதிப்பு வர வேண்டும். அதனால், ஆண் குழந்தைகள் பிறந்து விடுமாம். இதே போல, பெற்றோர்கள் அழகாக இருப்பின், அந்த அழகை ஒரு பெண் குழந்தையிடம்தான் தருவார்களாம். பையன் அழகை வைத்துக் கொண்டு என்ன செய்யப்போகிறான் என்ற நினைப்பு!

என் தந்தையிடம் செல்வமில்லை. நான் ஒரு ஆண்பிள்ளை என்பதால், பெற்றோர் அவர் அழகையும் தர மறுத்துவிட்டார்கள். என் போன்றவர் என்ன செய்ய வேண்டுமாம்! ஆராய்ச்சி அதைச் சொல்லவில்லை.

மூளை வேலை செய்வது இளம்பருவத்திலே
————————————-
குற்றவாளிகளாகட்டும்.. அறிவுஜீவிகளாகட்டும் – பின்லேடன் ஆகட்டும், அப்துல் கலாம் ஆகட்டும், மனிதர்களின் மூளை கொழுந்துவிட்டு எரிவது இளங்காளைப் பருவத்தில்தானாம். இருபது முப்பது வயதுகளில், மூளையின் செயல்பாடு குறைய ஆரம்பித்து, மெல்ல மெல்ல சுத்தமாகப் படுத்துவிடுமாம். ஒரு விதத்தில், இதுவும் துணை தேடும் போட்டியிலேதான் கொண்டுபோய் விடுகின்றது. பெண்களை "இம்ப்ரெஸ்" செய்ய வேண்டுமே! இளம் பருவத்தில், கடும் போட்டி நிலவ, மனிதனின் எண்ணங்கள் ராக்கெட் வேகத்தில் பறக்கின்றன. வயதாகி, ஒரு குழந்தை பிறந்து விட்டால் போதும், மனிதனுக்கு "அப்பாடா, உட்காரலாம்" என்று தோன்றிவிடுகின்றது. ஏனென்று அவனுக்கே புரியவில்லை.

நாற்பது வயதில் நாய் குணமா? அப்படியா?
————————————-

பாரத விலாஸ் திரைப்படத்தில் கே.ஆர். விஜயா பாடுவது இன்னும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இந்த ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டது என்னவென்றால், சிவாஜி கணேசனுக்கு "நாய் குணம்" வந்தது அவருக்கு நாற்பது வயது ஆனதால் அன்று… அவருடைய மனைவிக்கு நாற்பது வயது ஆனதால்தானாம். அடேங்கப்பா! ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் காரணங்கள் எல்லாமும் சுற்றிச் சுற்றி இரே இடத்தில்தான் வந்து முடிகின்றன – கலவி.

மனைவியருக்கு கலவியில் ஈடுபாடு குறைந்தால், கணவன் சொங்கிப் போய் விடுகிறானாம். சொல்லப்போனால், ஒரு நாற்பது வயது மனிதன் இருபது வயதுப் பெண்ணை மணந்தால், இந்தப் பிரச்சினை வராதாம். இன்னும் குறிப்பாக, இருபது வயது ஆண் நாற்பது வயதுப் பெண்ணை மணந்தால், "இருபது வயதிலும் நாய்குணம்" தான்!

கள்ளத் தொடர்பு கொள்வதற்காக எதை வேண்டுமானாலும் ‘ரிஸ்க்’ செய்வார்கள்.
——————————————————————-
இது ஆண்களுக்கு மட்டுமே பொருந்தும். எனக்கு உடனடியாக ஞாபகம் வருவது பில் கிளிண்டனும், மோனிகாவும்தான் (மன்னிக்கவும், அவர் பெயரின் இரண்டாம் பாதி – கொஞ்சம் கஷ்டம்!) எத்தனையோ பெரிய மனிதர்கள் வாழ்வில் ஒரே பெண்ணை மணந்து கொண்டிருக்கலாம். ஆனால், அவர்கள் அனைவருக்கும் எத்தனை மாதர்களுடன் உறவு இருந்ததோ? நம் நேருவைப் பற்றிக்கூட நிறைய கதைகள் படித்துள்ளேன்.

மனிதர்கள் புகழ் அடைய முயற்சிப்பதே நிறையப் பெண்களைக் கவர வேண்டும் என்ற எண்ணத்தோடுதான் என்று "பெட்ஸிக்" சொல்கிறார். அப்படி இருக்க, இன்னும் ஒரு பெண் கிடைக்கிறாள் என்றால் எவ்வளவு ரிஸ்க் எடுத்தால்தான் என்ன? ஹெஹ்ஹே! இது நல்லா இருக்குங்கோ. மற்றவருக்கும் பில் கிளிண்டனுக்கும் ஒரே வித்தியாசந்தான் – எல்லோரும் மாட்டிக்கொள்ளவில்லை. பாவம், மனிதர் மாட்டிக்கொண்டுவிட்டார்.

கடைசியாக நினைவு கொள்வதற்கு ஒரு பாட்டு – குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன். கொம்பேறித் தாவும் குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்.

About The Author

2 Comments

  1. C.PREMALATHA

    நரேனுக்கு திருமணம் ஆகிவிட்டதா? ஆகிவிட்டால் திருமதி நரேன் அவர்களே நீங்கள் உஷார். ஆராய்ச்சி என்ற பெயரில் ஏதேதோ பண்ணுகிறார். திருமணம் ஆகவில்லையென்றால் இளம் பெண்கள் உஷார். பையன் போற போக்கு சரியில்லை.

Comments are closed.