மறக்க முடியாத கிறிஸ்துமஸ் பரிசு

மூலம்: பிர்ல் பக்

ராபர்ட்டுக்கு பதினைந்து வயது. பெற்றோருடன் பண்ணையில் வசித்து வந்தான்.

அது கிறிஸ்துமஸ் சமயம். ஒரு நாள் காலை தாயும் தந்தையும் பேசுவதைக் கேட்டான் ராபர்ட்.

"மேரி, ராப் நன்கு தூங்குவதைப் பார்த்தால் எழுப்ப மனம் வரவில்லை. அவனுக்கு நல்ல தூக்கம் தேவை. நானே வேலைகளை எல்லாம் பார்த்துக் கொள்ள முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!" தந்தை

"ஆதாம், உங்களால் தனியே எல்லாம் செய்வது கடினம். மேலும் அவன் சிறுவனில்லை. அவனும் பங்கெடுக்க வேண்டும்" என தாயின் குரல் கேட்டது.

"ஆம்; ஆனால் அவனை எழுப்ப மனம் தான் இல்லை." என்றார் தந்தை.

இதைக் கேட்ட ராபிற்கு தந்தையின் அன்பு புரிந்தது. இனி காலையில் சோம்பல் கூடாது என நினைத்துக் கொண்டான். அந்த வருட கிறிஸ்துமஸுக்குத் தன் தந்தைக்கு மிக உயரிய பரிசு ஏதேனும் வாங்க வேண்டும் என எண்ணினான். ஆனால் அவனுக்குப் பரிசு வாங்க பணம் கிட்டவே இல்லை.

கிறிஸ்துமஸ் இரவும் வந்தது. தந்தைக்குப் பரிசு வாங்கப் பணம் இல்லாததை எண்ணி வருந்திக் கொண்டிருந்த போது ஒரு எண்ணம் உதித்தது. தந்தைக்குத் தான் விரும்பியபடியே உயர்ந்த பரிசு ஒன்று கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை பிறந்தது.

ஏசுநாதர் பிறந்தது மாட்டுத் தொழுவத்தில்தான். அதனால் அவர் பிறந்த நாளன்று தம் வீட்டுத் தொழுவத்திலேயே தந்தைக்கு ஏற்ற பரிசு கொடுக்க முடிவு செய்தான்

கிறிஸ்துமஸ் அன்று அதிகாலை மூன்று மணிக்கு சப்தமின்றி எழுந்து மெதுவாக இறங்கி வந்தான். மாடுகளும் அவனை ஆச்சரியமாக பார்த்தன. அவன் இதுவரை தனியாக பால் கறந்ததில்லை. ஆனால் சுலபமாக இருந்தது. தந்தை பால் கறக்க காலி பாத்திரம் எடுக்க வரும்போது, ஏற்கெனவே பால் கறந்திருப்பதைப் பார்த்து ஆச்சரியப்படப் போவதை கற்பனை செய்து கொண்டே நுரை ததும்ப பால் கறந்தான்.

அச்சமயம் அது ஒரு வேலையாக அவனுக்குத் தெரியவில்லை. தந்தைக்குக் கொடுக்கும் பரிசாகத்தான் நினைத்தான். பால் கறந்தபின் அறையை மூடிவிட்டு வந்து படுத்துக் கொண்டான். தூங்குவது போல் பாசாங்கு செய்தான். தந்தை அழைத்தது கேட்டது. "ராப், எழுந்திரு. இன்று கிறிஸ்துமஸ்"

"சரி" என்று சொல்லிவிட்டுப் படுத்திருந்தான். இன்னும் சில நொடிகளில் தந்தைக்குத் தான் செய்தது தெரிய வரும். அவனது இதயம் வேகமாக நடனமாடியது. தந்தையின் காலடியோசை கேட்டது. கதவு திறக்கும் வரை அசையாது படுத்திருந்தான்.

"ராப்" என தந்தை அழைத்தார்.

"எனக்குத் தெரியாது என நினைத்தாயா?" எனப் புன்சிரிப்புடன் கேட்டபடி, அவனது படுக்கையருகே வந்தார்.

அவனும் "இது என் கிறிஸ்துமஸ் பரிசு" என்றதும் அவனை அன்புடன் கட்டித் தழுவினார்.

"மகனே எனக்கு மிக்க மகிழ்ச்சி. இது வரை இது போன்ற பரிசு எனக்கு யாரும் தந்ததில்லை. நான் உயிரோடு இருக்கும் வரை இந்த நல்ல கிறிஸ்துமஸ் பரிசை எப்பொழுதும் நினைத்துக் கொண்டிருப்பேன்" என்றார்.

ராப் மிகுந்த மகிழ்ச்சியடைந்தான். அந்த கிறிஸ்துமஸ் மிக இனிமையாகக் கழிந்தது.

*****

About The Author