மறைந்தும் வாழும் தாய்

சமீபத்தில் என் தாயார் மரணமடைந்துவிட்டார்கள். அவசரமாக ஊருக்குச் சென்று இறுதிச் சடங்கை முடித்துக்கொண்டு, கொழும்பு விமானநிலையம் வழியாக நான் வேலைபார்க்கும் தேசத்திற்குப் பயணம் செய்ய வேண்டும். சுமார் மூன்று மணி நேரம் விமானத்திற்காக காத்திருந்தேன். என் மனம் எதிலும் லயிக்க மறுத்தது. என்னில் ஒரு பகுதி இழந்ததாக ஒரு விரக்தி உணர்வு வாட்டி எடுத்தது. மறைந்த என் தாயின் நினைவுகள், அலை அலையாய்… "நீதான் ஒருவருடத்திற்கும் மேலாக, அதிக நாட்கள் என்னிடம் பால் குடித்து வளர்ந்த பிள்ளை" படிக்கும் நாட்களில் நான் ஏதாவது சாதனை புரிந்தால், அம்மா என்னிடம் இந்த வார்த்தைகளைச் சொல்லிப் பெருமைபட்டுக் கொள்வார்கள்.

"அந்த நாட்களில் உனக்கு வயிற்றுப் பிரச்சினை, ஜலதோசம் எளிதில் தாக்கிவிடும். அதற்காக நானே மருந்து சாப்பிட்டுக்கொள்வேன். "எனக்குப் பிடித்த நல்ல உணவுகளை, உன் உடல் நலம் கருதி ஒறுத்தல் செய்து, உனக்கு குணம் தரும் சாப்பாடு வகைகளை மட்டும் சேர்த்துக் கொள்வேன்" அம்மா சொல்வார்கள். பள்ளி, கல்லூரி நாட்களில், அம்மா தன் கையால் அரைத்துத் தந்த கைமருந்துகள்தான் என்னை பலவானாக, ஆரோக்கியமுள்ளவனாக உருவாக்கியது. என்னை எப்படியெல்லாம் கவனமாக பார்த்துக்கொண்டார்கள்! பெருமூச்சுவிட்டபடி, மிகவும் நவீனமயமாக்கப்பட்டுள்ள கொழும்பு சர்வ தேச விமான நிலையத்தை நோட்டமிட்டேன். நேர்த்தியாக, கம்பீரமாகக் காட்சியளித்தது. மின்விளக்குகளால் ஊட்டம்பெற்று எங்கும் பளபளப்பு. என் தாயின் முகம் அவ்வப்போது அதிலே நிழலாடுவதுபோல் பிரம்மை.

தற்செயலாக ஒரு நண்பர் எதிர்பட்டார். குசலம் விசாரித்து, என் துக்கத்தையும் பகிர்ந்து கொண்டார். அங்கிருந்த ரெஸ்டாரண்டிற்கு என்னைச் சாப்பிட அழைத்தார். எனக்கோ மனங்கொள்ளவில்லை என்றாலும் அவருடன் சென்றேன். எதிரெதிர் இருக்கைகளில் அமர்ந்து, உணவருந்தத் தயாரானோம். பசுமையான தென்னைமரங்கள் நிறைந்த கொழும்புப் பட்டணத்தை அகன்ற கண்ணாடி வழியாகப் பார்த்து ரசிக்கும் வேளையில், உணவும் பறிமாறப்பட்டது. நண்பரை நோக்கினேன். அவரோ ஒரு துணிப்பையை அவிழ்த்து, உணவுப் பொருட்களை எடுத்துக் கொண்டிருந்தார்.

"ஐந்து நட்சத்திர உணவு இங்கு தருகிறார்களே, நீங்களோ வீட்டு உணவை…?" நான் கேட்டு முடிக்குமுன்,
"உண்மைதான். எனக்கு இந்த ஐந்து நட்சத்திர உணவு ரொம்பப் பிடிக்கும். ஆனால் எனக்கு கொலஸ்ட்ரால், சக்கரை வியாதியெல்லாம் உண்டு. எனவே பெரும்பாலும் எண்ணைப் பலகாரங்கள், அதிக கலோரி உள்ள உணவைத் தவிர்த்து வருகிறேன்" நண்பர் தொடர்ந்தார். "என் உயிரைப் பற்றிக் கவலை கொள்ளவில்லை. நான் எதையும் சாப்பிட இயலும். ஆனால், என்னைச் சுற்றி நான்கு உயிர்கள். என் மனைவி, மூன்று பிள்ளைகள், அவர்களுக்காக நான் நிறைய வருடங்கள் வாழவேண்டுமே. அதற்காகத்தான் இந்த ஒறுத்தல் செய்கிறேன்" என்று முடித்தார். நான் வியப்பில் ஆழ்ந்தேன். மரித்த என் தாய் திரும்பமாட்டாள். ஆனால் அவள் விட்டுச் சென்ற ஒறுத்தல் வாழ்க்கை, தியாக உணர்வு இந்தப் பூமியில் உலவத்தான் செய்கிறது. இந்த நண்பரிடம் வாழ்கிறதே! என் தாயின் உண்ர்வுகள் உண்மையானவை. உயிர் உள்ளவை. கண்ணீர் மல்க, உணவை மெல்லத் தொடங்கினேன்.

மேலும் பல…..

About The Author

2 Comments

  1. Thanmozhi

    A beautiful story which touched my heart. I am able to relate to the story cos being a mother I have been like this too. It is so natural for a mother to sacrifice certain things in life for the sake of her children. Hopefully the children will grow up to appreciate what the mother has done for them. Three cheers for the writer.

  2. rajeswari

    மெஇசிலிர்க்க வைதது..எனெ என்ட்ரல் எனக்கும் ஒரு தையை இழன்ட வெதனிஅ தெரியும்..

Comments are closed.