முதுமை (2)

தனிமையென்று தனித்துவொரு
பொழுதுமில்லை
தனிமைதானே நானென்று
ஆனநிலை

எனைச்சுற்றிக் கேட்கின்ற
சப்தங்கள்
அத்தனையும் இன்றெனக்கு
நிசப்தங்கள்

நினைவுகளில் கனவுகளில்
நின்றாடும்
அந்நாளின் ஓசைகளே
செவிப்பறையில்

வந்துமண்ணில் விழுந்தபோது
அழுதநாளும்
எனக்கேநான் சொல்லாத
பிரிவுநாளும்

ஒன்றென்றே ஆவதையும்
கண்டீரோ
இரண்டுக்கும் ஞாபகத்தில்
இடமுண்டோ

சாவினின்று கையணைத்து
எனைக்காத்த
முன்பறியா புதியவனின்
அன்புமுகம்

ஒருமுறையே கண்கலந்த
தேவதையின்
ஒருநாளும் மறவாத
அழகுமுகம்

ஓய்வென்று ஒதுக்கிவைத்த
தனிமைநாளில்
உயிரேந்தி எனைக்கண்ட
ஈரமுகம்

ஒவ்வொன்றாய் ஒவ்வொன்றாய்
இவைபோல
அத்தனையும் காணவேண்டும்
இந்நாளில்

இன்றுகூட இறுக்கமாக
நான்பற்றும்
என்னுயிரின் பொருளென்று
எனக்குண்டு

என்னைவிட்டு முன்போன
என்னவளின்
இடுப்பழுக்குச் சேலைநுனி
தலைப்பு அது

முழுமொத்த விழிவிரித்து
நான்காண
முற்றாக என்பேத்தி
தெரிவதில்லை

விழிமொத்தம் நான்சுருக்கிக்
கூர்ந்தாலென்
வாழ்க்கைக்கு அர்த்தமெனச்
சிரிக்கின்றாள்

நோக்கித்தான் நிற்கின்றேன்
மரணத்தை
நெஞ்சிலின்று உணர்கின்றேன்
இன்பத்தை

நோக்கியநாள் வந்தாலது
சுகந்தானா
நெஞ்சேது நானேது
அறிவதற்கு

* (டிசம்பர் 2002)

‘பச்சை மிளகாய் இளவரசி’ மின்னூலிலிருந்து
To buy this EBook, Please click here

About The Author